மக்களின் நலன்களுக்கே இனிமேல் முன்னுரிமை | தினகரன்

மக்களின் நலன்களுக்கே இனிமேல் முன்னுரிமை

நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வார இறுதியில் அரசாங்கத்தில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பதோடு புதிய அமைச்சர்களும், அமைச்சுக்களுக்கான செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக முகம்கொடுத்து வந்த அசௌகரியங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் கருத்தில் கொள்ளாது தம் இஷ்டப்படி செயற்படக் கூடியவாறு முன்னைய ஆட்சி இருந்தது. அதனால் மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்துமாறு அவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கவும் ஜனாதிபதி தவறவில்லை. இருந்த போதிலும் அவர்களது அசிரத்தை முற்றுப்பெறாது நீடிக்கவே செய்தது. இந்நிலைமையையிட்டு ஜனாதிபதி பெரிதும் கவலை கொண்டிருந்தார்.

குறிப்பாக இவருடத்தின் ஆரம்பம் முதல் பொருட்களின் விலைகள் அடிக்கடி உயரும் நிலை தோற்றம் பெற்றது. எரிபொருளுக்கு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனூடாக மக்களே நன்மை பெறுவர் என்று முன்னாள் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்கும் வரையும் இவ்விலைச்சூத்திரத்தின் மூலம் மக்களுக்கு எவ்விதப் பிரதிபலன்களும் கிடைக்கப் பெறவில்லை. விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது ஒரு மாதம் எரிபொருளின் விலை அதிகரித்தால் மறுமாதம் எரிபொருளின் விலை குறைவடையும் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். ஆனால் விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விலைகள் குறைவடையவில்லை.

இவை இவ்வாறிருக்க, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சகல பொருட்களதும் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லத் தொடங்கின. அதனைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அந்த விலையேற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படாதிருப்பதற்கு ஏற்ற நிவாரணங்களை வழங்குவதற்கோ அவ்வாட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் முகம்கொடுக்கும் பொருளாதார அசௌகரியங்கள் குறித்து கிஞ்சித்தும் கவனம் செலுத்த அவர்கள் தயாராக இருக்கவில்லை. அத்தோடு அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் கூட ஒழுங்குமுறையாக முன்னெடுக்கப்படவில்லை.குறிப்பாக ஒரு அபிவிருத்தித் திட்டத்திற்கான கேள்விப் பத்திரம் பல கைகளுக்கு மாற்றப்படும் அளவுக்கு நிலைமை காணப்பட்டது.

அதேநேரம் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்பட்டு வந்ததால் நாட்டு மக்களின் கடும் அதிருப்திக்கு கடந்த ஆட்சியாளர்கள் உள்ளாகினர். தாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார அசௌகரியங்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு மக்களே ஜனாதிபதியிடம் கோரும் அளவுக்கு நிலைமை வளர்ச்சியடைந்தது.

இதன் வெளிப்பாடாகத்தான் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. அந்தத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மக்கள் அரசாங்கத்துக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கியிருந்தனர்.

 அத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கூறி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கினார். இருந்த போதிலும் ஜனாதிபதியின் ஆலோசனைகளையோ அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வாயிலாக மக்கள் வழங்கிய செய்தியையோ கருத்திற் கொள்ளவும் கடந்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. மாறாக தம் இஷ்டப்படியே செயற்பட்டனர்.

இதன் விளைவாக வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது. இதற்கு வெவ்வேறு விதமான காரணங்களைக் கூறினர். அதனூடாக அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொண்டனர். மாறாக மக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு நிவாரணம் அளிப்பதில் அவர்கள் சிறிதளவேனும் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் கடந்த ஆட்சியாளர்களின் தன்னிச்சையான போக்கினால் மக்கள் முகம்கொடுத்திருக்கும் பொருளாதார அசெளகரியங்களையிட்டு ஜனாதிபதி பெரிதும் கவலை கொண்டிருந்தார். அவ்வாட்சியாளர்கள் சில சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக மேற்கொண்ட விலை அதிகரிப்புக்களை தன்னதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் இரத்து செய்தார். மக்கள் பாதிக்கப்படுவதை சற்றும் விரும்பாத ஜனாதிபதி கடந்த ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையிலும் அவர்களது செயற்பாடுகளிலும் பெரிதும் அதிருப்தியடைந்தார்.

இவ்வாறான நிலையில்தான் மக்களின் நலன்களுக்கும், நாட்டின் சுபீட்சத்துக்கும் முன்னுரிமை அளித்து புதிய பிரதமரையும் அமைச்சர்களையும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கையை நாட்டு மக்கள் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் பெரிதும் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியின் இந்நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மக்கள் பொருளாதார அசெளகரியங்கள் இன்றி வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதையும், நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதையும் நோக்காககவும் இலக்காகவும் கொண்டதாகும்.

ஆகவே புதிய பிரதமரும் அமைச்சர்களும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவர் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்நம்பிக்கை சிறிதளவும் வீண்போக புதிய பிரதமரும், அமைச்சர்களும் இடமளிக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.


Add new comment

Or log in with...