வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் தீர்க்கமான நடவடிக்ைக | தினகரன்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் தீர்க்கமான நடவடிக்ைக

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் தேசிய ஏர்பூட்டு விழா திஸ்ஸமஹராம சந்தகிரிகொட வயல்வெளியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஆரம்ப காலம்தொட்டு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நாட்டில் ஏர்பூட்டு விழா ஒர் பாரம்பரிய மரபாகும். இம்மரபு தேசிய விழாவாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இவ்வருட ஏர்பூட்டு விழா இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தேசிய அரசியலில் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து இந்நாட்டின் 22வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்கின்றார்.

இத்திடீர் மாற்றங்கள் உள்நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒன்றாக மாறியுள்ளன.இவ்வாறான நிலையில் கடந்த ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க மேற்கொண்ட முயற்சிகளையும் அர்ப்பணிப்புகளையும் எடுத்துக் கூறினார். அதேநேரம் தற்போது நாட்டு மக்கள் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு 2015 பெப்ரவரி மாத பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடியே அடிப்படைக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இந்த ஏர்பூட்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, மற்றொரு முக்கிய விடயத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார். அதுதான் சுமார் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கவென கிடைக்கப் பெற்ற நிதியை உரிய முறையில் பயன்படுத்தி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க கடந்த ஆட்சியாளர்கள் தவறினர் என்ற விடயமாகும்.

அதாவது 'வடபகுதி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக கிடைக்கப் பெற்ற வெளிநாட்டு உதவியையும் வெளிநாட்டுக் கடனையும் எந்த அமைச்சு பொறுப்பேற்பது? எந்த அமைச்சின் கீழ் இதனைக் கொண்டு வருவது? என கடந்த மூன்றரை வருடங்களாக அமைச்சரவையில் இழுபறி நிலையே நிலவியதே தவிர, அம்மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கவில்லை' என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தில் பலவீனங்கள் மலிந்து காணப்பட்டமைக்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணமாகும். வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்காது காலம் கடத்துவதிலேயே கடந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

ஜனநாயக விழுமியங்களை கடைப்பிடிக்கும் நாடொன்றில் மக்கள் தம் வாக்குரிமையைப் பாவித்து மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் 2015இல் பதவிக்கு வநத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் மீது வடக்கு மக்கள் உச்ச எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இருந்த போதிலும் கடந்த ஆட்சியாளர்கள் ஜனாதிபதியின் ஆலோசனைகளையும் கட்டளைகளையும் உரிய ஒழுங்கில் நிறைவேற்றுவதில் கவனயீனமாக நடந்து கொண்டுள்ளனர்.

வட பகுதி மக்களுக்கு வீடுகளை பெற்றுத் தருவதாக 2015 முதல் கூறிய போதிலும், கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் அம்மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அது வெறும் பேச்சாகவே இருந்து வந்துள்ளது. இது வடக்கு மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும். ஆனால் அம்மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனைக் கடந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை.

மேலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதாகவும் 2015இல் வாக்களிக்கப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்நடவடிக்கைகள் மந்தகதியிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஸ்தம்பித நிலையிலும்தான் காணப்பட்டு வந்தன. இவ்வாறான நிலையில் இவ்விடயத்தில் நேரடியாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, வடக்குகிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியதோடு அதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குமாறு ஆளுநர்களுக்கு பணிப்புரையும் வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகளை மாத்திரமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களினதும் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்கவும் பெரிதும் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாகவே நாட்டு மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவற்றில் பொருளாதார நெருக்கடி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்கோ மக்களை இந்நெருக்கடியிலிருந்து விடுவிக்கவோ கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் ஊடாக தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது அரசியல் பயணத்திற்கு பொருத்தமான ஒருவரை பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களது தேவைகளும் எதிர்பார்ப்புகளும் உரிய நேரகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். மக்களுக்கு சேவையை ஆற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது.

அதனால்தான் ஜனாதிபதி தமது அரசியல் பயணத்திற்கேற்ப விரைவாகவும் வேகமாகவும் தீர்மானங்கள் எடுத்து துணிச்சலோடு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒருவரை பிரதமராக நியமித்திருக்கிறார். இது மக்கள் சேவையில் பாரிய திருப்புமுனையாகவும் மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அமையும் என்பதே மக்களின் நம்பிக்கையாகும்.


Add new comment

Or log in with...