Thursday, April 25, 2024
Home » காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு

காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு

மேலும் பல நூறு பேர் பலி: வடக்கில் ‘பஞ்சம்’

by gayan
December 9, 2023 7:14 am 0 comment

காசா பகுதியின் மிகப்பெரிய நகரங்களில் இஸ்ரேலிய படை மற்றும் ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில் மேலும் பல நூறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இடம்பெயர்ந்துள்ள சுமார் இரண்டு மில்லியன் பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெறுவதற்காக இடம் மற்றும் உணவை பெறுவதற்கு போராடி வருகின்றனர்.

காசாவின் தெற்கு பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரான கான் யூனிஸின் கிழக்கில் தீவிர சண்டை நீடித்து வருவதாக குடியிருப்பாளர்கள் கூறியிருப்பதோடு காசா நகருக்கு அருகிலும் ஜபலியா மற்றும் கான் யூனிஸிலும் நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல்களில் மேலும் 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பலஸ்தீன முன்னணி கவிஞராக ரபாத் அலரீர் கொல்லப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை ஒன்றை முறியடித்ததாக ஹமாஸ் அமைப்பு நேற்று தெரிவித்தது. பணயக்கைதிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் துருப்புகள் அதிகாலையில் முன்னேறி வந்த நிலையில் பலஸ்தீன போராளிகள் அவர்களுடன் சண்டையிட்டு சிலரை கொன்று மேலும் சிலரை காயப்படுத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு டெலிகிராமில் கூறியது.

காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை நேற்று 17,177 ஆக அதிகரித்திருந்தது. இதில் 7,112 சிறுவர்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் 46,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை கொன்று 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்த ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் தற்போது காசாவின் பிரதான நகர மையங்களை சுற்றிவளைத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த வியாழக்கிழமை (07) தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் ஹமாஸிடம் இருந்து பொதுமக்களை பிரிப்பதன் தேவையை வலியுறுத்தியிருந்தார்.

போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கு பைடன் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. போர் விமானங்கள், கவச புல்டோசர்களின் உதவியோடு இஸ்ரேலிய துருப்புகள் தெற்கில் கான் யூனிஸ் அதேபோன்று வடக்கில் காசா நகர் மற்றும் ஜபலியாவில் சண்டையிட்டு வருகிறது.

இந்த உக்கிர மோதல்களால் ஏற்கனவே தெற்கை நோக்கி வெளியேறி இருக்கும் பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா பகுதியை நோக்கி வெளியேறுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். காசா மக்கள் தொகையில் 80 வீதமான 1.9 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

“இரண்டு மாதங்களாக வீதிகளில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வருகிறோம். எமது வாழ்நாளில் நாம் சந்தித்த மிகக் கடுமையாக இரு மாதங்களாக இது உள்ளது” என்று கான் யூனிஸில் இருந்து ரபாவை நோக்கி வெளியேறி இருக்கும் அப்துல்லா அபூ தக்கா என்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரபாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அங்குள்ள நாசர் மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 20 சடலங்களை கண்டதாக ஏ.எப்.பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் சிக்கியுள்ள பலஸ்தீன மக்கள், மிகக் குறைவான வாழ்வாதாரப் பொருட்களோடு, மேலும் குறுகிய இடங்களுக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.

இரண்டு மாத காலமாகத் தொடர்ந்து வரும் போரில் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் காசாவில் பாதுகாப்பான இடம் என்பதேயில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் எந்த ஒரு உதவியும் வராத நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பு பஞ்சத்தை அறிவித்துள்ளது. “ரொக்கெட் குண்டுகள் அல்லது குண்டுத் தாக்குதல் இன்றியே இங்கு நாம் உயிரிழந்து வருகிறோம். நாம் பட்டினி மற்றும் வெளியேற்றங்களால் ஏற்கனவே இறந்துவிட்டோம்” என்று காசா நகர வாசியும் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருப்பவருமான அப்துல்காதர் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT