உலக கிண்ண ஹொக்கி: ஆர்ஜன்டினா அணி 2-வது வெற்றி | தினகரன்

உலக கிண்ண ஹொக்கி: ஆர்ஜன்டினா அணி 2-வது வெற்றி

உலக கிண்ண ஹொக்கி போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டினா அணி 3-−0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கிண்ண ஹொக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

இதில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் காப்பாளர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உட்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-−0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-−1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல் காப்பாளர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.

முடிவில் இந்த ஆட்டம் 1-−1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான ஆர்ஜென்டின 3-−0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. ஆர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது.


Add new comment

Or log in with...