Home » கான் யூனிஸை சுற்றிவளைத்த இஸ்ரேல் படை இதுவரை இல்லாத கடும் தாக்குதல்

கான் யூனிஸை சுற்றிவளைத்த இஸ்ரேல் படை இதுவரை இல்லாத கடும் தாக்குதல்

by sachintha
December 7, 2023 6:48 am 0 comment

உயிரிழப்பு 16,200ஐ தாண்டியது: மக்கள் தொடர்ந்து ஓட்டம்

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸை சுற்றிவளைத்து அந்த நகரின் மையப் பகுதியை நோக்கி இஸ்ரேலிய துருப்புகள் முன்னேறி வரும் நிலையில் அங்கு போர் வெடித்தது தொடக்கம் இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தயிப் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அங்கு உக்கிரம் அடைந்திருக்கும் போர் உயிர்ச்சேதங்களை அதிகரித்துள்ளது.

வடக்கு காசாவில் ஹமாஸ் பலம்பெற்றுள்ள ஜபலியா மற்றும் காசா நகரைச் சூழவுள்ள சைதூன், ஷென்ஜையா, அல் தராஜ் மற்றும் அல் துப்பா பகுதிகளிலும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

காசா போர் மூன்றாவது மாதத்தை தொடும் நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் ஹமாஸ் அமைப்பின் கோட்டைகளான கான் யூனிஸ், ஜபலியான மற்றும் ஷுஜையாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நகரங்களில் ஹமாஸ் தொடர்ந்து வலுப்பெற்றிருப்பதாக நம்பப்படுவதோடு இஸ்ரேலிய துருப்புகளுக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்கள் பெரும் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

போர் விமானங்களின் உதவியோடு காசாவில் கடும் மோதலில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் நேற்று (06) கூறியது.

மறுபுறம் எட்டு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டு அல்லது காயத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், 24 இராணுவ வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸதீன் அல் கஸ்ஸாம் தெரிவித்துள்ளது.

காசாவில் மேலும் இரு துருப்புகள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்த நிலையில் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை கடுமையான வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மத்திய கான் யூனிஸுக்குள் கிழக்கு பக்கம் இருந்து ஆழமாக ஊடுருவ ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் அச்சமடைந்த அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மேலும் தெற்காக ரபாவை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

உலகின் ஆபத்தான இடம்

காசாவில் உள்ள மக்களுக்கு வெளியேறும் உத்தரவுகளை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து வழங்கி வருகிறது. “கியூ.ஆர் குறியீட்டுடனான துண்டுப் பிரசுரங்களை நாம் தொடர்ந்து வீசி வருகிறோம். அது காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வழிகாட்டும்” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் பேச்சாளர் டனியேல் ஹகரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை எகிப்து எல்லைக்கு அருகில் இருக்கும் ரபா பகுதிக்கு அல்லது மத்தியதரைக் கடற்கரையை ஒட்டிய ஒரு குறுகிய நிலப்பகுதியான அல் மவாசியை நோக்கி செல்லுபட்டியே இஸ்ரேல் கூறி வருகிறது.

எனினும் இஸ்ரேல் வழங்கியுள்ள அந்த ஒன்லைன் வரைபடத்தை பெற முடியாதிருப்பதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பலஸ்தீனர்கள் கூறியிருப்பதோடு, பாதுகாப்பு வலயம் என்பது தவறான கூற்று என்று ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“கூறப்படும் இந்தப் பகுதி குறுகிய வறண்ட நிலமாகும். அங்கே அவர்களுக்கு தண்ணீர், வசதிகள், குளிரில் இருந்து பாதுகாப்பதற்கு தங்குமிடம் எதுவும் இல்லை” என்று யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசா மக்கள் தொகையில் 80 வீதமான 1.8 மில்லியன் மக்கள் ஏற்கனவே தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு வெளியேற்ற அலை ஆரம்பித்திருப்பதாகவும் ஒவ்வொரு நிமிடத்திலும் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“எந்த ஒரு பாதுகாப்பு வலயமும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்த காசாவும் உலகின் அபாயகரமான இடமாக மாறியுள்ளது. தற்காலிக முகாம்களும் அளவுக்கு அதிகமான மக்களால் நிரம்பி வழிகின்றன” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழப்பு உச்சம்

