Tuesday, April 23, 2024
Home » அதிவேக நெடுஞ்சாலைகள் எதனையும் குத்தகைக்கு விடும் தீர்மானம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைகள் எதனையும் குத்தகைக்கு விடும் தீர்மானம் இல்லை

by sachintha
November 23, 2023 6:55 am 0 comment

எந்தவொரு ஊழியரின் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது

 

அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார். அமைச்சின் அறிவித்தல் ஒன்றை நேற்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அறிவித்து விட்டு, அதற்கிணங்க இன்றைய தினம் (நேற்று) அவர்கள் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.

பிரவேசப் பத்திரங்களை வழங்கும் உபகரணங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது அவர்களது உரிமை. எனினும் சுகவீன விடுமுறையை எடுத்துக் கொண்டு பலவந்தமாக அனைத்து ஊழியர்களையும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இழுத்துள்ளார்கள். அது தவறு. அவர்கள் எடுத்துச் சென்றிருப்பது அரசாங்கத்தின் சொத்து என்பதால் அதனை மீண்டும் கையளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

பிரவேசப் பத்திரங்களை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை வாய்ப்பாக வைத்து மோட்டார் சைக்கிள்கள் இந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்குமானால் பெரும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அத்தகைய நிலையைத் தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு இழக்கப்படும் வருமானத்தை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT