பாராளுமன்ற அமர்வு சிறிகொத்த கூட்டமாக மாறியுள்ளது | தினகரன்

பாராளுமன்ற அமர்வு சிறிகொத்த கூட்டமாக மாறியுள்ளது

பாராளுமன்றத்தில் நடைபெறும் சிறிகொத்தவின் கூட்டத்திற்கு சமுகமளிக்கவேண்டிய எத்தகைய தேவையும் தமக்கு கிடையாது என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து சிறிகொத்த கூட்டத்தை நடத்துவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற விசேட செயதியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர்,

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க குறுகிய காலத்துக்குள் அங்கும் இங்கும் கட்சி தாவி உலக சாதனையை நிலைநாட்ட முயற்சிக்கின்றார். எவ்வாறெனினும் தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் எவருடனும் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

சபாநாயகர் பலமிழந்து விட்டாரா? அல்லது ஆளும் கட்சி பலமிழந்து விட்டதா? என்பதை விரைவில் தெரிந்துகொள்ள முடியும். சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமர் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு சபாநாயகரை உயர்த்தி வைத்துள்ளார். இந்த கனவு காரணமாக சபாநாயகர் தமது பதவியைப் பற்றி யோசிக்காமல் வேறு வகையாக செயற்படுகின்றார். அவர் ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திஸாநாயக்க, சுமந்திரன் ஆகியோரின் ஊன்றுகோளாக செயற்படுகின்றார்.

பாராளுமன்றம் தற்போது சிறிகொத்த கூட்டமாகியுள்ளது. அதில் நாம் பங்கேற்கப்போவதில்லை. முன்னர் இருந்தது போல் முறையாக பாராளுமன்றம் செயற்பட்டால் நாம் அதில் பங்கேற்க தயார். தற்போது சபாநாயகர் செயற்படும் விதத்தைப் பார்த்தால் அவரை சபாநாயகராக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...