விளைதிறனுடைய பாடசாலையை பெற்றோர் இனங்காண்பது எவ்வாறு? | தினகரன்

விளைதிறனுடைய பாடசாலையை பெற்றோர் இனங்காண்பது எவ்வாறு?

 

சிறந்த பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கு பெற்றோர் இன்று அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிறந்த விளைதிறனுள்ள பாடசாலையை எவ்வாறு இனங்காண்பது? அதன் இயல்புகள் பண்புகள் என்ன என்பதை அறிய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

அதிகமான பாடசாலைகள் அறிக்கையளிப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் பண்பாட்டு அம்சங்களை பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களாகவும் உள்ளன.

பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமய விழுமியங்கள், அறக்கருத்துகள், ஆற்றல்கள், பண்பாட்டு வடிவங்கள், திறன்கள், நல்ல மனப்பாங்குகள் யாவும் உருவாக்கப்படும் களமாகவும் பாடசாலைகள் விளங்குகின்றன.

இதனால் பாடசாலைகளை 'சமூக நிறுவனங்கள்' என்று அழைக்கின்றனர். எனவேதான் சமூகத்திற்குத் தேவையான பெறுமதியான ஆற்றலுள்ள பிரஜைகளை உருவாக்கும் பணியிலும் பாடசாலைகள் ஈடுபடுவது கட்டாயமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலையானது சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லோரும் மதிக்கின்ற விரும்புகின்ற பாடசாலையாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

ஒரு பாடசாலையை சிறந்த முறையில் நடத்துவதற்கு சிறந்த முகாமைத்துவம் அவசியம். 'இயல் அளவை அதிகரிப்பது’ முகாமைத்துவம் என்றும், 'செய்யும் தொழிலை மேலும் சிறப்பாக ஆற்ற உதவுவது' முகாமைத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. சாதுரியமாக மனிதர்களை ஆழுதல் முகாமைத்துவம் எனப்படுகின்றது. டொனால்ட் கிளப் என்ற அறிஞர் முகாமைத்துவம்பற்றி இவ்வாறு கூறுகின்றார்:

'நோக்கத்தை அடைவதற்காக மனிதரை குழுவாக இயக்கும் செயல்முறை முகாமைத்துவமாகும்' என்று கூறுகின்றார் அவர்.

முகாமைத்துவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வினைத்திறன், விளைதிறன் என்ற இரண்டு எண்ணக்கருக்களாகும் இவை முகாமைத்துவத்தில் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றன. கல்வி அல்லது வேறு ஏதாயினும் அமைப்புக்களின் குறிப்பிட்ட காரியத்தையோ அல்லது நோக்கத்தையோ நிறைவேற்றிக் கொள்வதற்கு அதன் செயற்பாடுகளை வினைத்திறன், விளைதிறன் வாய்ந்ததாக இயக்குதல் அவசியமாகும்.

வினைத்திறன் என்பது (Efficiency) குறைந்த விரயத்துடன் கிடைக்கத்தக்க வளங்களை உச்சமாகப் பயன்படுத்தல் ஆகும். அதாவது மனிதவளம், பௌதிகவளம், நிதிவளம், காலவளம் போன்ற சகல வளங்களையும் அழிவுகள் வீண்விரயங்களின்றி சரியான செயலுக்கு சரியாகப் பயன்படுத்தி அவற்றினைக் கொண்டு உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வது வினைத்திறனாகும். இக்கருத்தின்படி வளங்களை சரியாக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து விளைதிறன் பற்றி நோக்கும் போது இவ்வாறு குறிப்பிடலாம்.

விளைதிறன் (Effectiveness) என்பது செயற்படுதிறன் பயனுறுதி எனவும் அழைக்கப்படும். தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அடைந்து கொள்வதுடன் தொடர்புடைய அம்சமே விளைதிறனாகும்.அதாவது ஏற்கனவே சரியாக தீர்மானித்துக் கொண்ட நோக்கங்களை உயர்மட்டத்தில் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வதாகும். குறித்த காலப்பகுதிக்குள் எதிர்பார்த்த நோக்கத்தை வெற்றிகரமாக அடைவதும் விளைதிறனாகும்.

சிறந்த முகாமைத்துவமுள்ள இடத்தில் வினைத்திறனும் விளைதிறனும் உயர்ந்த அளவில் இருக்கும். முகாமைத்துவம் பிழைத்தால் பாடசாலை சீர்குலையும். அதிபரின் சர்வாதிகாரமான தலைமைத்துவம் காரணமாக பாடசாலை நிர்வாகம் சீர்குலைந்து மோசமான

பெறுபேறுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும் பாடசலையிலுள்ள குறைபாடுகளை ஒரு ஆசிரியர் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்த முற்படும் போது, அந்த ஆசிரிரை அதிபர் சர்வாதிகாரமான முறையில் இடமாற்றுவது பிழையான முகாமைத்துவமாகும். என்வே விளைதிறன் வினைத்திறன் இரண்டையும் உயர்ந்த மட்டத்தில் பேண வேண்டும். ஒரு சிறந்த விளைதிறனான பாடசாலை ஒன்றினை அடையாளம் காண்பதற்கு சில அடிப்படை நியதிகளை கல்வியியலாளரான விக்டேரியாபேக்கர்ஸ் என்பவர் இவ்வாறு வரையறுத்திருக்கின்றார்.

மாணர்களின் வரவு மட்டம் உயர்மட்டத்தில் காணப்படும். மாணவர் பாடசாலையிலிருந்து இடைவிலகுவது குறைவாகக் காணப்படும். உயர்மட்டப் பரீட்சைப் பெறுபேறுகள் காணப்படும்.

