நெருக்கடியான நிலையில் தனிப்பட்ட இலாபமீட்டும் எண்ணம் எனக்கில்லை | தினகரன்

நெருக்கடியான நிலையில் தனிப்பட்ட இலாபமீட்டும் எண்ணம் எனக்கில்லை

பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரிய போதிலும் நெருக்கடியான நிலையில் தனிப்பட்ட இலாபமீட்டும் எண்ணம் தனக்குக் கிடையாதென ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தபோது தலைமைத்துவத்துடன் மோத விரும்பவில்லை என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தது தொடர்பில் நேற்று முன்தினம் (7) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். நாம் அதிகாரத்துக்கு வந்தது உடன்பாடு, ஒற்றுமை மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கேயாகும். எமது நோக்கம் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றுபடுத்திய வண்ணம் பயணிப்பதே எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனநாயக கட்சி அரசியலில் செயற்படும் போது நேர்மையான நிகழ்ச்சி நிரலின் கீழ் கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டுமெனவும் ஒழுக்க விழுமியங்களைப் பேண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசியல்வாதிகள் மோத வேண்டியது கட்சித் தலைவர்களுடனல்ல.

பதிலாக வறுமையை ஒழிப்பதற்காகவே போராட வேண்டும். அதிகாரத்தரப்பு செயற்படும் விதத்தை சிறிய பிள்ளைகள் கூட பார்த்துக்கொண்டிருப்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே கட்டுக்கோப்புடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணிச் செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...