சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் பயணம் தொடரட்டும்! | தினகரன்

சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் பயணம் தொடரட்டும்!

நாட்டில் கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமையன்று உருவான அரசியல் பரபரப்பு நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையுடன் ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அப்பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, இலங்கையின் அரசியல் உச்சக்கட்டப் பரபரப்புக்குச் சென்றிருந்தது. சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் இலங்கையின் அரசியல் விவகாரமே தலைப்புச் செய்தியாகிப் போனது.

பிரதமர் பதவியில் ஏற்பட்ட இம்மாற்றத்தை இலங்கையின் அரசியல் நெருக்கடியென்று சித்தரித்துக் காட்டுவதற்கு ஊடகங்களும் முயற்சித்ததைக் காணக் கூடியதாக இருந்தது. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களும் சுட்டிக்காட்டத் தவறியிருந்தன.

எனினும் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை நாட்டின் அரசியல் யாப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமென்பது தற்போது பெருமளவானோரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இவ்வாறான முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டமைக்கான நியாயபூர்வமான காரணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறியதன் பின்னர் இவ்விடயத்தில் மக்களுக்கு மிகுந்த தெளிவு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மூத்த அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்கள் போன்றோரெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை ‘துணிச்சலானதும் காத்திரமானதுமான முடிவு’ என்று விமர்சனம் செய்திருக்கின்றனர்.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதென அன்றைய வேளையில் மேற்கொண்ட தீர்மானத்தைப் பார்க்கிலும், கடந்த 26ம் திகதி மேற்கொண்ட தீர்மானம் மிகுந்த சவால் மிக்கதென ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணம் செய்வதில் ஜனாதிபதி எதிர்நோக்கிய சோதனைகள் எத்தகையவையென்பதை நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

கடந்த தேசிய அரசாங்கத்தில் தான் சந்தித்த சங்கடங்களை ஜனாதிபதி தனது உரையின்போது திறந்த உள்ளத்துடன் வெளிப்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

47 எம்.பிக்களை மாத்திரமே கொண்டிருந்த ஐ.தே.கவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை 2015 ஜனவரியில் பிரதமராக நியமித்த போதிலும், நல்லாட்சியின் எதிர்பார்ப்புகளை ரணில் விக்கிரமசிங்க துவம்சம் செய்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக மொத்தம் 49 அமைப்புகள் கூட்டாக ஒப்பந்தம் செய்து கொண்டு 2015 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டுச் செயற்பாடற்ற, முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்ட தன்னிச்சையான தீர்மானங்களின் விளைவாகவே மூன்றரை வருட காலமாக கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தொடர்ந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“எவ்வாறான குறிக்கோள்களுடன் 2015 ஜனவரியில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டோமோ, அக்குறிக்கோள்களை எட்ட முடியாதபடி ஊழல் மோசடிகள் தலைதூக்கிக் கொண்டன” என்று ஜனாதிபதி மைத்திரி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிகளின் உச்சக்கட்டமாக ‘மத்திய வங்கி மகாகொள்ளை’ அமைந்து விட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தையே அக்கொள்ளை சரிவடையச் செய்து விட்டதாகவும் ஜனாதிபதியின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அளித்த ஆணைக்கு மாறான விதத்தில் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றிருப்பின் எதிர்கால விளைவுகள் இன்னும் பாரதூரமாக அமைந்திருக்குமென்றே தெரிகின்றது. எனவேதான், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்மானித்தது.

கூட்டரசாங்கம் உடனடியாகவே பெரும்பான்மையை இழந்து போனதால், நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக பிரதமர் பதவியை ஏற்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கோட்பாடுகளில் வேறுபாடு கொண்ட இரண்டு தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயணிக்க முடியாதென்பதை இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரம் எமக்கெல்லாம் இப்போது புலப்படுத்தியுள்ளது.

அதேசமயம், ஒரே கோட்பாடு கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு சிரேஷ்ட தலைவர்களான மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து பயணிப்பதில் இனிமேல் தடையேதும் இருக்காதென்பதும் இப்போது புரிகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களையும் வெற்றி கொள்ளும் வகையில் இந்த ஐக்கியப் பயணம் தொடர வேண்டுமென்பதே பலரதும் விருப்பமாக உள்ளது.


Add new comment

Or log in with...