டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து புளு ஸ்டார் - பேருவளை சுபர் சன் ஆட்டம் சமநிலையில் முடிவு | தினகரன்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து புளு ஸ்டார் - பேருவளை சுபர் சன் ஆட்டம் சமநிலையில் முடிவு

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக களுத்துறை புளு ஸ்டார் மற்றும் பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இரு அணிகளும் சிறந்த கோல் வாய்ப்புக்களை வீணாக்கிய நிலையில் கோல்கள் இன்றி சமநிலையடைந்தது.

பெத்தகான கால்பந்து மைதானத்தில் (14) இடம்பெற்ற இந்த ஆட்டம் 20 நிமிடங்களை அண்மித்த நிலையில் சுபர் வீரர்களுக்கு கிடைத்த சிறந்த முயற்சியாக மொஹமட் பசான் எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து உதைந்த பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியேறியது. மீண்டும் அடுத்த நிமிடங்களில் சுபர் சன் வீரர்கள், புளு ஸ்டார் முன்கள வீரர் ஷன்னவிடமிருந்து பறித்த பந்தை பரிமாற்றம் செய்து இறுதியில் பசானிடம் வழங்க, அவர் அதனை கோல் நோக்கி உதைத்தார். இதன்போது பந்து புளு ஸ்டார் அணியின் வலதுபுற கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

மீண்டும் அவ்வணி வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகள் புளு ஸ்டார் பின்கள வீரர்களின் தடுப்பில் பட்டு திசை மாறின. முதல் 25 நிமிடங்களுக்குள் சுபர் சன் அணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புக்களையும் புளு ஸ்டார் வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த தவறினர். ஆட்டத்தின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் சுபர் சன் அணியின் மத்திய களத்தில் இருந்து சம்பத் சிறந்த முறையில் உள்ளனுப்பிய பந்தை ஷன்ன பாய்ந்து கோல் நோக்கி ஹெடர் செய்தார். இதன்போது பந்து கோலை அண்மித்த வகையில் வெளியேறியது.

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் சுபர் சன் அணியின் பெனால்டி எல்லையில் இருந்து மசீர் உள்ளனுப்பிய பந்தை, கோல் கம்பங்களுடன் இருந்த ஷன்ன கம்பங்களுக்குள் செலுத்த தவறினார். இது புளு ஸ்டார் அணிக்கு முதல் பாதியில் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் புளு ஸ்டார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை ஷன்ன பெற்றார். நேரே கோலை நோக்கி இலக்கு வைத்து உதைந்த பந்து மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அடுத்த நிமிடம் தமது தரப்பில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை சுபர் சன் அணியின் முன்னணி வீரர் அபீஸ் ஒலைமி நேரே புளு ஸ்டார் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோவின் கைகளுக்கே உதைத்தார்.

ஆட்டத்தின் 70 நிமிடங்களில் சுபர் சன் அணியின் கோலுக்கு நேர் எதிரே கிடைத்த ப்ரீ கிக்கை ஷன்ன பெற்றார். அவர் கோல் நோக்கி செலுத்திய பந்தை சுபர் சன் கோல் காப்பாளர் முபஷிர் கம்பங்களுக்கு மேலால் வெளியே தட்டி விட்டார். தொடர்ந்து, புளு ஸ்டார் வீரர் சிகோசி பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை முபஷிர் தட்டிப் பிடித்தார்.

மேலும் சில நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை சிகோசி முன்னோக்கி எடுத்துச் சென்று கோலுக்கு அண்மையில் இருந்து பந்தை வெளியே அடித்து வாய்ப்பை வீணடித்தார்.

தொடர்ந்து மத்திய களத்தில் இருந்து ஷன்ன உதைந்த பந்தையும் முடிஷிர் பாய்ந்து பிடித்தார்.

போட்டின் 90ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து உள்ளனுப்பிய பந்தை அபீஸ் ஒலைமி பெற்று முன்னோக்கி எடுத்து வந்து கோலுக்கு முயற்சிக்கையில், மஞ்சுல பெர்னாண்டோவும் புளு ஸ்டார் பின் கள வீரரும் அதற்கு தடை போட்டு பந்தை திசை மாற்றினார்.

ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் பெனால்டி எல்லையில் இருந்து சுபர் சன் வீரர் டேனியல் கோல் நோக்கி உதைந்த பந்து லஹிரு தாரகவின் கால்களில் பட்டு வெளியே சென்றது.

எனவே, இரு அணியினருக்கும் கோலுக்காக கிடைத்த அனைத்து வாய்ப்புக்களும் வீணடிக்கப்பட, இந்த ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.


Add new comment

Or log in with...