பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டபேரவையில் ஜெயா படம் திறப்பு | தினகரன்

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டபேரவையில் ஜெயா படம் திறப்பு

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக 6 முறை பொறுப்பு வகித்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ரூ.43 கோடி செலவில் நினைவகம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வகித்த வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபை அரங்கில் வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஜெயலலிதா படத்தை சட்டசபை அரங்கில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

நேறறு காலை சட்டசபை அரங்கில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சட்டசபை நுழைவு வாயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்டசபையில் நேற்று சபாநாயகர் இருக்கை இருந்த இடத்தில் 6 இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். சரியாக 9.43 மணிக்கு ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசிய உரை சட்டசபையில் ஒலிபரப்பப்பட்டது.

படத்திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். யாருக்கும் குறிப்பிட்ட இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. விருப்பப்பட்ட இடங்களில் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

நிகழ்ச்சியில் தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளர்களும் வரவில்லை.

அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு ஆகியோர் வந்திருந்தனர். தமுமுன் அன்சாரி பங்கேற்கவில்லை. சட்டசபையில் முதல்-அமைச்சரின் இருக்கைக்கு பின்புறம் முதல் மற்றும் 2-வது பிளொக் இடையில் உள்ள தூணில் ஜெயலலிதா படம் பொருத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே வைக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே உள்ள படங்களை போலவே ஜெயலலிதாவின் படமும் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டதாகவும், முழு உருவ படமாகவும் உள்ளது. ஜெயலலிதா உருவப் படத்தை கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். பச்சைநிற சேலையில் நிற்பது போல படம் உள்ளது. அதில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.அதே போல் படத்திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி ஜெயலலிதா படத் திறப்பு விழாவை தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

இதையடுத்து படத்திறப்பு நிகழ்ச்சியின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் அமர்ந்திருந்தனர்.

தமிழக சட்டசபை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்து ராமலிங்கதேவர், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய 10 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...