இலங்கையில் நிலவும் சகவாழ்வு, நல்லிணக்கம் உலகுக்கு முன்மாதிரி | தினகரன்

இலங்கையில் நிலவும் சகவாழ்வு, நல்லிணக்கம் உலகுக்கு முன்மாதிரி

'இலங்கையில் காணப்படும் சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்க பண்புகள் உலகின் அமைதி சமாதானத்திற்கு சிறந்த முன்மாதிரி' என்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த லிபிய நாட்டின் சமாதான தூதுவர் (Peace envoy) நூரி பராஜ் நூரி பௌனாஸ் தெரிவித்திருக்கின்றார்.

'பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். என்றாலும் இங்குள்ள மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்வதோடு ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்திற்கு அருகில் மற்றொரு மதத்தின் வழிபாட்டு தலத்தையும் கூட காண முடிகின்றது. இவ்வாறன இன, மத சகவாழ்வு நல்லிணக்கப் பல்வகைமையை உலகின் ஏனைய நாடுகளில் தாம் அவதானிக்கவில்லை' என்றும் 'இலங்கையில் காணப்படும் இன, மத சகவாழ்வு, நல்லிணக்கம் தொடர்பான அனுபவங்களை மியான்மர் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் கொண்டு செல்லவே நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் குறிப்பிட்டார் நூரி.

1997 ஆம் ஆண்டு முதல் சமாதான தூதுவராக செயற்பட்டு வரும் நூரி பராஜ் நூரி இற்றைவரையும் 131 நாடுகளுக்கு நேரில் விஜயம் செய்து தமது சமாதான தூதைக் கொண்டு சென்றுள்ளார். அந்தடிப்படையில் 131 வது நாடாக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நூரி பராஜ் நூரியை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணலை இங்கே தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்: ஆம். நான் லிபியாவின் பெங்காஸி நகரில் பிறந்து வளர்ந்தவன். இரண்டாம் நிலை கற்கையை நிறைவு செய்துவிட்டு கணனி துறையில் கற்று தேர்ந்துள்ளேன். என்றாலும் ஆரம்பம் முதல் அன்பு, சமாதானம், சகவாழ்வை அதிகம் நேசிக்கக்கூடியவனாக இருக்கின்றேன். அதேநேரம், லிபியாவானது அமைதி, சமாதானம் தழைத்தோங்கும் நாடு. அதனால் அமைதி சமாதானத்தை ஏனைய பிரதேசங்களுக்கும் உலகிற்கும் கொண்டு செல்ல வேண்டுமென எண்ணினேன்.

அதற்கு ஏற்ப எனக்கு 19 வயதாக இருக்கும் போது சமாதான தூதை உலகிற்கு கொண்டு செல்லும் பணியை ஆரம்பித்தேன். நான் லிபியாவைச் சேர்ந்தவன் என்றாலும் உலக மக்களில் ஒருவனாக இருக்கின்றேன். அந்தடிப்படையில் எல்லோரும் மனித நேய அடிப்படையில் அமைதி சமாதானமாக வாழ வேண்டும் என்ற நோக்கோடு இப்பணியை முன்னெடுத்து வருகின்றேன்.

லிபியாவின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் பிரதிநிதியாகவும், லிபியாவின் சர்வதேச இளைஞர் முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தியுமே இப்பணியில் ஈடுபடுகின்றேன்.

கேள்வி: இப்பணியை முன்னெடுக்கவென உங்களுக்கு கிடைக்கப்பெறும் உதவி ஒத்துழைப்புகள்?

பதில்: நான் எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொந்த நிதியில் தான் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன். 1997 இல் ஆரம்பித்த இப்பணியின் நிமித்தம் இற்றைவரையும் 130 நாடுகளுக்கு பயணித்துள்ளேன். 131 வது நாடாகவே இங்கு வருகை தந்துள்ளேன். இலங்கைக்கான எனது முதல் விஜயம் இது.

சமாதான தூதைக் கொண்டு செல்லும் எனது பணிக்கு என் நண்பர்களும் சில நாடுகளிலுள்ள லிபிய தூதரகங்களில் உள்ள நண்பர்களும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்றனர். அத்தோடு எனது விசா போக்குவரத்து வசதிகளை அந்தந்த நாடுகளிலுள்ள லிபிய தூதரகங்கள் ஊடாக லிபிய வெளிவிவகார அமைச்சு செய்து தருகின்றது.

கேள்வி: உங்களது சமாதான தூது குறித்து குறிப்பிடுவதாயின்?

பதில்: உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் எனது சமாதான தூதைக் கொண்டு செல்வதையே எனது இலக்காகக் கொண்டிருக்கின்றேன். இத்திட்டத்தின் கீழ் நான் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தால் அந்நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று பிரதேச மக்களுடன் சுயமாக அறிமுகமாகி அளவலாவுகின்றேன். மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடுகின்றேன். வழிபாட்டு தலங்களுக்கு நேரில் செல்கின்றேன். எனக்கு இப்பணியில் இடைத்தரகர்கள் கிடையாது. அவ்வாறானவர்களை நியமித்துக் கொள்வதுமில்லை. நானாகவே மக்களிடம் செல்கின்றேன். இதனூடாக சமாதானத்தின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்துவத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன்.

