தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும் | தினகரன்

தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்

பாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் தமது இலக்கை அடைவதற்காக தந்திரோபாயமாக செயற்பட வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூலமே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய தீர்வு கிடைக்குமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுவரை தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கா விட்டாலும்கூட இவ்விடயத்தில் மத்தியஸ்தமாக செயற்பட்டிருக்கலாமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதியமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இதேவேளை வடக்கு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய ஆணையை இப்பாராளுமன்றத் தேர்தலிலும் அவருக்கே வழங்க காத்திருப்பதனால் சுதந்திரக் கட்சி மாபெரும் கூட்டணியாக இம்முறை தேர்தலில் களமிறங்குமென்றும் அவர்கள் கூறினர்.

இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் மேலும் கருத்து தெரிவிக்ைகயில்-, ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பில் இரு தரப்பினர் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். எவ்வாறாயினும் மக்களின் மனதிலுள்ளவற்றை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையில் ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்த மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் நோக்கிலேயே மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 75 சதவீதமானவற்றை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். எஞ்சியவற்றை நிறைவேற்றுவதற்கு கடந்த அரசாங்கத்தில் பாரிய போராட்டம் நடத்த வேண்டி ஏற்பட்டதனாலேயே பிரதமரை மாற்றியதாகவும் ஜனாதிபதி அறிவிப்பு விடுத்துள்ளார். தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதி மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோன்று புதிய பிரதமர் ராஜபக்ஷவும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து நாட்டில் மேலும் அபிவிருத்தியை முன்னெடுக்கும் திட்டங்களை வைத்துள்ளார். தமிழர்களுக்கு அபிவிருத்தியுடன் கூடிய தீர்வு இவர்களால் மட்டுமே கிட்டும். இவர்கள் முன்வைக்கும் தீர்மானங்களையே தெற்கிலுள்ளவர்கள் குற்றம் குறை கூறாமல் ஏற்றுக் கொள்வார்கள்.

அத்துடன் தமிழர்பிரச்சினைக்குத் தீர்வு, சிறுபான்மையினருக்கு சாதகமான யாப்பு மாற்றம், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, அபிவிருத்தி ஆகிய அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே முன்னெடுக்க்பபடுமென்றும் அவர் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் கருத்து தெரிவிக்ைகயில், -

நாட்டில் இடம்பெற்ற பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஜனாதிபதி பிரதமரை மாற்றியதுடன் புதிய பாராளுமன்றத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் பல விடயங்களில் விட்டுக் கொடுத்திருந்தால் இந்நிலைமை உருவாகியிருக்காது. அத்துடன் சபாநாயகரின் நடவடிக்கைகளும் பாராளுமன்றம் கலைப்புக்கு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை காரணம் காட்டி சில சமூக வலைத்தளங்கள் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதில் எவ்வித உண்மையுமில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுத் தலைவர் ஆவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அதிகம் காணப்பட்டது. எனவே அவர் ஒருபோதும் சிறுபான்மையின மக்களை கைவிட மாட்டார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறை வடக்கிலிருந்து சுதந்திரக் கட்சி சார்பில் கூடுதலான மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவரென்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 


Add new comment

Or log in with...