சாரதியாக இருந்து ஸ்னூகர் சம்பியனாக மாறிய பாஹிம் | தினகரன்

சாரதியாக இருந்து ஸ்னூகர் சம்பியனாக மாறிய பாஹிம்

தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக் காலமாக இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற முவர்ஸ் கழகத்தைச் சேர்ந்த எம்.எப்.எம் பாஹிம், இம்முறை நடைபெற்ற 66ஆவது தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணி வீரர்களை யெல்லாம் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

முவர்ஸ் விளையாட்டு சங்க உள்ளக அரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற இம்முறைபோட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், ஓடர்ஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ரயன் சோமரத்னவை 6க்கு 1 என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்த மொஹமட் பாஹிம், முதற்தடவையாக ஸ்னூகர் சம்பியன் பட்டம் வென்றார்.

இப்போட்டியின் முதல் சுற்றை 66க்கு 35 என சோமரத்ன கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2 சுற்றுக்களிலும் சோமரத்னவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த பாஹிம், 61க்கு 49 என 2ஆவது சுற்றையும், 64க்கு 30 என 3ஆவது சுற்றையும் கைபற்றி 2க்கு 1 என சுற்றுக்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4 ஆவது சுற்றில் இரு வீரர்களும் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தாலும் 67க்கு 60 என்ற புள்ளிகள் கணக்கில் பாஹிம் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற 5ஆவது மற்றும் 6ஆவது சுற்றுக்களில் தனது ஆதிக்கத்தை செலுத்திய பாஹிம் 72க்கு 12, 75க்கு 26 என்றபுள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியைப் பதிவுசெய்தார்.

இறுதியாக 11 சுற்றுக்களைக் கொண்ட இறுதிப் போட்டியில் 7 சுற்றுக்களை தனதாக்கிய இளம் வீரர் பாஹிம்,முதற்தடவையாக தேசிய ஸ்னூகர் சம்பியன் மகுடத்தை வெற்றிகொண்டார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 5க்கு 3 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆஷிக் ஹுசைனை பாஹிம் வீழ்த்தியிருந்தார்.

கடந்த 19 வருடங்களாக தேசிய ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்ற சுசன்த பொதேஜுவை அரையிறுதிப் போட்டியில் ஓட்டர்ஸ் கழக வீரர் ரயன் சோமரத்ன வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனினும், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் சுசன்த பெதேஜு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறைதேசிய ஸ்னூக்கர் பட்டத்தை வெற்றி கொண்ட பாஹிம், இம்மாதம் 19ஆம் திகதி மியன்மாரில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

தனது 14ஆவது வயதில் ஸ்னூக்கர் விளையாட்டை ஆரம்பித்த மொஹமட் பாஹிம்,கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதற்தடவையாக பங்குபற்றி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தவெற்றியின் பிறகு தினகரன் நாழிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது பாஹிம் கருத்து வெளியிடுகையில், உண்மையில் எனது இந்தவெற்றிக்கு முக்கியகாரணமாக இருந்த முவர்ஸ் கழகத்தின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சபீக் ரஜாப்டீன் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும்,எனது குடும்பத்தார்,நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...