பாதுகாப்பு படைகளின் பிரதானி கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை | தினகரன்

பாதுகாப்பு படைகளின் பிரதானி கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கடும் நிபந்தனைகளுடன் நேற்றுபிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜரான சந்தர்ப்பத்திலேயே நீதவான் அவரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்தார்.

பிணையில் விடுவிக்கும்போது இவ்வழக்குடன் தொடர்புபட்ட எந்தவொரு சாட்சியாளரையும் அச்சுறுத்தக் கூடாதென நீதவான் விஜேகுணரட்ணவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பிணை நிபந்தனைகள் மீறப்பட்டால் பிணை மீளப்பெறப்படுமென்றும் நீதவான் அவருக்கு அறிவுறுத்தினார்.

2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபருடன் விஜேகுணரட்ணவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து விஜேகுணரட்ண கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ் வழக்குடன் தொடர்புபட்ட கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு உதவி செய்தார் என்பதே விஜேகுணரட்ண மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

 


Add new comment

Or log in with...