ஜனாதிபதியின் மூன்றரை வருட கால பொறுமை | தினகரன்

ஜனாதிபதியின் மூன்றரை வருட கால பொறுமை

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இம்மாநாடு, இந்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் நடைபெற்றிருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 26ம் திகதியும், அதனைத் தொடர்ந்தும் அரசியல் யாப்புக்கு உட்பட்ட வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முரணான வகையில் சபாநாயகர் செயற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. அதன் விளைவாக நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில்தான் சு.கவின் இந்த விசேட மகாநாடு நடைபெற்று இருக்கின்றது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கடந்த மூன்றரை வருட கால நல்லாட்சி அரசின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவது போன்று அமைந்திருந்தது.

அதேநேரம் நல்லாட்சியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்தவர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் நாட்டு மக்களையும் ஜனாதிபதியின் இந்த உரை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாக இருந்த ஜனாதிபதியே இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றார் என்றால் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம் அடித்தளமாயிருந்து உருவாக்கிய நல்லாட்சி மீது அதனை உருவாக்கியவருக்கே மூன்றரை வருட காலப் பகுதியில் இவ்வாறு வெறுப்பு ஏற்பட்டு இருக்கின்றதென்றால் அவ்வாட்சியின் பிரதான பங்காளரான ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கும் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் எவ்வளவு தூரம் நடந்து கொண்டுள்ளார் என்பது புலனாகின்றது.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது “ரணில் விக்கிரமசிங்வுடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தக் குரோதமும் கிடையாது. கட்சியுடனும் நிறத்துடனும் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டை ஆளுவதற்கும், நாட்டின் நோக்கத்துக்கும் அவர் பொருத்தமற்றவர். நாடு, கலாசாரம், மக்களின் பாரம்பரியம், பௌத்தம் உள்ளிட்ட எல்லா மதங்களின் சிந்தனைகளுக்கும் அவர் பொருத்தமில்லாதவர். நாட்டையும் மக்களையும் மாத்திரமல்லாமல் என்னையும் கூட அவர் சீரழித்து விட்டார்” என்று தெரிவித்தார்.

'அதன் காரணத்தினால் பாராளுமன்றத்திலுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ரணிலை மீண்டும் பிரதமராக்கும்படி வேண்டினாலும் அதனை ஒருபோதும் செய்ய மாட்டேன்' எனவும் பகிரங்கமாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த உரையானது நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவர் கடந்த மூன்றரை வருட காலம் எவ்வளவு தூரம் பொறுமை காத்துள்ளார் என்பது விளங்குகின்றது.

அதேநேரம் ஏற்கனவே ஒருதடவை நாட்டு மக்களுக்காற்றிய உரையில் ஜனாதிபதி 'சில சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க தமது அதிகாரங்களைக்கூட கையிலெடுத்து செயற்பட்டுள்ளார். அப்போதும் நான் பொறுமை காத்துள்ளேன்' என்று குறிப்பிட்டிருந்ததும் இங்கே கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அதேநேரம் இம்மாநாட்டு உரையின் ஊடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, அதன் தோற்றப்பாடு, காரணகர்த்தா என்பன தொடர்பாகவும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார். இது மக்கள் மத்தியில் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ள உரையாக அமைந்துள்ளது.

அதேநேரம் இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு அடுத்துவரும் ஒருவார காலப் பகுதிக்குள் தீர்வைப் பெற்றுத் தருவேன் எனவும் அவர் கூறியுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அந்த நலன்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதை விடுத்து பதவிக்கு வருவதற்கு மாத்திரம் மக்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பதவிக்கு வந்த பின்னர் மக்களையே பாதிக்கும் தீர்மானங்களை எடுப்பதும், மக்களை மறந்து செயற்படுவதும் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். நாட்டினதும் மக்களினதும் நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும் .அதுவே மக்களது விருப்பம். இதைவிடுத்து தம் இஷ்டப்படி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதையோ, வெளிநாடுகளை திருப்திப்படுத்துவதற்காக வேலைத் திடடங்களை முன்னெடுப்பதையோ மக்கள் அங்கீகரிக்கப் போவதில்லை.

ஆகவே கடந்த மூன்றரை வருட காலத்தில் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் முறையில் எவ்வளவு தூரம் செயற்பட்டுள்ளார் என்பதற்கு ஜனாதிபதியின் உரையே நல்ல சாட்சியமாக அமைந்திருக்கிறது. ஆனால் மக்கள் சேவையில் ஈடுபடும் எவராயிருந்தாலும் அவர்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே அவர்களது பொறுப்பும் கடமையுமாகும்.


Add new comment

Or log in with...