Friday, March 29, 2024
Home » மனிதப்பேரவலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று உலகநாடுகள் வலியுறுத்தல்!

மனிதப்பேரவலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று உலகநாடுகள் வலியுறுத்தல்!

காஸா மீது இஸ்ரேலினால் யுத்தம் தொடுக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு

by mahesh
November 8, 2023 6:26 am 0 comment

காசா மீதான யுத்தம் ஆரம்பமாகி நேற்றோடு (7.11.2023) ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலினுள் பிரவேசித்து 07.10.203 அன்று நடத்திய தீவிர தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் தொடுத்தது.

வான், கடல், நிலம் என மூன்று வழிகளின் ஊடாகவும் காஸா சுற்றிவளைக்கப்பட்டு பெருமெடுப்பில் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காஸாவுக்கான தண்ணீர், மின்சாரம், மருந்துப்பொருட்கள், எரிபொருள், உணவுப் பொருட்கள் என்பவற்றின் விநியோகத்தை முற்றாகத் தடுத்து நிறுத்திவிட்டே இந்த யுத்தத்தை இஸ்ரேல் நடத்துகிறது. இஸ்ரேலின் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட படையினர் நவீன ஆயுதங்களுடன் 23 இலட்சம் பலஸ்தீன மக்கள் வாழும் 365 சதுர கிலோ மீற்றர் கொண்ட காஸாவை சுற்றிவளைத்து இப்போரை முன்னெடுத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பீரங்கிகள், யுத்தவிமானங்கள் அடங்கலாக நவீனரக ஆயுதத்தளபாடங்கள் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தொடரான வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் என கடும் போருக்குள் தள்ளப்பட்டுள்ளது காஸா. அதனால் காஸா நிலமே சின்னாபின்னப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குண்டும் நெருப்புப் பிளம்பாக வெடித்துத் சிதறுகின்றன. யுத்தவிமானங்கள் நடத்தும் ஒவ்வொரு குண்டுத் தாக்குதலும் நிலத்தில் பாரிய குழியை ஏற்படுத்துகின்றது.

மக்கள் குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அம்புலன்ஸ் வண்டிகள் என எல்லாம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. தொலைத்தொடர்பு சேவை அவ்வப்போது முடக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லாத அதேநேரம் வைத்தியசாலைகளின் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கும் எரிபொருள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. சில வைத்தியசாலைகள் சூரியசக்தி மூலம் ஒரளவாவது மின்சாரத்தைப் பெற்று சில பகுதிகளாவது இயங்கின. ஆனால் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலினால் சூரியசக்தி கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய பேக்கரிகளும் குண்டுத்தாக்குதலுக்குத் தப்பவில்லை. காசா இரத்தத்தினாலும் கண்ணீராலும் தோய்ந்துள்ளது. எங்கும் மரணஒலம். மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். மரணபீதி காஸாவில் குடிகொண்டுள்ளது. காஸாவின் தற்போதைய நிலைமை மோசமான ஆரோக்கியப் பாதிப்புக்களை ஏற்படுத்துமென உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான கொடிய யுத்தம் ஆரம்பமானது முதல் இற்றைவரை 10,022 பேர் காஸாவிலும் 155 பேர் மேற்குக்கரையிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,145 பிள்ளைகளாவர். மேலும் 27,000 பேர் காயமடைந்துள்ளனரென பலஸ்தீன சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1,405 பேர் கொல்லப்பட்டதோடு 5,600 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு இராணுவத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த யுத்தத்தினால் காஸாவிலுள்ள 35 வைத்தியசாலைகளில் 16 வைத்தியசாலைகள் செயலிழந்துள்ளன. அத்தோடு அடிப்படை சுகாதார வசதிகளை வழங்கக்கூடிய 72 மருத்துவ கிளினிக்குகளில் 51 கிளினிக்குகள் செயலிழந்துள்ளன. 50 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்துள்ளன.

காஸா 23 இலட்சம் பலஸ்தீன் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். அவர்களில் 17 இலட்சம் ​பேர் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்ட அகதிகளாவர். இவர்கள் காஸாவிலுள்ள பாரிய 8 அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். அவற்றில் ஜபாலியாவில் 116,000 பேரும், சாட்டில் 90,000 பேரும், புரைஜ்ஜில் 90,000 பேரும், நுசெய்ரத்தில் 85,000பேரும், டெய்ர் அல் பலாஹ்வில் 26,000 பேரும், மகாஸீயில் 33,000 பேரும், கான் யூனுஸில் 88,000 பேரும் ரபாவில் 133,000 பேரும் தங்கியிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் பல முகாம்கள் இந்த யுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளன.

இந்த யுத்தம் காரணமாக ஏற்பட்டுவரும் சேதங்களும் அழிவுகளும் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மனித சமூகமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கிலும் மேலெழுந்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. ஒவ்வொரு ஆர்ப்பாட்ட ஊர்வலமும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸும் ஏனைய உலக தலைவர்களும் காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 120 நாடுகளின் ஆதரவுடன் காஸாவில் மனிதாபிமான உடனடி யுத்தநிறுத்தத் தீர்மானம் 27.10.2023 இல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருந்தும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினதோ, உலக நாடுகளதோ, மக்களதோ கோரிக்கைகளை கண்டுகொள்ளாத இஸ்ரேல், ஐ.நா. தீர்மானத்தையும் நிராகரித்தபடி யுத்தத்தை முன்னெடுத்துள்ளது.

ஐ.நா.வினதும் உலக நாடுகளதும் கோரிக்கையை மதிக்காத இஸ்ரேலின் போக்கு சர்வதேச மட்டத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போக்கை உலகில் வேறு நாடுகளும் உதாரணமாகக் கொள்ளுமாயின் ஐ.நா. சபை நிறுவப்பட்ட நோக்கத்தையே தவிடுபொடியாக்கிவிடும்.

இதேவேளை, இஸ்ரேலின் இப்போக்கு உலகளாவிய ரீதியில் கடும் விமர்சனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை சில நாடுகள் துண்டித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்நிலைமை தொடருமானால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்படலாம்.

அதேவேளை இந்த யுத்தத்தினால் 48 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

ஐ.நா.வின் கோட்பாடுகளையும் தீர்மானங்களையும் மாத்திரமல்லாமல் மனிதாபிமான சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் மதித்து செயற்பட இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று உலக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. காஸாவின் தொடருகின்ற மனிதப்பேரவலம் நிறுத்தப்பட வேண்டுமென்பதே அமைதி, சமாதானத்தை நேசிக்கும் அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT