Saturday, April 20, 2024
Home » இலங்கை கிரிக்கெட் தடை தொடர்பில் ஆராயும் ஐ.சி.சி சபைக் கூட்டம் இன்று

இலங்கை கிரிக்கெட் தடை தொடர்பில் ஆராயும் ஐ.சி.சி சபைக் கூட்டம் இன்று

by damith
November 21, 2023 6:00 am 0 comment

இலங்கை கிரிக்கெட் தடை குறித்து பரிசீலிக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் சபைக் கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பார்வையிட ஐ.சி.சியின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்த நிலையில் உலகக் கிண்ணம் நிறைவடைந்து ஒரு நாள் கழித்து இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனினும் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஐ.சி.சியின் காலாண்டுக் கூட்டம் மற்றும் குழு நிலைக் கூட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பார்வையிட இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஆகியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததோடு இலங்கையின் உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் இறுதிப் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஐ.சி.சி சபைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்து பிரதானமாக ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. இலங்கை கிரிக்கெட்டை ஐ.சி.சி கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இடைநிறுத்தியது.

ஓர் அங்கத்தவராக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்புகளை தீவிரமாக மீறி இருப்பதாக ஐ.சி.சி. குறிப்பிட்டிருந்தது.. குறிப்பாக, முகாமைத்துவ விடயங்களில் சுய அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் ஒழுங்குமுறை மற்றும்/ அல்லது நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய தவறி இருப்பதாகக் கூறப்பட்டது.

இதில் எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியை இலங்கை நடத்தவுள்ள நிலையில் தடைக்கு மத்தியில் அதனை தக்கவைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரியவருகிறது. அதேபோன்று இந்தத் தடைக்கான நிபந்தனைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு தொடர்பில் ஐ.சி.சி பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா செல்வாக்குமிக்க குரலாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. கடந்த மே மாதம் இலங்கைக்கான உண்மையை கண்டறியும் குழுவின் போது அவர் இந்த விடயத்தை ஆராய்ந்திருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வென்று எஞ்சிய ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்து முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபை ஒன்றை நியமித்திருந்தார்.

எனினும் அந்த இடைக்கால சபைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததோடு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகக் கோரும் தீர்மானம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஐ.சி.சி. இந்த இடைநிறுத்தத்தை ஓர் எச்சரிக்கையாக விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இந்த நடவடிக்கை இலங்கைக் கிரிக்கெட்டுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இலங்கை அணிக்கு எதிர்வரும் டிசம்பர் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளும் இல்லை. அதேபோன்று ஐ.சி.சி தனது அங்கத்துவ நாடுகளுக்கான வருடாந்த நிதியை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலேயே வழங்குகிறது.

ஐ.சி.சி முழு அங்கத்துவ நாடுகள் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில் மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக 2024–27 சுழற்சிக்கான வருவாய் பகிர்வு மற்றும் 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT