நாட்டுக்கு பிழையான முன்மாதிரியை வழங்கும் சபாநாயகரின் செயற்பாடு | தினகரன்

நாட்டுக்கு பிழையான முன்மாதிரியை வழங்கும் சபாநாயகரின் செயற்பாடு

தென்னாசியப் பிராந்தியத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஜனநாயக விழுமியங்களைக் கடைபிடித்துவரும் நாடே இலங்கையாகும். இந்நாடு ஜனநாயக விழுமியங்களை கடைபிடித்து வருவதோடு அதனை மேம்படுத்தியும் வருகின்றது. இந்த ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்கு நாட்டின் தலைவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்றனர். இந்தப் பாரம்பரியம் தான் இற்றைவரையும் பேணப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அரசியலமைப்பில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஒக்டோபர் 26ஆம் திகதி நியமித்தார். அதனைத் தொடர்ந்து யதார்த்தமான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை நவம்பர் மாதம் 16ம் திகதி வரை அவர் ஒத்திவைத்தார். இந்த அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

இருந்த போதிலும், 'சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு சவால்விடும் வகையில் விடுத்திருக்கும் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது மாத்திரமல்லாமல் மக்களை குழப்பிவிடும் வகையிலும் அமைந்துள்ளது' என்று வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்திருக்கின்றார்.

சபாநாயகரானவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுபவராவார். அவர் நடுநிலையானவராகவும், பக்கம் சாராதவராகவும் அரசியமைப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அவர் எந்த சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக செயற்பட முடியாது. இந்த ஒழுங்கு தான் இலங்கையிலும் ஜனநாயகப் பாரம்பரியங்களைக் கடைபிடிக்கும் நாடுகளிலும் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இருந்தும் தற்போதைய சபாநாயகரின் அண்மைய நடவடிக்கைகள் ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கு முரணாகவும் அரசியலமைப்பை மீறும் வகையிலும் அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கும் இந்நாட்டில் சபாநாயகரின் இந்நடவடிக்கைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பிழையானதும் தவறானதுமான முன்மாதிரியை வழங்கக்கூடியது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

'ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை பிரதமராலோ, சபாநாயகராலோ ஒருபோதும் கூட்ட முடியாது. அதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் அவர்களுக்கில்லை. இவ்வாறான நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் உத்தியோகப்பற்றற்ற சந்திப்பை சபாநாயகர் நடாத்தியமை தவறான செயல்' என்று துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டிருக்கின்றார். இதுவும்கூட சபாநாயகர் ஒருவருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அப்பால் சென்ற செயற்பாடாகவே அமைந்துள்ளது.

ஜனநாயக நாடொன்றில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதென்பது ஒரு புதிய விடயமல்ல. அந்தவகையில் இந்நாடு சுதந்திரமடைந்தது முதல் இற்றைவரையும் 42 தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1948 முதல் 1978 வரை 21 தடவைகளும், 1978 முதல் இன்று வரை 21 தடவைகளும் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சபாநாயகர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார போன்றோர் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டத்துறை நிபுணர்களில் ஒருவரும் அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷ, 'சபாநாயகரின் நிலைப்பாடு மக்களைக் குழப்பிவிடும் செயற்பாடாகவே உள்ளது. இதன் விளைவாக ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்கவேண்டும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் நாட்டின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பங்களிக்க வேண்டிய சபாநாயகர் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு முரணாக செயற்பட்டு பிழையான முன்மாதிரியை நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கக்கூடாது என்பதுதான் மக்களின் வேண்டுதலாக உள்ளது. ஏனெனில் தவறான முன்மாதிரியை வழங்குவதன் மூலம் நாடும், மக்களும் பிழையான வழியில் இட்டுச்செல்லப்படவே வழிவகுக்கும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட இடமளித்திடலாகாது.

அதனால் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கொண்டுள்ள அதிகாரங்களையும், சபாநாயகருக்குள்ள அதிகாரங்களையும் அறிந்து பக்கம் சாராது நடுநிலையாக செயற்பட வேண்டியது சபாநாயகர் பதவியில் இருப்பவரின் கடமையாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்படவே கூடாது.

ஆகவே சபாநாயகர் தமக்குள்ள பொறுப்புக்களுக்கும் அதிகாரங்களுக்கும் அப்பால் சென்று தன்னிச்சையாக செயற்பட முயற்சிப்பது நாட்டின் ஜனநாயக விழுமியங்களை சீர்குலைக்க வழிவகுக்கும். அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு சபாநாயகர் ஒருபோதும் உடந்தையாகி விடக்கூடாது. பல தசாப்தங்களாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டுவரும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்ந்தும் வலுவுடன் நிலைத்திருக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே சபாநாயகர் பொறுப்புக்களை உணர்ந்து நாட்டினதும் மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அப்போது முரண்பாடுகள் தோற்றம்பெற வழியிருக்காது.


Add new comment

Or log in with...