இவ்வாறு பிரதேச மட்ட சந்திப்புக்களை நடாத்திய பின்னர் அந்நாட்டின் தலைநகருக்கு திரும்பி கொள்கை வகுப்பாளர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து சமாதானத்தின் தூதை எடுத்துக்கூறுகின்றேன். மக்கள் இன, மத, மொழி, நிற, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் சகலரும் சமாதானமாகவும் சகவாழ்வு நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டியவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தைப் பேணி பெரும்பான்மை சமூகங்களோடு ஒற்றுமையாக வாழ முடியும். நிறமோ, இனமோ, மதமோ, பிரதேச, நாட்டு எல்லைகளோ சமாதானம், நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது. இதுவே எனது சமாதான தூதின் அடிப்படையாகும்.

கேள்வி: உங்களது சமாதான பயணத்தின் ஊடாக நீங்கள் பெற்றுள்ள அனுபவங்கள் குறித்து குறிப்பிடுவதாயின்?

பதில்: உலகில் 131 நாடுகளுக்கு இற்றைவரையும் விஜயம் செய்துள்ளேன். எனது 21 வருட சமாதானத் தூது பயணத்தில் ஒவ்வொரு நாட்டினதும் தேவைகளையும். நிலைமைகளையும் அறிந்துள்ளேன். ஒரு நாட்டில் பெறும் அனுபவங்களை மற்றொரு நாட்டினருக்கு கொண்டு செல்கின்றேன். அவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

அதேநேரம் முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் நிலவும் நாடுகளுக்கும், பிரதேசங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களுக்கும் சமாதானத்தினதும் சகவாழ்வினதும் முக்கியத்தை எடுத்துக் கூறுகின்றேன். அந்தடிப்படையில் எத்திரியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் சுமார் 20 வருடங்கள் யுத்தம் இடம்பெற்று வந்தன. ஒரு பிரதான பாதையும் மூடி வைக்கபட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு தரப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றில் நானும் ஒருவன். அந்தடிப்படையில் அந்த இருநாடுகளும் சமாதான உடன்படிக்கையில் கைச்சார்த்திட்டுள்ளதோடு குறித்த பாதையும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

கேள்வி: நீங்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்கள் குறித்து குறிப்பிடுவதாயின்?

புதில்: ஆம். இலங்கையில் கொழும்பு, காலி, நுவரெலியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் நேரில் விஜயம் செய்தேன். இங்கு வித்தியாமானதும் முன்மாதிரியானதுமான அனுபவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது ஒரு சிறிய நாடு என்றாலும் இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றும் மூன்று இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ்கின்றனர். இங்கு ஒரு குடியிருப்பு இடத்தை எடுத்துப் பார்த்தால் ஒரு வீடு பௌத்தருடையது என்றால் அதற்கு அருகிலுள்ள வீடு முஸ்லிமுடையதாகவோ அல்லது இந்து உடையதாகவோ அல்லது கத்தோலிக்கருடையாதாகவோ இருக்கின்றது. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் அருகருகே நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்கின்றனர்.

அதேநேரம் வழிபாட்டு தலங்களையும் இவ்வாறு காணக்கூடியதாக உள்ளது. ஒரு பௌத்த வழிபாட்டு தளத்திற்கு அருகில் முஸ்லிம் பள்ளிவாசல் அல்லது இந்து கோவில் அல்லது கத்தோலிக்க தேவாலயம் அமைந்திருக்கின்றது. இவ்வாறு வழிபாட்டு தலங்களும் அருகருகே இருப்பதும் அபூர்வமானது. அந்த வகையில் இங்கு இன, மத சகவாழ்வு பல்வகைமை மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றது.

அதனால் இங்கு பெற்றுக் கொண்டுள்ள அனுபவங்களையும் முன்மாதிரிகளையும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் குறிப்பாக மியான்மார் நாட்டுக்கும் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன். இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கும், இந்தியாவுக்கும் சென்ற பின்னர் மியான்மர் நாட்டுக்கே பயணமாக இருக்கின்றேன்.

கேள்வி: நிறைவாக நீங்கள் இந்நாட்டு மக்களுக்கு கூறவிரும்புவதென்ன?

பதில்: இலங்கை ஒரு தீவு நாடாக இருந்த போதிலும் இங்கு மிகவும் பண்பான மனித நேயம் மிக்க மக்கள் வாழுகின்றனர். நான் இங்கு வருகை தந்தது முதல் இரண்டொரு வாரங்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களுடன் அறிமுகமாகி அளவளாவினேன். அதனூடாக இந்நாட்டு மக்கள் நல்ல மனிதர்கள், பண்பாளர்கள், உபசரிப்பில் உயர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். இந்நாட்டு மக்களின் சகவாழ்வும் நல்லிணக்கமும் அந்நியோன்ய வாழ்க்கை அமைப்பும் உலக சமாதான சகவாழ்வுக்கு நல்ல முன்மாதிரியாகும். இந்த முன்மாதிரி ஏனைய பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். சமாதானம், சகவாழ்வு தொடர்பில் இங்கு நிறையப் படிப்பினைகளைப் பெறலாம். இருந்த போதிலும் இங்குள்ள சமாதான சகவாழ்வு வாழ்வொழுங்கு குறித்து உலகின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிறைய அறியாதுள்ளனர் எனக் கருதுகின்றேன்.

அதனால் இந்த சமாதான சகவாழ்வு வாழ்வொழுங்கின் அனுபவங்கள் குறித்து உலகின் ஏனைய பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளேன். அதேநேரம் இந்த சமாதான சகவாழ்வு நிலைமை இந்நாட்டில் மேலும் வலுப்பெறவும் நீடித்து நிலைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

நேர்காணல் -:
மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...