2nd Test: SLvBAN; டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை | தினகரன்

2nd Test: SLvBAN; டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 - 0 என வெற்றி பெற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி முடிவின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளுக்கு 200 ஓட்டங்கள் என தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றது.

ஏற்கனவே 112 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ள இலங்கை அணி, பங்களாதேஷ் அணியிலும் பார்க்க மொத்தமாக 338 ஓட்டங்கள் கூடுதலாக பெற்றது.

அந்த வகையில் 339 ஓட்ட இலக்கை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றது.

அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் பெற்றார்.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய விக்கெட்டுகள் எனும் சாதனையை ரங்கன ஹேரத் கடந்தார்.

இடது கை வேகப் பந்துவீச்சாளர் வசீம் அக்ரமின் 414 விக்கெட்டுகள் எனும் சாதனையை, இடது கை (சுழல்) பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத், 415 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இன்றைய (10) போட்டியின் போது முறியடித்தார்.

வசீம் அக்கரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதோடு, ரங்கன ஹேரத் 89 போட்டிகளில் இந்த சாதனையை முறியடித்து 415 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ரொஷேன் சில்வா தெரிவானார்.

இத்தொடரை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி இரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...