அடிப்படை உரிமையை சரியாக பயன்படுத்துங்கள் | தினகரன்

அடிப்படை உரிமையை சரியாக பயன்படுத்துங்கள்

புதிய தேர்தல் முறை அமுலுக்கு வந்ததன் பின்னர் முதற் தடவையாக 340 உள்ளூராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது. தேர்தல் ஆணையாளரால் இடை நிறுத்தப்பட்ட பெந்தர எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய 340 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை நான்கு வருட கால பதவிக்காலத்தை தெரிவு செய்யும் தேர்தல் இது.

முன்பிருந்த விருப்பு தேர்தல் முறையை ரத்துச் செய்து கலப்பு முறையிலான தேர்தல் முறை முதற் தடவையாக அமுல்படுத்தப்படுகிறது. முன்னய தேர்தல்களில் வாக்களிப்பில் மக்கள் பட்ட சிக்கல்கள் எதுவுமின்றி ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகலரும் தாம் விரும்பும் பிரதிநிதியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமாக இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள முடியும். வாக்களிப்பு என்பது ஒவ்வொருவரதும் உரிமை. இதனை நாம் வீணடித்தல் கூடாது. கட்டாயமாக ஒவ்வொருவரும் வாக்களித்தே ஆகவேண்டும். யாராவது தமது வாக்கை பயன்படுத்த தவறுவது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தின் கீழ் துரோகச் செயலாகும். இந்த தேர்தலைப் பொறுத்த வரையில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரியதொரு பலப்பரீட்சையாக காணப்படுகிறது. இந்தப் பலப்பரீட்சையின் பங்காளர்களாக வாக்காளர்களுக்கு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ள ஒரே சந்தர்ப்பமாகத்தான் இந்த தேர்தலை நாம் பார்க்கவேண்டும்.

எமது வாக்குரிமையை பயன்படுத்தும்போது கண்களை மூடிக்கொண்டு ஏனோதானோவென செயற்படாமல் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து அடுத்த நான்கு வருட காலத்துக்கு தெரிவு செய்யும் பிரதிநிதி நேர்மையானவராகவும் திறமையுள்ளவராகவும் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவராகவும் இருப்பதை உறுதி செய்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகள் உரிய முறையில் பேணப்படல் வேண்டும் என்பதும் மிகமுக்கியமானதாகும். வாக்காளர்கள் போன்றே வேட்பாளர்களும் தேர்தல் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் ‘தாரக மந்திரமான’ ‘வாக்குரிமை எங்களது உரிமை’. அதனை பாதுகாக்கவேண்டியது எமது கடப்பாடாகும். ‘இந்த கடப்பாடு வாக்குரிமைப் பெற்ற நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் சார்ந்துள்ளது.

இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மக்கள் வாக்களிக்கக்கூடிய நேரமாகும். மாலை வரை நேரம் இருப்பதாக எண்ணிக்கொண்டு தாமதப்படுத்தாமல் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துவிட்டு அமைதியாக வீடு திரும்பவேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் பொலிஸ் திணைக்களமும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றது.

முடிந்தவரை அமைதியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. ஜனநாயக அரசியலில் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் இது தவிர்க்கமுடியாததொன்றாகும். என்றாலும் குழப்பங்களுக்கோ வன்முறைகளுக்கோ இடமளிக்காமல் முடிந்த வரை நேரகாலத்தோடு வாக்களித்துவிட்டு தமது இருப்பிடங்களுக்கு செல்வது ஆரோக்கியமானதாகும்.

அச்சுறுத்தல்களுக்கும் இலஞ்சத்திற்கும் அடிமைப்படாமல் எங்களது வாக்குகளை சுதந்திரமாக நாம் விரும்பியபடி பயன்படுத்தும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அந்த உரிமையை யாருக்கும் பறிக்க இடமளிக்ககூடாது. இந்த தேர்தல் முறை வட்டாரமுறையில் இடம்பெறுவதால் ஒவ்வொரு வட்டாரத்திலும் கணிசமான வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது ஒவ்வொருவரதும் கடப்பாடாகும்.

இந்த தேர்தல் உள்ளூர் தேர்தலாகும். எங்களில் ஒருவரையே நாம் தெரிவு செய்யபோகிறோம். இவ்வாறான நிலையில் ஊரில் உறவினர்களை பகைத்துக்கொள்ளாமல் நட்புறவுடன் செயற்படுவது அவசியமாகும். தேர்தல் ஊரோடு சம்பந்தப்பட்டாலும் தேர்தலுக்கு பிறகும் இந்த ஊரிலேதான் வாழவேண்டும். பகைமை உணர்வை வளர்த்துக்கொள்ள கூடாது. முடிந்த வரையில் ஊரோடு ஒத்துவாழும் நிலைக்கு திரும்பவேண்டும்.

இதை ஒவ்வொருவரும் பின்பற்றுவது அவசியம். இன்னொரு விடயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வாக்குரிமை என்ற சொல்லுக்கு சாட்சியம் என்றும் பொருளுண்டு. வாக்கு சீட்டில் வேட்பாளர்களில் தாம் விரும்பும் பெயருடையவரை எனது பிரதிநிதியாக தெரிவு செய்ய விரும்புகிறேன் என்று சாட்சியம் கூறலே இதன் பொருளாகும். எனவே தான் நல்லவராகவும், அதேநேரம் வல்லவராகும் இருக்ககூடிய ஒருவரை தெரிவு செய்வதற்கான சாட்சியத்தை நாம் வழங்க வேண்டும். மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு நமக்காக சேவையாற்றக்கூடிய, நமக்காக பேசக்கூடிய செயற்படக்கூடிய நல்லவர்களை தெரிவு செய்வதன் மூலம் நாங்கள் எமக்குரிய சாட்சியத்தை சரியாகப் பதிவு செய்தவர்களாவோம்.

தவறான முடிவொன்று எடுக்கப்பட்டால் அதனை திருத்துவதற்கு நான்கு வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே உரிய நேரத்தில் உரிய முடிவை எடுத்து நல்ல தலைவரொருவரை தெரிவு செய்து எமது கிராம இராச்சியங்களை வளமுள்ளதாக கட்டியெழுப்ப எங்களுக்குரிய பணியை இன்றைய தினத்தில் சரியாக நிறைவேற்றுவோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...