தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ஜனாதிபதி அதிகாரங்களை கோரினார் ரணில் | தினகரன்

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ஜனாதிபதி அதிகாரங்களை கோரினார் ரணில்

அனைத்து அதிகாரங்களையும் வர்த்தமானி மூலம் வழங்குமாறு அழுத்தம்

ரணில் விக்ரமசிங்கவின் அதிகார மோகமே நாடு தற்போதைய குழப்பத்துக்குச் செல்ல பிரதான காரணம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற கடிதத்தை அப்போதைய பொதுவேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்தத் தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்,

2015ஆம் ஆண்டு 8ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. எனினும், ஜனவரி 6ஆம் திகதியே ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய பொது வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். வெற்றிபெற்றதும் தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தனக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க என்றுமே அதிகாரத்தில் மோகம் கொண்டவர். இதனாலேயே நாடு இந்தளவு குழம்பிப் போயுள்ளது என்றார். அதுமாத்திரமன்றி கடந்த மூன்றரை வருடங்களில் அமைச்சர்களுக்கு எந்த முடிவும் சுயாதீனமாக எடுக்க முடியாத நிலையே காணப்பட்டது. பிரதமரை மையப்படுத்தியே முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

சில திட்டங்களை நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றுவதற்கு ஜனாதிபதி கடுமையாகப் பாடுபட்டிருந்தார். அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் அவற்றை நேரடியாகப் பார்க்க முடிந்தது. பொறுமை எல்லைதாண்டிச் சென்ற நிலையிலேயே ஜனாதிபதி உரிய முடிவை எடுத்திருந்தார் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் அரசியலமைப்பை வைத்துக் கொண்டு தனது அரசியல் விளையாட்டைக் காண்பிப்பவர். தற்பொழுதும் அவ்வாறே செயற்படுகிறார். புதிய பிரதமர் நியமனம் தவறு என்றால் ஏன் அவர் உச்சநீதிமன்றம் சென்று தீர்வைப் பெற்றுக்கொள்ள முயலவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...