கொலையல்ல, தண்டனை! | தினகரன்

கொலையல்ல, தண்டனை!

அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் ஓர் அங்கமான வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ேஜான் ஆலன் சாவ் கொல்லப்பட்டது வியப்பை ஏற்படுத்தவில்லை.

சென்டினல் என்கிற பழங்குடியினர் வாழும் இந்தத் தீவு பாதுகாக்கப்பட்ட தீவாகவும், வெளியுலக மக்களின் நடமாட்டம் தடை செய்யப்பட்ட தீவாகவும் இருந்து வருகிறது. அந்தப் பழங்குடியினரின் அமைதியைக் குலைக்க முற்படுபவர்களை அவர்கள் உயிர்ப்பலி வாங்குவது கொலையாகக் கருதப்படக் கூடாது. தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும்.

வடக்கு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினருக்கு, வெளியுலகத் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவது என்பது மன்னிக்கவே முடியாத குற்றம். அதனால் மதபோதகர் ​ேஜான் ஆலன் சாவை கொன்றதற்கு, சென்டினல் தீவில் உள்ள பழங்குடியினரைத் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வடக்கு சென்டினல் தீவுகளில் நுழைந்து சென்டினல் பழங்குடியினரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற அமெரிக்க மத போதகர் ​ேஜான் ஆலன் சாவ் முயற்சித்தது இது முதன்முறை அல்ல. முதன்முறையாக அவர் நுழைய முற்பட்டபோது அவரை அடித்துத் துன்புறுத்தவோ, பிடித்து வைக்கவோ சென்டினல் ஆதிவாசிகள் முற்படவில்லை. அவரை எச்சரித்து வெளியேற்றி இருக்கிறார்கள். இன்னொரு முறை தங்களது தீவில் நுழைய முற்படக் கூடாது என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டார் சாவ்.

அப்படியிருந்தும்கூட, அடுத்த இரண்டாவது நாளே அந்தத் தீவுக்குள் இரகசியமாக அவர் நுழைய முற்பட்டார் எனும்போது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, அவரே வலியப் போய் பெற்றுக் கொண்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

​ேஜான் ஆலன் சாவ் ஒரு சீனர். சீனாவில் கலாசாரப் புரட்சி நடந்தபோது அவரது தந்தை சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்தார். அங்கே அந்தக் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது.

​ேஜான் ஆலன் சாவ்வின் நாட்குறிப்புகள் அவரது தாயாரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. சாவ்வின் குறிப்புகளில் காணப்படும் செய்திகள் திடுக்கிட வைக்கின்றன. அவர் வடக்கு சென்டினல் தீவை, 'சாத்தானின் கடைசிப் புகலிடம்' என்று குறிப்பிட்டு அந்தப் பழங்குடியினரை மதம் மாற்றி அங்கே மாதா கோயிலை உருவாக்க தான் உறுதி பூண்டிருப்பதாக அந்த குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகின் மிகப் பழைமையான, அழிவை எதிர்கொள்ளும் சில பழங்குடியினரின் இருப்பிடமாக இருந்து வருகிறது அந்தமான் - நிகோபர் தீவுகள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் அந்தமான் - நிகோபர் தீவுகளில் அடங்கிய பல்வேறு தீவுகளில் வாழ்ந்து வந்த பல பழங்குடியினர் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதமாற்றத்திற்கு உட்படாமல் காடுகளில் பழங்குடிகளாகத் தொடர்ந்தவர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர். அதனால் பழங்குடியினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இந்தத் தீவுகளில் வாழும் 'ஜாரவாஸ்' என்கிற ஆதி பழங்குடிகள் பிரிட்டிஷாரின் ஊடுருவலால் அநேகமாக அழிந்து விட்டனர்.

வடக்கு சென்டினல் தீவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட பகுதி. இந்தத் தீவைச் சுற்றிக் கடலில் வளைய வருவதற்குக் கூட அனுமதி தேவை. சென்டினலீஸ் என்பவர்கள் வெளியுலகில் இருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் சமுதாயத்தினர். வெளியுலகினர் யாருக்கும் அவர்களுடைய மொழி தெரியாது, புரியாது. தங்களுடைய தீவில் வெளியுலக மனிதர்கள் நுழையாமல் இன்றுவரை பாதுகாக்கின்றனர். அந்தத் தீவு வழியாக அரசு விமானம் தாழ்வாகப் பறந்தால்கூட அதன் மீது அம்பு எய்வார்கள்.

இவையெல்லாம் மத போதகர் சாவ்வுக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு மட்டுமல்ல, அவரை வடக்கு சென்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற ஐந்து மீனவர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கும் தெரியும். அவர்களுக்குப் பெரும் பணம் கொடுத்து இந்த முயற்சியில் மூன்றாவது முறையாக இறங்கினார் மத போதகர் சாவ்.

மத்திய உள்துறை அமைச்சகம் சில கேள்விகளுக்கு பதில் அளித்தாக வேண்டும். அந்தமான் - நிகோபர் தீவிலுள்ள 29 தீவுகளில் வடக்கு சென்டினல் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட தீவுகளில் பழங்குடியினர் வாழ்கிறார்கள் என்பதும், பழங்குடியினர் சட்டத்தின் அடிப்படையில் எந்தவித சுற்றுலாப் பணியோ, வளர்ச்சிப் பணியோ மேற்கொள்ள முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டினர் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைவதற்கான அனுமதி பெறும் விதிமுறையைத் தளர்த்தியது ஏன்?

