அரசியல் நெருக்கடி அல்ல! | தினகரன்

அரசியல் நெருக்கடி அல்ல!

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டரசாங்கத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியதையடுத்து நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் பரபரப்பு இன்னுமே தணியாமல் உச்ச கட்டத்தில் இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைக் கொண்ட தனிக் கட்சியோ அல்லது பல்கட்சிகளின் கூட்டணியோ அரசாங்கத்தை அமைக்கலாமென்பது ஜனநாயக நாடுகளில் நிலவுகின்ற அரசியல் பாரம்பரியம் ஆகும்.

இதற்கிணங்கவே 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கணிசமானோரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஏனைய சிறு கட்சிகளின் துணையுடன் ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்டனர். அவ்வேளையில் அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு அமைவாக நடந்த ஆட்சி மாற்றமே அதுவாகும்.

தேசிய அரசாங்கத்தின் பயணம் மூன்று வருடங்களும் பத்து மாதங்களும் நிறைவடையவிருந்த வேளையில், இலங்கையின் தேசிய அரசியலில் எதிர்பாராத விதமாக திடீர் மாற்றமொன்று கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டிருக்கிறது.

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிக் கொள்வதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று அறிவித்ததையடுத்து நாட்டின் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்துக்குச் சென்று விட்டது.

அரசிலிருந்து ஐ.ம.சு.முன்னணி திடீரென்று வெளியேறியதும் உடனடியாகவே தேசிய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை இழந்து போனது. தேசிய அரசில் எஞ்சியிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 106 ஆகக் குறைந்து போனது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்படி 106 எம்.பிக்களையும் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதென்பது முடியாத காரியமாகும்.

அதேசமயம், கடந்த மூன்றரை வருட காலத்துக்கு மேலாக இரு கூறுகளாகப் பிரிந்து நின்ற ஐ.ம.சு.முன்னணியினர் மீண்டும் ஓரணியாகத் திரண்டு கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியினால் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடியதாக இருந்ததனால் அம்முன்னணியினால் முன்னிறுத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாட்டின் அரசியலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்துள்ள இம்மாற்றம், அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு அமைவானதாகும். அதாவது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமையும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையும் அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடுகள் அல்ல... அம்மாற்றமானது அரசியல் பழிவாங்கலும் அல்ல... நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே இம்மாற்றம் நடந்துள்ளது.

அறுதிப் பெரும்பான்மையை இழந்து போன அரசாங்கம் பதவியிழப்பதும், பெரும்பான்மை ஆசனங்களை நிரூபிக்கின்ற மற்றைய அணியானது அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதும் உலக அரசியல் வரலாற்றில் புதுமையானவையல்ல. இவ்வாறான அரசியல் மாற்றம் இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் நடந்துள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவாக இடம்பெற்றுள்ள மாற்றமொன்றை நாட்டின் அரசியல் நெருக்கடியென்று சித்திரித்துக் காட்டுவதற்கு எராவது முற்படுவார்களானால் அது பொருத்தமான கருத்தாக இருக்க முடியாது.

அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கமொன்று தனது பெரும்பான்மைப் பலத்தை இழந்து போகின்ற வேளையில், ஜனாதிபதிப் பதவியில் உள்ள எந்தவொரு தலைவரும் இவ்வாறானதொரு முடிவுக்கே வர முடியும். இலங்கையின் அரசியலமைப்பானது இம்முடிவுக்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து, பிரதமர் பதவியிலும் மாற்றம் வந்தமை தெரிந்த விடயமாகும். ஐ.ம.சு.முவும், ஐ.தே.கவும் ஒன்றிணைந்து கூடுதல் பெரும்பான்மையைக் காண்பித்ததனால் பாராளுமன்ற அதிகாரத்தை தேசிய அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டது. 47 ஆசனங்களை மட்டுமே வைத்திருந்த ஐ.தே.கவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

எனினும் ஐ.ம.சு.முன்னணி தற்போது 95 ஆசனங்களைக் கொண்டிருக்கின்றது. அதேசமயம் ஐ.தே.கவில் இருந்து 20 பேர் ஐ.ம.சு.முன்னணிக்கு வந்து சேர்ந்து கொண்டுள்ளதால் அதன் பலம் மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் 16ம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது, அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவோமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உறுதியுடன் கூறுகின்றனர்.

கடந்த நான்கு நாட்களின் நிகழ்வுப் போக்குகள் இவ்வாறிருக்கையில், நாட்டின் இன்றைய அரசியல் பரபரப்பை நெருக்கடியென்று திரிபுபடுத்த எவரும் முற்படலாகாது. அரசியலமைப்பின் பிரகாரமே அரசியல் மாற்றமொன்று நாட்டில் நடந்துள்ளது.

இதேவேளை புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை செயற்படத் தொடங்கியதும் இவ்வாரத்துக்குள் நாட்டின் அரசியல் பரபரப்பு சுமுக நிலைமைக்கு வந்து விடுமென எதிர்பார்க்கலாம்.


Add new comment

Or log in with...