அதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு! | தினகரன்

அதிகார எல்லையைத் தாண்டுவது சபாநாயகர் இழைக்கின்ற தவறு!

இலங்கையில் தற்போது 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத்தான் நடைமுறையிலுள்ளது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய இரண்டாவது குடியரசு யாப்பாகும். இந்த யாப்பை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த யாப்பில் இற்றைவரையும் 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்றாலும் இத்திருத்தங்களில் சபாநாயகரின் பணிகள் அதிகாரங்கள் உள்ளிட்ட எந்தவிடயமோ திருத்தம் செய்யப்படவில்லை.

“இந்த யாப்பின்படி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுபவரின் பணி பாராளுமன்ற அமர்வுகளின் போது சபை அமர்வை வழிநடத்திச் செல்வதேயாகும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கேற்ப சபாநாயகரானவர் நடுநிலையான நபர் என்ற வகையில் அவரொரு நடுவர். அதற்கப்பால் பங்களிப்பு எதுவும் அவருக்கில்லை. அதேநேரம் இந்த யாப்பின் பிரகாரம் அரசாங்கமொன்றை அங்கீகரிக்கவோ, அங்கீகரிக்காது மறுக்கவோ கூடிய அதிகாரமும் சபாநாயகருக்குக் கிடையாது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளும் நியமனங்களையும் நடவடிக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டியது சபாநாயகரின் பணியாகும். இதைவிடுத்து தனக்கு பிடித்தவரைத்தான் அங்கீகரிப்பேன் என்ற நிலைப்பாட்டில் சபாநாயகர் பதவியிலிருப்பவர் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவது இந்நாட்டின் அரசியலமைப்புக்கும் ஜனநாயக பாரம்பரியத்துக்கும் முரணான செயலாகும்.

இருந்த போதிலும், இவற்றைக் கருத்திற் கொள்ளாது தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த சில தினங்களாக சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இந்நடவடிக்கைகள் சட்ட நிபுணர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆட்சேபனைகளுக்கும் உள்ளாகியுள்ளன.

தற்போதைய சபாநாயகரான கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் அவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதனால், அவர் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் பக்கம் சாராது நடுநிலை வகித்து செயற்பட வேண்டியது அவரது கடமையும் பொறுப்புமாகும்.

ஆனால், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 116 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் நடுநிலை பங்களிப்பிலிருந்து விலகிச் சென்றுள்ளார் என்பது வெளிப்படையானது.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசியலமைப்பு சபாநாயகருக்கு அனுமதி வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பிரதம நீதியரசர், பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதத்தைப் பெற்றுக் கொண்டதனூடாக நடுநிலை தவறியவர் என்பதையும் பக்கச் சார்பானவர் என்பதையும் சபாநாயகர் பகிரங்கப்படுத்தியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இதன்படி சபாநாயகரின் இந்த செயற்பாடுகள் யாவும் அரசியமைப்பில் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக இல்லையென்பது தெளிவாகிறது.

இந்த அரசியலமைப்பின்படி ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராவார். அதற்கேற்ப இந்த யாப்பின் 33 வது சரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை கூட்டவும் அதனை ஒத்திவைக்கவும் மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதனால் சபாநாயகர் பதவியிலிருப்பவர் தமது அதிகார எல்லைகளுக்கப்பால் செல்ல முயற்சிப்பது அல்லது தன்னிச்சையாக செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணான செயலாகும். இவ்வாறான செயற்பாடு நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கும். அதேநேரம் பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் பிழையானதும் தவறானதுமான பார்வை மக்கள் மத்தியில் ஏற்பட வழிவகுக்கும். அது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஊறு விளைவிப்பதாகக் கூட அமைந்து விடலாம்.

அதன் காரணத்தினால் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் தமக்குள்ள அதிகார எல்லைக்குள் செயற்பட வேண்டியது சபாநாயகர் பொறுப்பில் இருப்பவரின் கடமையாகும். அதற்கப்பால் செல்ல எத்தனிப்பதானது பிழையானதும் தவறானதுமான முன்மாதிரியே நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கும். அவை ஜனநாயகம் சீர்குலையவும் கூட வழிவகுக்கும்.

இதன் விளைவாகத்தான் சுதந்திரத்திற்கு முன்பிருந்து நாட்டில் பேணிப் பாதுகாக்கப்படும் ஜனநாயக பாரம்பரியம் சீர்குலைவதற்கு சபாநாயகர் ஒருபோதும் துணை போகக் கூடாது என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு நீடித்து நிலைக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆகவே, அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு சபாநாயகர் பதவிக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அப்பதவியிலிருப்பவரின் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...