Thursday, April 18, 2024
Home » அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு இடைக்கால தடை

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு இடைக்கால தடை

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
November 7, 2023 4:43 pm 0 comment

– எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நீதிபதி கேள்வி

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து இன்று (07) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், “அதிமுக பொதுச்செயலாளர் என என்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம், தள்ளிவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று (07) விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்?; நேரம் கேட்பீர்கள்?; எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT