உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பின்லாந்து | தினகரன்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பின்லாந்து

உண்மையிலேயே பின்லாந்து ஒரு வித்தியாசமான நாடுதான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் திகதி ‘தேசிய பொறாமை தினம்‘ அனுஷ்டிக்கப்படுகிறது. இது பின்லாந்து பொதுமக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப் படுகிறது. 2018–ம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது பின்லாந்து.

கல்வி, சுகாதார வசதிகள் அத்தனை பேருக்கும் இலவசம். ‘அடிப்படை ஊதியம்‘ கோட்பாட்டின் கீழ் 2016 முதல் நாட்டில் உள்ள வேலையற்றோருக்கு அரசாங்கம் மாத ஊதியம் அளித்து வருகிறது. இத்தனை நல்ல அம்சங்களும் நிரம்பிக் கிடக்க முக்கிய காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையே ஆகும். வடக்கு ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக மக்கள் தொகை குறைவாகவே இருக்கிறது.

அதிலும் பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 2018 நவம்பர் 3ஆம் திகதியன்று 55 இலட்சத்து 49 ஆயிரத்து 147. இதுவே இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்த மக்கள் தொகை 55 இலட்சத்து 3ஆயிரத்து 297. அதாவது இவ்வாண்டின் 317 நாட்களில் உயர்ந்துள்ள மக்கள் தொகை 46 ஆயிரத்துக்கும் குறைவு.

இந்தியாவின் ஒரு நாள் மக்கள் தொகைப் பெருக்கம் கூட, பின்லாந்து நாட்டில் அனேகமாக ஓர் ஆண்டு முழுமைக்கும் இல்லை. அந்த நாட்டில் உள்ள வேலையற்றோரின் எண்ணிக்கை 2,500–க்கும் குறைவு. அரசின் இலவச ஊதியம் காரணமாக தற்காலிகப் பணி மற்றும் சுயதொழில் செய்வதில் இவர்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லையாம். அதனால் இந்தத் திட்டத்தை ரத்து செய்து 2019 ஜனவரி முதல் மாற்று திட்டம் குறித்து பரிசீலித்து வருகிறது பின்லாந்து அரசு.

இதற்கு இடையே ஆண்டு தோறும் நவம்பர் முதல் திகதி, ‘தேசிய பொறாமை தினம்‘ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் கடந்த சில ஆண்டுகளாகப் பொதுமக்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பு. அந்த நாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு பதிப்புகள் வெளியிட்டு வருகின்றன. சாமானியர்களை சந்தித்து அவர்களின், சிறப்பு பேட்டிகளை வெளியிடுகின்றன. அது என்ன ‘பொறாமை‘ தினம்..? வேறு ஒன்றும் இல்லை; அத்தனை பேரின் வருமானவரி விவரங்களையும் நவம்பர் 1ஆம் திகதி காலை 8 மணிக்கு அரசாங்கமே அதிகார பூர்வமாக அறிவித்து விடுகிறது.

 வரித்துறை வெளியிடும் இந்தப் பட்டியலைக் காணத்தான் ஊடகங்களும் பொது மக்களும் முண்டியடித்துக் கொள்கிறார்கள். சாமானியர்களை சந்தித்து அவர்களின் வருமானம் குறித்து சிறப்பு பேட்டிகள் வெளியிடுகின்றன. அன்று பொழுது விடியும் முன்பாகவே தலைநகர் ‘ஹெல்சின்கி‘ தலைமை வரித்துறை அலுவலக வாயிலில் மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்.

தன்னுடைய, தனக்கு வேண்டியவர்களுடைய வருமானத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். எருது விழாவுக்கு ‘பாம்ப்லோனா‘; ‘கார்னிவல்‘ விழாவுக்கு ‘ரியோ டி ஜெனிரோ‘ போன்று, ‘தேசிய பொறாமை தினத்துக்கு ‘ஹெல்சின்கி‘ என்கிறது ‘தி நியூயோர்க் டைம்ஸ்‘ நாளிதழ்.

தனிநபர் தொடங்கி பெரிய நிறுவனம் வரை அத்தனை பேரின் வருமானம் பற்றிய முழு விவரங்களும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு பொது வெளியில் எல்லாருடைய பார்வைக்கும் வைக்கப்பட்டு விடுகிறது. தனிநபர் வருமானவரி விவரங்களை வெளியிடும் முறை, பின்லாந்து நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. பல்லாயிரம் பக்கங்களுக்கு நீண்ட புத்தகமாக இருந்தது; அதனால் பலருக்கும் அதைப் பார்க்க அத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்தது.

தற்போது கணனி வழித் தகவல் வந்த பின் ‘தேடிப் பார்த்து‘ தெரிந்து கொள்வது எளிதாகி விட்டது. இந்த அறிவிப்பினால் மட்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெரிதாக மாறி விடப் போவதில்லை; ஆனால் தங்களின் வருமானம் பற்றிய துல்லிய ஒப்பீடு உருவாவது மக்களுக்குச் சில மறுக்க முடியாத நன்மைகளைக் கொண்டு வரவே செய்கிறது. தொழிலாளர்கள் குறிப்பாக ஊடகப் பணியாளர்கள் ‘பொறாமை‘ தினத்தைப் பெரிதும் வரவேற்கிறார்களாம்.

காரணம் அதே நிலைப் பணிக்கு வேறொரு நிறுவனத்தில் கூடுதல் ஊதியம் தருவதைச் சுட்டிக் காட்டி தமக்கும் ஊதிய உயர்வு கேட்டுப் பெற முடிகிறதாம். ஆனால் இதற்கான அவசியம் ஏற்படுவதே இல்லை என்றும் அவர்களே கூறுகின்றனர். காரணம் ‘வெளிப்படைத் தன்மை‘ இல்லாத பல நாடுகளை விட இங்கே பணி தருகிற நிறுவனங்கள் மிகுந்த கவனத்துடன், பொறுப்புணர்வுடன், தக்க ஊதியம் தருகின்றனவாம்.

இந்த வெளிப்படைத்தன்மை எங்களின் நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


Add new comment

Or log in with...