ஆட்டநிர்ணய எதிரொலி: சொத்து விபரங்களை வெளியிட இலங்கை வீரர்கள் சம்மதம் | தினகரன்

ஆட்டநிர்ணய எதிரொலி: சொத்து விபரங்களை வெளியிட இலங்கை வீரர்கள் சம்மதம்

இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தமது சொத்து விபரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கு முன்வந்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஏனைய வினையாட்டு சங்ககங்களில் பதவி வகிக்கின்ற அதிகாரிகள்,பயிற்சியாளர்கள்,அந்தந்த வீரர்களுக்கும் அரச ஊழியர்களாகக் கருதி அவர்களை இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் சட்டவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் திருப்பத்தினை அடுத்து பைஸர் முஸ்தபா மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இலங்கையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட்டுடன் ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற வீரர்கள் தாமாகவே தமது சொத்து விபரங்களையும்,வருமானங்களையும் வெளிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கிரிக்கெட் வீரர்களுடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது. உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயமாகும். அதேபோல ஏனைய கிரிக்கெட் நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது வீரர்களின் இந்தசெயற்பாடு சிறந்தமுன் உதாரணமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, இதன் தொடர்ச்சியாக ஏனைய வினையாட்டு சங்ககங்களில் பதவிவகிக்கின்ற அதிகாரிகளையும்,அந்தந்த வீரர்களுக்கும் அரச ஊழியர்களாகக் கருதி அவர்களை இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் சட்டவிதிகளில் திருத்தங்களை எதிர்பார்த்துள்ளேன்.அத்துடன்,விளையாட்டு சங்கங்களின் தேர்தலின் போது ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுகின்ற நபர்கள். தமது சொத்து மற்றும் வருமான விபரங்களை சமர்பிப்பதற்கான புதிய நடைமுறையொன்றையும் கொண்டு வரவுள்ளோம்.

அந்த விபரங்களை இரகசியமாகப் பேணவேண்டியிருப்பதால் அந்தப் பொறுப்பையாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேனஎன கூறினார்.

கிரிக்கெட் வீரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அண்மைக் காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற சூதாட்ட விவகாரம் தொடர்பில் வீரர்கள் தமதுமன வேதனையை வெளியிட்டுள்ளனர். ஆட்டநிர்ணயம் தொடர்பில் பல ஊடகங்கள் தமது பெயர்களை வெளியிட்டு வருவதாகவும்,அதனால் மிகவும் மனவேதனைக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்,எமது வீரர்கள் யாரும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடவில்லை என நான் உறுதியாக சொல்கிறேன். இலங்கையின் தற்போது இடம்பெற்றுவருகின்ன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளில் குற்றவாளியார் என்பது நிரூபணமாகிய பிறகு தான் பெயர்கள் வெளியிடப்படுகின்றது. ஆனால் ஊடகங்கள் அதற்குமுன் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊடகங்கள் அவ்வாறான செய்திகளை இனிமேலும் வெளியிட வேண்டாம் எனகேட்டுக் கொள்கின்றேன்.அதேபோலசர்வதேசகிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினர் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட இரண்டு இலங்கைவீரர்களின் பெயர்களை மாத்திரம் தான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் தற்போது முகங்கொடுத்துள்ள ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றைகொண்டு வருவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இதற்காக இலங்கை கிரிக்கெட் தகுதி வாய்ந்த அதிகாரியும்,விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் உதவி சொலிசிட்ட ஜெனரால் சுமதி தர்மவர்தன ஆகியோர் (05) இங்கிலாந்து நோக்கிப் பயணமாகினர்.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...