பழங்குடியினர் மற்றும் வன சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்றாக வேண்டும் என்கிற விதிமுறை இருந்தும்கூட, பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதி பெறாமல், அவர்களுக்கு தெரியாமல் மத போதகர் சாவ் வடக்கு சென்டினல் தீவில் அத்துமீறி நுழைய முற்பட்டது எப்படி? சாவின் குறிப்புகள் இல்லாமல் போனால் அவரது மரணத்தின் பின்னணி தெரியாமலே போயிருக்கும். மதத்தை பின்பற்றுவதற்கும், மத போதனைக்கும் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அந்நிய நாட்டினரும் மிஷனரிகளும் நேரடியாகவும், பண உதவியாலும், வற்புறுத்தலாலும் ​ேஜான் ஆலன் சாவ் போன்றவர்கள் மூலம் நடத்தும் மத மாற்ற நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்வது? இந்துத்துவா கோஷம் வலுப்பெறாமல் என்ன செய்யும்?

இவ்வாறு தமிழ்நாட்டின் நேற்றைய தினமணி நாளேடு ஆசிரிய தலையங்கம் தீட்டியிருக்கிறது.

இதேவேளை அந்தமானில் உள்ள சென்டினெல் மக்கள், வெளிநபர்களை விரோதத்துடன் அணுகுபவர்கள் என்று அறியப்பட்டவர்கள்.

எனினும், 1970-கள் முதல் சென்டினெல் தீவுக்கு 26 முறை மானுடவியலாளர்கள் சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடக்கு சென்டினெல் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ​ேஜான் ஆலனின் உடலை மீட்கும் விஷயத்தில் அந்தமான் நிகோபார் நிர்வாகத்துக்கு மானுடவியலாளர்கள் உதவிவருகிறார்கள்.

அவர்களில் சிலர் இந்திய மானுடவியல் ஆய்வு மையத்தை ஏ.என்.எஸ்.ஐ) சேர்ந்தவர்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய மானுடவியல் ஆய்வு மையத்தின் தலைவர் சி.ரகுவைத் தொடர்புகொண்ட அந்தமான் நிகோபாரின் டி.ஜி.பி தீபேந்திர பதக், சென்டினெல் மக்களை அணுகும் விஷயத்தில் அவரது ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் பழங்குடியினக் குழுக்களில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சென்டினெல் பழங்குடியினர்.கிரேட் அந்தமானி பழங்குடியினர், ஓங்கே, ஜாரவா, நிகோபாரி பழங்குடியினர், ஷோம்பென் பழங்குடியினர் ஆகியோரும் அந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் மீது சென்டினெல் மக்கள் அம்பெய்த சம்பவங்களும் அம்பெய்யப் போவதாக மிரட்டிய சம்பவங்களும் நடந்தன. அந்தப் பயணங்களின்போது சென்டினெல் மக்களுக்கு இளநீர், wவாழைப்பழங்கள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.

காலப்போக்கில், சென்டினெல் மக்களின் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. 1990 முதல் அவர்கள் தொடர்புகொள்வதற்கு ஏற்றவர்களாக இருந்து வருகிறார்கள். அம்பெய்யும் சம்பவங்கள் குறைந்துவிட்டன.

சென்டினெல் பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதி யிலிருந்து புகை வந்த காட்சி, கடற்கரைக்கு வரும் சென்டினெல் மக்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து சைகை செய்வது, அன்பளிப்புகளை கடற்கரையிலோ அல்லது ஆழமில்லாத நீர்ப்பரப்பிலோ வைத்துவிடுமாறு சைகை செய்வது என்று தாங்கள் பார்த்த பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.

சென்டினெல் மக்கள் விஷயத்தில், மிகுந்த கவனத்துடனான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது அந்தமான் நிர்வாகம். 2005-க்குப் பிறகு அந்தப் பகுதிக்கு அதிகப் பயணங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாததன் காரணமாக சட்டவிரோத வேட்டைக்காரர்களின் தொந்தரவுக்கு சென்டினெல் மக்கள் ஆளாகியுள்ளனர்.

சென்டினெல் மக்களுக்குத் தனி மொழி உண்டு.கடலைச் சார்ந்து வாழ்பவர்கள் சென்டினெல்கள். 56.97 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவைச் சுற்றி இருக்கும் கடலில் வில், அம்புகள், ஈட்டிகளைக் கொண்டு மீன் பிடிக்கிறார்கள். காட்டுப் பன்றிகள், கடல் ஆமைகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் சென்டினெல்கள், வேர்கள், கிழங்குகள், தேனைச் சேகரிக்கிறார்கள்.

துடுப்புகளைக் கொண்டு படகைச் செலுத்துவது சென்டினெல்களுக்குப் பரிச்சயமில்லாத விஷயம். படகில் நின்றுகொண்டு கம்புகளால் கடல் நீரைக் கலக்கி மீன் பிடிப்பதை மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சென்டினெல் தீவுக்குச் செல்லும் குழுவினர், விரைவாகச் சென்று கடற்கரையில் அன்பளிப்புகளை வைத்துவிட்டு உடனடியாகத் திரும்பிவிடுவார்கள்.

தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க வருகிறார்கள் என்று கருதினால் சென்டினெல்கள் ஆவேசமடைந்து விடுவார்கள்.

இந்திய நாட்டின் ஒரு பகுதியில் கற்காலத்தைச் சேர்ந்த சிறிய மக்கள் குழு இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்துவருவது இந்நாட்டுக்கு அதிர்ஷ்டம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 


Add new comment

Or log in with...