கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள் | தினகரன்

கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள்

நூற்றாண்டு கால மக்கள் பணியில் அஞ்சல் சேவை

'கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் அண்மையில் போட்டீர்களா?' என யாராவது வினவினால் நீங்கள் சங்கடத்துக்கு உள்ளாவீர்கள்.

ஏனென்றால் இன்று கடிதம் மூலமான தொடர்பாடல் சட்டத் தேவைகளுக்கோ, அரச காரிய நடவடிக்கைகளின் போது இரண்டு நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கோ மாத்திரம்தான் பயன்படுத்தப்படுகின்றது.

பரீட்சைகள் அல்லது அரச நடவடிக்கைகளுக்கான தபால்களையும் தபால் நிலையங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்கின்றோம். அதனால் பாதையோரம் இருக்கும் தபால் பெட்டியில் மிக அபூவர்மாகவே தபால்களைப் போடுகின்றோம்.

ஆனால் வீதியோரங்களில் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக தபால் பெட்டிகள் இன்னும் காணப்படுகின்றன. அவை நீண்ட காலமாக தமக்கு வழங்கப்பட்ட கடமையை சரியாக நிறைவேற்ற கடிதங்களை எதிர்பார்த்து வாயைத் திறந்தபடி நிற்கின்றன.

இலங்கை தபால் திணைக்களத்தினால் கிராமமோ நகரமோ எந்த எல்லையும் இல்லாமல் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் சேவைக்காக தபால் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல வகை உள்ளன.

அறுகோண வடிவிலான கொங்கிறீட் தபால் பெட்டிகளையும் ஆங்காங்கே காணலாம். இரும்பு அல்லது உருக்கிலான தபால் பெட்டிகளும் உள்ளன. சில இடங்களில் தூண் ஒன்றில் அமைந்த சிறிய பெட்டிகளும் அபூர்வமாகக் காணப்படுகின்றன.

இலங்கை பூராவும் தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. அது தபால் காரியாலயங்களுக்கே உரிய பொதுவான நிறமாகும் (Post Office Red).

ஆனால் கொழும்பு நகர எல்லையில், பிரதான தபால் காரியாலயத்தில் பல நிறங்களிலான தபால் பெட்டிகளைக் காணலாம். பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களின் தூரத்துக்கு அமைய பெட்டிகளின் நிறங்கள் காணப்படும். அத்துடன் இலகுவாக கடிதங்களைப் பிரிப்பதற்கும் வர்ண தபால்பெட்டிகள் உதவுகின்றன.

நீங்கள் தபால் பெட்டிகளை அவதானித்திருந்தால் தபால் பெட்டிகளில் பல குறியீடுகள், அறிவித்தல்களைக் காணலாம். இலங்கை பூராவும் குறிப்பாக கொழும்பு நகரில் அமைந்துள்ள தபால் பெட்டிகளைப் பற்றி ஏராளமான விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

தபால் அல்லது அரச இலச்சினை, கடிதங்கள் எடுக்கப்படும் நேரங்கள் என்பன குறிப்பிடப்படுவது பொதுவான அம்சமாகும். ஆனால் அந்த தபால் பெட்டி எப்போது அமைக்கப்பட்டது என்பதை இலச்சினை, சுதந்திரத்தின் பின்னரான குடியரசு இலச்சினை, தற்போதைய அரச இலச்சினை என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சில தபால் பெட்டிகளில் பல விசேட அம்சங்களை அவதானிக்கலாம். அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் குறியீடுகள் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் பயணம் செய்யும் பாதையில் கீழ்க்கண்ட ஆங்கில எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவா என நோக்குங்கள்.

‘ER’ என்றால் எட்வர்ட் அரசரின் ஆட்சிக் காலம். ‘GR’ என்றால் ஜோர்ஜ் அரசரின் ஆட்சிக் காலம். ‘VR’ என்றால் விக்டோரியா மகாராணியின் காலம் என அறிந்து கொள்ளலாம்.

VI வது ஜோர்ஜ் அரசர் காலம் என்பதைக் குறிப்பிடும் உரோம இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட தபால் பெட்டிகளையும் நகரங்களில் காணலாம்.

இந்த அரசாட்சிக் காலங்கள் மூலம் இன்றும் பாவனையில் இருக்கும் தபால் பெட்டிகளின் சரித்திர காலம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். தொல்பொருளியல் கட்டளைச் சட்டம் மூலம் 100 வருடங்களுக்கு மேற்பட்ட புராதான பொருட்கள் மற்றும் இடங்களின் பாதுகாப்புக்கு விசேட சட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால் உங்கள் கடிதங்களை எதிர்பார்த்து பாதையோரம் காத்திருக்கும் தபால் பெட்டிகளுக்கு வருடத்துக்கு ஒரு முறை தபால் திணைக்களம் வர்ணம் பூசுவது மட்டுமே நடைபெறுகின்றது.

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள தபால் பெட்டிகளின் பொறுப்பு டீ. ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிவர்த்தனைக்கே உரியது. தபால் பெட்டிகளின் சாவிகள் தபால் சேகரிக்கும் காரியாலயங்களின் பொறுப்பிலேயே இருக்கும். தபால் பெட்டியின் அருகில் உள்ள இடத்தை துப்புரவாக வைப்பதும் அந்த காரியாலயங்களின் கடமையாகும்.

தபால் பெட்டியின் சாவி தொலைந்து போனால் அதைக் கண்டெடுத்தவர் காரியாலயத்தில் ஒப்படைக்கும் போது பரிசு வழங்கும் வழக்கமும் முன்னர் தபால் காரியாலய சட்டத்தில் காணப்பட்டுள்ளது. சாவிப் பலகையில் இணைத்துள்ள சிறிய அறிவித்தல் மூலம் (Reward Lable) இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது.

தபாலை இடும் பணிக்கு துணைபுரியும் தபால் பெட்டியை மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுவது, மரண அறிவித்தல் ஒட்டுவது, குப்பைகளை மறைப்பது போன்ற செயல்களுக்கு பாவிப்பது பெரும் குற்றமாகும். அதேபோல் எமது பரம்பரை உரிமையை இழப்பது போன்றதாகும். ஆகவே நீங்கள் செல்லும் பாதையிலுள்ள தபால் பெட்டிகளை அவதானித்து அதன் பெறுமதியை அறிந்து கொள்ள வேண்டும். அதனை பாதுகாப்பதோடு அதன் பெருமையை உலகிற்கு அறியத் தர வேண்டும்.

ரவீந்திர குணரத்ன


Add new comment

Or log in with...