ஐ.தே.க ஆதரவாளராகவே செயற்படும் சபாநாயகர் | தினகரன்

ஐ.தே.க ஆதரவாளராகவே செயற்படும் சபாநாயகர்

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சபாநாயகராக அல்லாது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவே செயற்படுகின்றார்.

அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அரசியல் ரீதியில் பார்த்தால் வாக்களித்த மக்கள் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரகுமார் குஜ்ரால் ஒருமுறை ஒரு முக்கியமான விடயமொன்றை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தினார்.

அவருடைய அந்த அறிக்கையின்படி ஆசியாவின் பாராளுமன்ற முறைமையில் ஜனநாயகம் தொடர்பில் நோக்கினால் அதில் இரண்டு நாடுகளையே முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

ஒன்று இந்தியா. மற்றது இலங்கையாகும்.

இந்தியாவை விட அதிகமான மரபு இலங்கைக்குள்ளது. இதற்குக் காரணம் எமது பாராளுமன்ற முறைமைகள் இந்தியப் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களை விட சற்றுப் பழைமையானவை. தற்போது நாம் பாராளுமன்ற முறைமை, ஜனநாயகம் மற்றும் இறைமையைப் பாதுகாத்தல் போன்ற சவால்களையே எதிர்கொண்டுள்ளோம்.

பாராளுமன்றம் செயற்படுவதானது அரசாங்கம் அங்கீகரித்த அரசியலமைப்பின் ஒவ்வொரு சரத்தின்படியேயாகும். இதற்கிணங்க, எமது பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு வெளிப்படுத்தும் மூன்று முக்கிய துறைகளைக் குறிப்பிட முடியும். அது நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றமாகும். எமது அரசியலமைப்புக்கிணங்க சபாநாயகர் மூன்றாவது பிரஜையாவார்.

நாட்டின் முதற்பிரஜை ஜனாதிபதியாவார். இரண்டாவது பிரஜை பிரதமர் என்பதுடன் சபாநாயகர் மேற்படி இரண்டு பிரதான பதவிகளுக்கு அடுத்ததாகவே உள்ளார்.

அரசியலமைப்புக்கிணங்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் பிரதமரை நீக்க முடியும் என்பதுடன் புதிய பிரதமரொருவரையும் நியமிக்க முடியும். பாராளுமன்ற அமைச்சரவையை மாற்றுவதற்கும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கும் முடியும். பாராளுமன்றத்தை மீளக் கூட்டவும் முடியும். அது தொடர்பில் சவால் விடும் நபர்கள் இருக்க முடியாது. நாட்டின் அரசியலுக்கிணங்க வாக்காளர்களால் மட்டுமே ஜனாதிபதிக்கு சவால் விட முடியும். இதைப் புரிந்து கொள்ளாமலேயே சபாநாயகர் செயற்படுகின்றார்.

எமது சபாநாயகர் நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த அறிக்கையின்படி சபாநாயகர் அவரது அதிகாரத்தைப் பாவித்து வீழ்த்தப்பட்டுள்ள அரசாங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதே நோக்கமெனத் தெரிகின்றது. அது அவரால் செய்யக் கூடிய காரியமல்ல. அவரது அறிக்கையில் மக்களை பிழையாக வழி நடத்தும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(1) சபாநாயகர் பழைய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்கின்றார்.

(2) ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மையுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

(3) ஜனாதிபதியின் செயற்பாடுகள் தவறு எனச் சுட்டிக்காட்டுகின்றார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தற்போதைய நிலைமையை விளக்கி ஐ.தே.கட்சிக்கு 116 ஆசனங்கள் இருப்பதாகக் கூறுகின்றார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனத்தை சவாலுக்குட்படுத்துகின்றார். இதிலிருந்து சபாநாயகர் பாரபட்சமானவர் என்பது தெரிகிறது. அத்துடன் அரசியல் இலாபத்துக்காக பொய் எண்ணிக்கைகளை முன்வைக்கிறார். 116 பேர் ரணில் விக்கிரமசிங்கவோடு இருப்பதாக அவர் கூறினாலும் அவருடன் 96 பேரே உள்ளனர். எதிர்காலத்தில் அதிலும் மாற்றம் ஏற்படலாம் என்று நாட்டின் அரசியல்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


Add new comment

Or log in with...