Friday, March 29, 2024
Home » வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றம் வந்த விசேட ஆற்றல் கொண்ட சிறுவர்கள்

வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றம் வந்த விசேட ஆற்றல் கொண்ட சிறுவர்கள்

by Rizwan Segu Mohideen
December 5, 2023 12:43 pm 0 comment

2023 டிசம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடையோருக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, சுமார் 200 சிறுவர்கள் நேற்று (04) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.

இந்த சிறுவர்கள் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு வந்ததை அடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை வரவேற்று விசேட வாழ்த்துக்களை தெரிவித்தார். விசேட தேவையுடைய சிறுவர்கள் சுமார் 200 பேர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை வரலாற்றில் முதன்முறையாக நடந்த தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும் என்பதை நினைவுபடுத்திய சபாநாயகர், இந்த சிறுவர்கள் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து விசேட தேவையுடைய சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை அனைத்து வகையிலும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதனையடுத்து, இந்த சிறுவர்களுக்கு விசேட தேவையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (ஜனாதிபதி சட்டத்தரணி) விஜயதாச ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே ஆகியோரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் குறிப்பிடுகையில், விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, அதனை விரைவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் நினைவுபடுத்தினார்.

மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான உள்வாங்கப்பட்ட கல்வியை வழங்குவதற்கான சவாலை புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெற்றிகொள்ள முடியும் என கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன் மூலம் விசேட தேவையுடைய சிறுவர்கள் சாதாரண சிறுவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என கல்வி அமைச்சர் நினைவுபடுத்தினார். அத்துடன், சிறுவயதிலேயே குழந்தைகளிடம் தோன்றும் குறைபாடுகளைக் கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க பிரத்தியேக இடத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுடன் விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகளையும் சேர்த்து அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு வரி விதிப்பதை தவிர்க்கும் வகையில் வரிக் கொள்கை திருத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவினால் இந்த சிறுவர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாராளுமன்ற முறைமை தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விசேட தேவையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் (DOJF) தலைவர் ரசாஞ்சலி பத்திரகேவின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான வசதிகளை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT