71 பேர் கொல்லப்பட்ட ரஷ்ய விமான விபத்துக்கான காரணம் தேடி விசாரணை | தினகரன்

71 பேர் கொல்லப்பட்ட ரஷ்ய விமான விபத்துக்கான காரணம் தேடி விசாரணை

ரஷ்யாவில் 71 பேர் கொல்லப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதற்கான காரணத்தை தேடி அந்நாட்டு புலன்விசரணையாளர்கள் மொஸ்கோவுக்கு அருகில் பனியால் மூடப்பட்ட பகுதியில் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொஸ்கோவில் டொமோடேடோவோ விமானநிலையத்தில் இருந்து கடந்த ஞாயிறு மதியம் புறப்பட்ட விரைவிலேயே சரடோவா விமானசேவைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துக்கு காலநிலை, மனிதத் தவறு மற்றும் தொழல்நுட்ப கோளாறு ஆகிய காரணங்களை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர்.

எனினும் அவர்கள் தீவிரவாதத்தை ஒரு காரணமாக குறிப்பிடவில்லை. இந்த விமானம் யூரல் மலை பகுதியில் உள்ள ஓர்க்ஸ் நகரை நோக்கி பயணித்தது. மொஸ்கோவில் இருந்து தென் கிழக்காக 80 கிலோமீற்றர் தூரத்தில் அர்குனோவோ கிராமத்திற்கு அருகிலேயே விமானம் விபத்துக்கு உள்ளானது.

மீட்பாளர்கள் வாகனங்களை கைவிட்டு கால் நடையாகவே விபத்து இடம்பெற்ற பகுதியை அடைந்துள்ளனர். இங்கு தேடுதல்களுக்கு ஒரு தினம் எடுத்துக் கொள்ளும் என்று விபத்துகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெறும்போது விமானத்தில் இருந்து அவசர அழைப்பு கிடைக்கவில்லை. விமானத்தின் ஒரு கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க, பிரிட்டன் அரசுகள் கவலையை வெளியிட்டுள்ளன.

ஓர் ஆண்டுக்கு மேலான காலத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாவது இது முதல் முறையாகும். 2017 விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பான ஆண்டாக இருந்தது.

உள்ளுர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 14:27 மணியளவில் பறக்க ஆரம்பித்த விமானத்தின் தொடர்பு சில நிமிடங்களில் துண்டிக்கப்பட்டது.

பறந்துக் கொண்டிருந்த விமானம் நிமிடத்துக்கு 1,000 மீற்றர்கள் வேகத்தில் தரையை நோக்கி விழுந்ததாக விமான கண்காணிப்பு இணையதளமான ‘பிளைட்ரேடார்24’ தெரிவித்துள்ளது.

விமானம் எரித்துக்கொண்டே விழுந்ததை அப்பகுதியிலிருந்த மக்கள் பார்த்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“விமான போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு மரணம் விளைவிக்கும்” விபத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் குறித்த விபரங்கள் ரஷ்ய அரசின் அவசரகால அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என அனைத்து வயதினரும் பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பெரும்பாலும் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் ஒரேன்பெர்க் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...