கான் யூனிஸ் நகரின் பிரதான மருத்துவமனையான நாசர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ், கார், டிரக் வண்டிகள் மற்றும் கழுதை வண்டிகளில் அழைத்து வரப்படுகின்றனர். இடம்பெயர்ந்து அடைக்கலம் பெற்றிருந்த பாடசாலை தாக்கப்பட்டதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தரை எங்கும் இரத்தம் தோய்ந்து காணப்படும் மருத்துவமனைக்குள் ஒவ்வொரு அங்குல இடைவெளியிலும் சிறுவர்கள் உட்பட காயமடைந்தவர்கள் வைக்கப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு நோயாளியாக பார்ப்பதில் மருத்துவர்கள் அவசரம் காட்டி வருகின்றனர்.

இரு சிறுமிகள் தொடர்ந்து இடிபாடுகளில் தூசுகள் உடலெங்கும் படிந்திருக்கும் நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். “அந்த இடிபாடுகளில் எனது பெற்றோர்கள் சிக்கியுள்ளனர்” என்று அழுதபடி ஒரு சிறுமி கூறினாள். “எனக்கு எனது அம்மா வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும். எனக்கு என் குடும்பம் வேண்டும்” என்று அவள் அழுதுகொண்டே கூறினாள்.

உக்கிர வான் மற்றும் பீரங்கி தாக்குல்கள் நீடித்து வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 16,248 ஆக அதிகரித்திருப்பதாக காசா நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 7,112 சிறுவர்கள், 4,885 பெண்கள், 286 மருத்துவ பணியாளர்கள், 32 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் 81 ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர். தவிர 7,600 பேர் காணாமல்போயிருப்பதோடு, 43,616 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ள சூழலில் நேற்று மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். துபாஸ் நகரில் 16 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவரே இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

பைடனுக்கு ஹமாஸ் பதில்

காசா தொடர்பில் சர்வதேச கவலை அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, காசாவில் எரிபொருள் மற்றும் ஏனைய உதவிகளை அனுமதிப்பதற்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் இஸ்ரேல் மேலும் அதிகமாக செயற்பட வேண்டும் என்று செவ்வாயன்று வலியுறுத்தியது.

“அங்கு கிடைக்கும் உதவிகள் போதுமானதாக இல்லை” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். “அது மேலும் அதிகரிக்க வேண்டும். அதுபற்றி நாம் இஸ்ரேல் அரசாங்கத்தை தெளிவுபடுத்தியுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலின்போது பெண்கள் கற்பழிக்கப்பட்டு அவர்களில் உடல்கள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசியுள்ளார். “இது பயங்கரமானது” என்று பொஸ்டன் நகரில் அரசியல் நிதி சேகரிப்பாளர்கள் முன் பைடன் கூறினார்.

பைடனின் குற்றச்சாட்டை பொய்யானது என்று மறுத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் போர் குற்றங்களை மறைக்கும் இஸ்ரேலின் முயற்சியுடன் பைடனும் இணைந்துள்ளார் என்று டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் ஹமாஸ் கூறியது.

கட்டாரின் மத்தியஸ்தத்துடன் ஏழு நாட்கள் நீடித்த போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முறிந்த நிலையிலேயே மீண்டும் போர் வெடித்தது. போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீன கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்தும் குறைந்தது 137 பணயக்கைதிகள் காசாவில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படாத வரை அவர்களை விடுவிப்பதை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்தில் பரந்த அளவிலான மோதல் ஒன்றை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. லெபனானுடனான இஸ்ரேலிய எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் லெபனானின் தெற்கு எல்லையில் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் லெபனான் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT