தீபத்திருநாளில் அனைவர் வாழ்விலும் ஒளி பிறக்கட்டும்! | தினகரன்

தீபத்திருநாளில் அனைவர் வாழ்விலும் ஒளி பிறக்கட்டும்!

இந்துக்களின் தீபத்திருநாள் இன்றாகும். உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையை இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

உலகில் பல நாடுகளில் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களது தாய்மொழியாக பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற போதிலும், இந்து சமய வணக்க முறையும் சமய பாரம்பரியங்களும் ஒன்றாகவே காணப்படுகின்றன. தீபாவளிப் பண்டிகையானது உலகிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் பொதுவானதொரு பண்டிகையாகவே விளங்குகின்றது. தீபம் என்ற சொல்லில் இருந்தே தீபாவளி என்ற சொல் பிறந்தது. ‘ஆவளி’ என்பது ஒன்றன்பின் ஒன்றான வரிசையைக் குறித்து நிற்கும்.

தீபங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஏற்றி கொண்டாடப்படுகின்ற ஒரு திருநாள் என்பதனால் ‘தீபாவளி’ என்ற சொல் இன்றைய பண்டிகைக்கு வந்திருக்க வேண்டும் என்பதே ஆன்றோரின் நம்பிக்கையாகும். தீபங்களை ஏற்றிக் கொண்டாடப்படுவதால் தீபாவளியானது ஒரு மகிழ்வுக் கொண்டாட்டமாகவே தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அதாவது மக்கள் தங்களைப் பீடித்திருந்த துன்பம் என்ற இருள் அகன்று, ஒளி தோன்றியமையை நினைவு கூருவதற்காக இன்றைய தினத்தைக் கொண்டாடி வந்துள்ளனர். ஆயிரமாயிரம் ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக இப்பண்டிகை இவ்விதம் கொண்டாடப்பட்டு வருவதாக தமிழர்களின் பண்டைய நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

உலகெங்கும் பின்பற்றப்படுகின்ற மதங்களில் இந்து சமயம் தனித்துவம் மிகுந்ததாகப் போற்றப்படுகின்றது. ‘ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து மதம்’ என்று எமது ஆன்றோர் கூறியிருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக சிந்துசமவெளி நாகரிகத்தை வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். கிறிஸ்துவுக்கு முற்பட்ட சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதியில் நிலவிய நாகரிகமாக சிந்துவெளி நாகரிகம் விளங்குகின்றது.

சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் எனவும், அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றி வாழ்ந்ததாகவும் வரலாற்றுத்துறை நிபுணர்களின் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. சிந்துவெளியில் கிடைக்கப் பெற்ற வரலாற்று மூலாதாரங்கள் மீதான ஆய்வுகளும், இந்து கடவுளர்களின் திருவுருவச் சிலைகளும் இதற்கான சான்றுகளாகும்.

இந்து மதத்தின் தொன்மையும், அம்மதம் எல்லை கடந்து விசாலமாக எங்கும் பரவியிருந்தமையும் இதனால் புலப்படுகின்றது.

இதுபோலவே இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளும் மிகத் தொன்மையானவையென்பதை இலக்கிய மூலாதாரங்கள் நிரூபிக்கின்றன. இப்பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே இன்றைய தீபத்திருநாள் விளங்குகின்றது.

மனிதகுலம் அனுபவித்த நீண்ட கால துன்பங்கள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் பிறந்த நாள்தான் தீபாவளி என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும். எனவேதான் வருடாந்தம் ஒவ்வொரு தீபத்திருநாளன்றும், வாழ்வில் புதியஒளி பிறக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இறைவனை இறைஞ்சுகின்றனர்.

அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று விசேட வழிபாடு நடத்துகின்றனர். தங்களது உறவினர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். சுவைமிகு உணவுப் பண்டங்களைத் தயாரித்து உற்றார் உறவினர்கள் சகிதம் உண்டு களிக்கின்றனர்.

இந்தியாவில் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்களின் பூர்வீகம் இந்தியா ஆகும். அங்கிருந்தே இந்துக்களின் அனைத்து பண்டிகைகளும் பாரம்பரியங்களும் உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டன என்பதே அறிஞர்களின் கருத்தாகும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பன்னெடுங் காலமாக பரம்பரை பரம்பரையாக ஏராளமான தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் சமூகம் இரு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவர்களது வாழ்வு அன்று தொடக்கம் இன்று வரை இருள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தின் போது, மலையகப் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இவர்கள்.

இரு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து எமது நாடு விடுதலை பெற்று எழுபது வருடங்கள் கடந்து விட்டன. நாட்டில் மாற்றங்களும், அபிவிருத்திகளும் ஏற்பட்டு விட்ட போதிலும், மலையகத்தில் வாழ்கின்ற அம்மக்களின் வாழ்வு இன்னுமே இருள் சூழ்ந்ததாகவே உள்ளது.

தோட்டங்களில் உழைத்து உழைத்து தங்களையே தேய்த்துக் கொண்டு நாட்டுக்கு அந்திய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் அம்மக்கள் அன்றாட ஜீவனோபாயத்துக்கே போதாத சிறிய வேதனத்தையே இன்னும் பெற்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத அவர்களது அவல வாழ்வுக்கு விரைவில் முடிவு எட்டப்பட வேண்டுமென இன்றைய தீபத்திருநாளில் பிரார்த்திப்போம்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் துன்பம் அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தொடருகின்றது. வடக்கு கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற தமிழினம் கடந்த அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றது.

தமிழினத்தின் அன்றைய அரசியல் தலைவர்கள் அரசியல் உரிமை கோரி சாத்வீகமான முறையில் நடத்திய போராட்டங்கள் எதுவுமே பலன் தரவில்லை. அதன் பின்னர் அம்மண்ணில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமானது வெறுமனே அழிவுகனை மாத்திரமே பலனாகத் தந்தது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான தாகம் இன்னும் தணியாததாகவே இருக்கின்றது.

ஆட்சி முறையில் சமஉரிமை கோரும் இப்போராட்டம் முடிவின்றித் தொடருவது எமது தாய்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே இருந்து வருகின்றது. சர்வதேச ரீதியிலும் எமது நாடு அவப்பெயரையே சந்தித்து வருகின்றது.

எமது நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமென இன்றைய தீபத்திருநாளில் பிரார்த்திப்போம். நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் எமது நாட்டில் நிரந்தர ஐக்கியம் ஏற்பட வேண்டுமென அனைவரும் வேண்டிக் கொள்வோம்.

கடந்தகால கசப்புகள் எம்மை விட்டு அகலட்டும்; துன்பங்கள் அனைத்தும் நீங்கட்டும்; இன்றைய தீபத்திருநாள் அனைவர் வாழ்விலும் ஒளியைத் தருகின்ற ஆரம்பமாக அமையட்டுமெனப் பிரார்த்திப்போம்!


Add new comment

Or log in with...