சிரிய முற்றுகை பகுதியில் அரச படை குண்டு மழை: 200 பொதுமக்கள் பலி | தினகரன்

சிரிய முற்றுகை பகுதியில் அரச படை குண்டு மழை: 200 பொதுமக்கள் பலி

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது அரச படை கடந்த நான்கு நாட்களாக நடத்தும் உக்கிர தாக்குதல்களில் 200க்கும் அதிமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு கெளத்தா மீது கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15 சிறுவர்கள் உட்பட குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பு குழுவோன்று மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிராந்தியம் கடந்த 2013 தொடக்கம் அரச படையின் முற்றுகையில் இருப்பதோடு, இதனை கைப்பற்றுவதற்கு கடந்த திங்கட்கிழமை தொடக்கம் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களை உடன் நிறுத்தும்படி ஐ.நா மற்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளன. எனினும் இதில் உண்மை இல்லை என்று சிரிய அரசின் பிரதான கூட்டாளியான ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு கெளத்தாவில் சுமார் 400,000 பேர் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு உணவு, எரிபொருள் மற்றும் மருத்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதில் மோசமாக சுகவீனமுற்றிருக்கும் சுமார் 700 பேர் உடன் வெளியேற்றப்ப வேண்டி இருந்தபோதும் இவர்களை அழைத்துச் செல்வதற்கு கடந்த நவம்பர் தொடக்கம் ஐ.நாவுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

தலைநகருக்கு அருகில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பிரதேசமான இந்த பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு அரசு தீவிரம்காட்ட ஆரம்பித்ததை அடுத்து அங்கு மீட்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் பணிகள் அதிகரித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அரச படை நடத்திவரும் வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களால் குறைந்தது 201 பேர் கொல்லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் உள்ளுர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் எதிர்த்தரப்பு செயற்பாட்டாளர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 220 என கணக்கிட்டுள்ளனர்.

அர்பின் சிறு நகரில் உள்ள சந்தை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் மற்றும் 12 பெரியவர்கள் கொல்லப்பட்டதே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அதிக உயிரிழப்பு கொண்ட தாக்குதல் என்று சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

“கிழக்கு கெளத்த இதுவரை கடந்து வந்த காலங்களில் இந்த நான்கு நாட்களும் மிக மோசமானது” என்று அர்பின் மருத்துவ நிலையத்தின் மருத்துவரான ஹம்சா என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். “அன்புக்குரியவர்கள், சகாக்கள், அயலவர்கள், உறவினர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஒரு மருத்துவராக மிகக் கடினமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்து தனது தாயின் உடலை அடையாளம் காணும் தன்னார்வ பணியாளர் ஒருவரை காட்டும் வீடியோ ஒன்றை அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடும் சிரிய சிவில் பாதுகாப்பு அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு கிழக்கு கெளத்தாவில் இருந்து வீசப்பட்ட ஷெல் தாக்குதல்களில் அரச கட்டுப்பாட்டு டமஸ்கஸ் பழைய நகரில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முற்றுகை பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சிரியா எங்கும் ஒரு மாதத்திற்கு யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்தனர். சிரியாவில் அரச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா இந்த கோரிக்கையை கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தியது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...