Friday, March 29, 2024
Home » சமயப் பாடசாலைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

சமயப் பாடசாலைகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

by damith
November 5, 2023 10:30 am 0 comment

சமயங்கள் குறிப்பிடுகின்ற தர்மநெறி மற்றும் பண்பாடுகள் என்பன மக்களால் கடைப்பிடிக்கப்படுவது நாளுக்குநாள் குறைவடைந்து கொண்டு வருகின்றது. அனைத்து மதங்களிலும் உள்ள வெவ்வேறு குழுக்களுக்கிடையில் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் சமயப் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக விளங்குகின்றது.

இந்த நிலை சீரமைக்கப்படல் வேண்டும். சமயப் பாடசாலைகளுக்கு அன்றிருந்த முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் மீளவும் உருவாக்க வேண்டும் என கலாசார, பௌத்த சமய விவகார அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனம் மீலாத் விழா தொடர்பாக ஏற்பாடு செய்தருந்த பரிசளிப்பு வைபவம் பாணந்துறை அம்பலந்துவ இல்மா முஸ்லிம் வித்தியாலய வளாகத்தில் மாவட்ட அஹதியா சம்மேளன தலைவர் எம்.எச்.எம்.உவைன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மர்ஜான் பழீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர். மாவட்ட சம்மேளன செயலாளரும் களுத்துறை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான ஹிசாம் சுஹைல் அமைச்சர் அலி சப்ரிக்கு விஷேட நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார். அதிதிகள் அஹதியா பிரமுகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர். அம்பலந்துவ இல்மா வித்தியாலய அதிபர் ரிஸ்மி மஹ்ரூப் உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் அஹதியா பாடசாலை அதிபர்கள் பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“எல்லா சமயப் பாடசாலைகளுக்கும் பெறுமதி உருவாக்கப்படல் வேண்டும். சமயப் பாடசாலை இருக்கும்போது தனியார் வகுப்புக்களுக்கு ஏன் செல்கின்றனர் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தனியார் வகுப்புக்கு பெறுமதி காண்பதைப் போன்று சமயப் பாடசாலைக்கும் பெறுமதி கொடுத்தல் வேண்டும்.

சமயப் பாடசாலைகளுக்கு முக்கியத்துவத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளோம். இந்த வேலைத்திட்டத்தை விரைவில் உங்களிடம் கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம். எல்லா சமயப் பாடசாலைகளின் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படல் வேண்டும். பிள்ளைகள் வெறுமனே புனித குர்ஆன், திரிபிடகய, பைபிள் மற்றும் பகவத்கீதத்தை மனப்பாடம் செய்து விடுவதால் மாத்திரம் நல்லவர்களாவதில்லை.

நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள செயல் ரீதியிலான பண்பாடுகள் கொண்ட பிள்ளைகளை உருவாக்க வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தும் தேசப்பற்றுள்ள மனிதநேயம் கொண்ட பிள்ளைகள் எமக்குத் தேவையாகும்.

மனிதநேயப் பண்பாடுகள் எங்களை விட்டும் தூரவிலகிச் செல்கின்றன. இதனால் அனைத்து சமயப் பாடசாலைகளின் பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படல் வேண்டும்.தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானதாகும்.

அனைத்து மத வழபாட்டு நிலையங்களும் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு நிலையங்களாக செயல்படுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும். களுத்துறை மாவட்டத்திலுள்ள பதினேழு அஹதியாப் பாடசாலைகளுக்கும் மூன்று மாத காலத்தில் விஜயம் செய்து நல்லிணக்க ரீதியில் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவேன்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர் (பாணந்துறைமத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT