Thursday, March 28, 2024
Home » இலங்கை முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்த இந்திய நிதி அமைச்சர்

இலங்கை முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்த இந்திய நிதி அமைச்சர்

by Rizwan Segu Mohideen
November 4, 2023 2:37 pm 0 comment

– பௌத்த உறவுகளை மேம்படுத்த ரூ. 15 மில். டொலர்
– மதஸ்தலங்களில் சூரிய மின்சக்திக்கு ரூ. 10 மில். டொலர்
– பெருந்தோட்டங்களில் 10,000 வீடுகள் நிர்மாணம்
– மேம்படுத்தப்பட்ட தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம்
– 10,000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
– பாடசாலைகளில் RO நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஐவரடங்கிய உத்தியோகபூர்வ பேராளர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் இந்திய வர்த்தக & தொழில்துறை கூட்டமைப்பு (FICII) ஆகியவற்றின சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட உயர் மட்ட வர்த்தக குழுவினர் 2023 நவம்பர் 01-03 வரை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்தார்.

அத்துடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசி பெற்றிருந்த அவர் கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகையிலும், அநுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகாபோதி விகாரையிலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆண்டுகளைக் குறிக்கும் ‘நாம் 200” நிகழ்வில் கௌரவ விருந்தினராக பங்கேற்றிருந்த அவர், இந்திய இலங்கை வர்த்தக மாநாட்டில் ‘தொடர்புகளை மேம்படுத்தல்; செழுமைக்காக ஒத்துழைத்தல்’’ என்ற தலைப்பிலான அமர்விலும் சிறப்புரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விஜயத்தின் போது திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் இந்திய ஸ்டேட் வங்கியின் கிளைகளும் அவரால் திறந்து வைக்கப்பட்டன.

2023 நவம்பர் 02ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மத உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்ட திட்டமான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை திட்டத்தின் கீழான பணிகளை துரிதமாக செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் இருதரப்பு ஆவணங்கள் பரிமாறப்பட்டிருந்தன.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை முழுவதும் உள்ள மதஸ்தலங்களுக்கு சூரிய மின்கல தொகுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் விபரங்கள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்றைய தினம் பரிமாறப்பட்டிருந்தது.

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் STEM பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை அத்துறைகளில் தயார்நிலைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் வெகு விரைவில் பயிற்றுனர்களை இலங்கைக்கு அனுப்ப இருப்பதாக இந்திய நிதி அமைச்சர் நாம் 200 நிகழ்வில் அறிவித்திருந்தார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினருக்காக 2023 ஜூலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பல்நோக்கு உதவி திட்டத்தின் முதலாவது திட்டப்பணிகளில் ஒன்றாக இந்த இலக்கை எட்டும் நோக்குடன் நிபுணத்துவமிக்க பயிற்றுநர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அத்துடன் இத்திட்டங்களின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சூரிய மின்விளக்குகளை வழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் அலகுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் குறித்தும் அவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கல்வித்துறையை இலக்காகக் கொண்டு பெருந்தோட்ட பகுதிகளில் 10000 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பைகள் அப்பியாச புத்தகங்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு RO நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இருதரப்பு உறவில் புதியதோர் மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய விடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் இலங்கை ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து நிதி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பிராந்தியங்களில் மூன்றாவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4,000 வீடுகள் திட்டத்தினை விஸ்தரிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதுவரையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தமாக 50,000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையமும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து நிதி அமைச்சரால் மெய்நிகர் மார்க்கமூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் இந்திய அரசாங்கத்தால் பல்வேறு வசதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞர்களுக்காக தொழில்கல்வியை வழங்கும் நோக்குடன் கணணிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயமானது பொருளாதாரத் துறையில் காணப்படும் இருதரப்பு ஈடுபாட்டிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்த பல்வேறு துறைகளையும் சேர்ந்த கைத்தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இலங்கையில் பரஸ்பர நன்மை அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஸ்திரமான வர்த்தக பங்குடைமையினையும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வர்த்தக மாநாடானது இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து மேலதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்காக மிகவும் வலுவாக வாதாடியிருந்தவர் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு உதவியை பெற்றுக் கொள்வதில் இது மிகவும் முக்கியமானதாகும். கடந்த வருடம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பல்நோக்கு உதவியை துரிதமாக வழங்குவதில் நிதி அமைச்சர் எனும வகையில் அவரது வகிபாகம் முக்கியமானதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள்...

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT