இலங்கை ₋ -பங்களாதேஷ் 20க்கு-20 தொடர் சவாலாக அமையும் | தினகரன்

இலங்கை ₋ -பங்களாதேஷ் 20க்கு-20 தொடர் சவாலாக அமையும்

திசர பெரேரா

பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த முத்தரப்பு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று (15) ஆரம்பமாகவுள்ள 20க்கு 20 தொடர் சவாலாக அமையும் என இலங்கை ரி-20 அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான திசர பெரேரா தெரிவித்தார்.

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, ரி-20 தொடரிலும் சிறப்பாக விளையாடி அந்த தொடரையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக (13) நடைபெற்ற பயிற்சிகளின் பிறகு பங்களாதேஷின் டாக்கா ட்ரிபியூன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி – தோல்வி பற்றி முன்னரே எதிர்வு கூற முடியாது. ஆனால் அன்றைய நாளில் குறைந்த அளவு தவறுகளை விடுகின்ற அணிதான் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும்.

பங்களாதேஷ் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளதால் ரி-20 தொடரை கைப்பற்றும் நோக்கில் அனைத்துவித யுக்திகளையும் கையாளும். எனினும், நாளை நடைபெறவுள்ள முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்யும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் ரி-20 தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய திசர பெரேரா, அவ்வணிக்காக சிறப்பாக விளையாடி விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்ததுடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

”நான் பங்களாதேஷில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். அந்த அனுபவம் நிச்சயம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அணிக்கு மிகவும் பெறுமதிமிக்கதாக அமையும். அதிலும் கடந்த முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். எனவே நான் எப்பொழுதும் என்னுடைய திறமையில் மாத்திரம் நம்பிக்கை வைத்துள்ளேன். இதற்கு முன் ஏற்பட்ட தவறுகளையோ, தோல்விகளையோ நான் சிந்திக்கவே மாட்டேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம் எனவும் நான் நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில் உபாதைக்கு உள்ளாகியுள்ள பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் தொடர்பில் திசர கருத்து வெளியிடுகையில், “சகிப் மிகவும் திறமையான வீரர் என்பதை அனைவரும் அறிவர். அவரால் நிச்சயம் போட்டியின் போக்கையே மாற்றமுடியும். எனவே சகிப் அல் ஹசன் விளையாடாமை பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும் என்பதுடன், இலங்கை அணிக்கு சாதகத்தைப் பெற்றுக்கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பு வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திசர பெரேரா, 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததுடன், போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாகவும் தெரிவாகியிருந்தார்.

அண்மைக்காலமாக இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் சகல துறையிலும் பிரகாசித்து வருகின்ற அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற திசர பெரேரா, கடந்த வருடம் பாகிஸ்தான் அணியுடனான ரி-20 தொடரில் இலங்கை அணியை வழிநடத்தியிருந்தார். இதனையடுத்து கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் போது இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டாலும், குறித்த தொடர்களை இலங்கை அணி இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, தலைமைப் பதவியை இழந்ததன் பிறகு திசர பெரேரா பங்கேற்கவுள்ள முதலாவது ரி-20 போட்டியாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

“தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, இசுரு உதான, ஷெஹான் மதுசங்க, ஜெப்ரி வென்டர்செய், அகில தனன்ஜய, அமில அபொன்சோ, ஜீவன் மெண்டிஸ், அசித்த பெர்னாந்து”

பங்களாதேஷ் அணி

“மஹ்மதுல்லா (அணித் தலைவர்), தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், சப்பீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், அபு ஹைதர், அபு ஜாயேத், அரிபுல் ஹக், மஹெதி ஹசன்” 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...