எயிட்ஸ் விழிப்புணர்வு மூலம் எதிர்கால சந்ததியை காப்போம்! | தினகரன்

எயிட்ஸ் விழிப்புணர்வு மூலம் எதிர்கால சந்ததியை காப்போம்!

மக்கள் அனைவருமே ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றித் தெரிந்திருந்தல் அவசியம். எச்.ஐ.வி வைரஸ் கிருமியினால் இக்கொடிய நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இந்நோய்க்கு உகந்த சிகிச்சை அளிப்பது மருத்துவத் துறையினருக்கு பெரும் சவாலாக விளங்குகின்றது.

1981ம்ஆண்டு அமெரிக்காவில் எய்ட்ஸ் இனம்காணப்பட்ட வேளையில்தான், ஐரோப்பியாவிலும் இந்நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது. எவ்வாறாயினும் எய்ட்ஸ் முதன்முதலில் உகண்டா, எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில்தான் தோன்றியது. விசேடமாக நகர்ப்புறங்களில் இயங்கும் விபசார விடுதிகளுக்குச் சென்றவர்கள் எச்.ஐ.வி. தாக்குதலுக்குள்ளாகினர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றின் பிரகாரம் 1981ம்ஆண்டு முதல் சுமார் அறுபது மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. கிருமி காவிகளாக உலாவுகின்றனர். இந்த எண்ணிக்கையில் சுமார் இருபது மில்லியன் நோயாளர்கள் மருத்துவ சிகிச்சை பயனளிக்காத நிலையில் இறந்து விட்டனர். எஞ்சியுள்ளோர் தங்களது குருதியில் எச்.ஐ.வி.யை தெரிந்தோ, தெரியாமலோ காவித் திரிகின்றனர்.

இந்நோய்க் கிருமி மனித உடலில் நீர்ப்பீடனத் தன்மையைத் தகர்த்து, கொடிய தொற்றுநோய்களுக்கும் பல்வேறு வகையான நோய்களுக்கும் வழிகோலுகின்றது.

எய்ட்ஸ் நோய் உடலில் வெளித்தெரிவதற்கு சில ஆண்டு காலம் செல்லலாம். இத்தகையவர்கள் சாதாரணமாக சுகதேகிகளாகக் காணப்படலாம். ஆயினும் இக்காலப்பகுதியில் அவர்கள் உடலுறவின் போது மற்றையோருக்கு நோய்க் கிருமியைப் பரப்புவர்.இந்நோயினால் பீடிக்கப்பட்டவர் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறார். இந்நோய் ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல; சமுதாயப் பிரச்சினையுமாகும். அவற்றுள் பொருளாதாரப் பிரச்சினைகளும் அடங்குகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் தெற்கு ஆசியாவில் தான் எய்ட்ஸ் அதிகமாகப் பரவி வருகின்றது. பிரதானமாக தாய்லாந்து நாட்டைக் குறிப்பிடலாம். எய்ட்ஸ் இளைஞர், யுவதிகளின் தலைமுறைக்கு ஒரு சாபக்கேடாக கருதப்படுகின்றது. ஆசியாவில் ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை எய்ட்ஸினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஆனால் இது 2020ம்ஆண்டு அளவில் இரு மடங்காக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கொடிய நோயினால் பீடிக்கப்பட்டவர்களை சமுதாயம் புறக்கணிக்கின்றது.

இலங்கை மக்களாகிய நாமும் எய்ட்ஸ் ஏன் ஏற்படுகின்றது? பரவாமல் தடுக்க என்ன நடைமுறைகளைக் கையாள வேண்டும்? என்பவற்றை கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம்.

எய்ட்ஸ் நான்கு பிரதான வழிகள் மூலம் இன்னொருவருக்கு பரவுகின்றது எனலாம். முதலாவதாக தகாத பாலுறவு, இரண்டாவது நோய்க் கிருமியுடன் கூடிய இரத்தத்தை ஏற்றுதல், மூன்றாவது தொற்றுக்குள்ளான ஊசிகள் மூலம், நான்காவது தொற்றுநோய்க்குட்பட்ட கருவுற்ற பெண் மூலமும் பரப்பப்படுகின்றது.

எச்.ஐ.விக்கு பெருமளவு ஆளாகுபவர்கள் விபசாரிகளும், தன்னினச் சேர்க்கையாளருமாவர். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் இதில் அடங்குகின்றனர்.

இன்றைய இளைஞர் நாளைய தலைவர்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகாமல் தடுப்பதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதொன்றாகும்.

அதாவது எய்ட்ஸ் அணுகாத முறையில் எமது பண்பாட்டினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இந்நோய் பல்கிப் பரவுவதற்கு பாலியல் தொடர்பான அறிவு இல்லாமையும் ஒரு காரணியாகக் கொள்ளலாம். இதற்கு காரணம் நமது நாடு கீழைத்தேச பாரம்பரியங்களைக் கொண்ட நாடாகும். மேற்கு நாடுகளைப் போல் பெற்றோரோ, ஆசிரியர்களோ பாலியல் கல்வி போதிப்பது மிகவும் சிரமமான விடயமாகும்.

தற்போது எய்ட்ஸ் எதிர்ப்புப் பிரசாரத்தை பல தொண்டர் அமைப்புக்களும் நிறுவனங்களும் மேற்கொள்கின்றன. எனவே எய்ட்ஸின் ஆபத்துகளைக் கவனத்தில் கொள்வது உசிதமாகும்.

அருணா தருமலிங்கம்
வந்தாறுமூலை


Add new comment

Or log in with...