ஆசிரியர் விடுமுறை செல்வது குறைவாக இருக்கும். பாடசாலையானது சமூகத்துடன் நல்ல தொடர்பைக் கொண்டிருக்கும். செயற்திறனுடைய பாடசாலையில் அபிவிருத்திச் சங்கம் காணப்படும். கட்டடங்களையும் சுற்றுப்புறச் சூழலையும் அழகாக வைத்திருத்தல். கற்றல் உபகரணங்கள் காணப்படும். சிறந்த நூலகம் காணப்படும்.

இது போன்ற விடயங்கள் விளைதிறன் பாடசாலையை இனங்காண்பதற்கான நியதிகளாகும். எனவே இந்தஅடிப்படை நியதிகளை வைத்துக் கொண்டு பெற்றோர் பாடசாலைகளை எது சிறந்தது என மதிப்பிடலாம். அந்த வகையில் வினைதிறன் பாடசாலையின் இயல்புகள் என்ன என்பதை நோக்குவோம்.

1) அதிபரின் சிறந்த தலைமைத்துவம்:

ஒரு பாடசாலையை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் மாற்றுவதற்கு சிறந்த முகாமைத்துவம் அவசியம். சிறந்த முகாமைத்துவம் இருக்க வேண்டுமானால் நல்ல தலைமைத்துவம் அவசியம். சிறந்த தலைமைத்துவமுள்ள அதிபரானவர் ஆசிரியர், மாணவர், பெற்றோர், ஆகியோர்களை ஊக்கப்படுத்துதல்,வேலைகளைப் பகிர்ந்து ஒப்படைத்தல் ,வளங்களைப் பெறுதல் ,பராமரித்தல் திட்டமிடல் நெறிப்படடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவர்.

02) ஆற்றல் மிக்க ஆசிரியர் குழாம்:

ஆசிரியர்கள் உயர்ந்த கல்வி தொழில் தகுதிகளைக் கொண்டிருப்பதுடன் வகுப்பறை முகாமை கலைத்திட்ட முகாமைத்துவம் போண்றவற்றில் சிறப்பாகத் தொழிற்படுவர். அத்துடன் ஆக்கத்திறன் விருத்தியுடன் பல்வேறு கற்றல் நுட்பங்களை பிரயோகித்துக் கற்பிக்கக் கூடியவராகவும் இருப்பர். மாணவர் நலனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உற்சாகமாவும் அர்ப்பணிப்புடனும் கூட்டாகவும் பணியாற்றும் தன்மை கொண்டாவராகக் காணப்படுவர்.

03) பெற்றோர்களினதும் சமூகத்தினதும் ஈடுபாடு:

பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நல்ல தொடர்பு இருத்தல் வேண்டும். சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பாடசாலை வைத்திருக்க வேண்டும்.

பெற்றோரும் நலன் விரும்பிகளும் இப்பாடசாலையுடன் நல்ல தொடர்பை வைத்திருக்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றார் ஆசிரியர் சங்கம் என்பவற்றினூடாக பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையே தொடர்பு அதிகரிக்கும் போது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி பாடசாலைக்கு முழு நேரமாக உழைக்க முன்வருவார்கள். அத்துடன் இவர்கள் பௌதிக வளங்களையும், மனிதவளங்களையும் வழங்குதல் ,அதிபரையும் ஆசிரியரையும் ஊக்கப்படுத்தல், மற்றும் நிதிசார்ந்த ஒத்துழைப்புக்களை வழங்குதல் என்பன பாடசாலை மீது சமூகத்தின் ஈடுபாட்டை காட்டும்.

04. கல்வி அலுவலக ஒத்துழைப்பு:

கற்றல் கற்பித்தலை விருத்தி செய்தல், கற்றல் கலைத் திட்ட சாதனங்களை வழங்குதல் மற்றும் அதிபர் ஆசிரியரை மதிப்பிடுதல் என்பன கல்வி அலுவலக ஒத்துழைப்பாகும். 05. பாடசாலையில் கூடுதலான கற்றல் காலம்:

பாடசாலையில் திட்டமிட்ட நேர அட்டவணைக்கேற்ப உரியவேளையில் உரியபாடம் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்பர். மேலும் கூடுதலான நேரம் கற்பிப்பதுடன் மேலதிக மதிப்பீட்டு முறைகளும் இடம்பெறும்.

06. பரீட்சைப்பெறுபேறுகள் உயர்ந்திருத்தல்:

மாணவர் உயர்ந்த தலைமைத்துவத் திறன்களை கொண்டிருப்பதுடன் சிறப்பாக சமய விழுமியப் பண்புகளை பின்பற்றக் கூடியவராவும் இருப்பர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ. த.(சா/) க.பொ.த (உ/த) போன்ற பரீட்சைப் பெறுபேறு உயர்வாகக் காணப்படுதல். சமூகத்திறன் ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் உயர்ந்தநிலையில் காணப்படும்.

07. இணைப்பாடவிதான செயற்பாடுகள், அடைவுகள் உயர்ந்த நிலையில் இருத்தல்:

விளையாட்டு, ஆக்கச் செயற்பாடு, தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, சிங்கள தினப்போட்டி, சித்திரப்போட்டி, மாணவர் தினம் போன்ற எல்லா விடயங்களிலும் இப்பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். மேலும் இவ்விடயங்களில் இடம்பெறும் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் தேசியமட்டங்களில் இடம்பெறும் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதுடன் அவற்றில் வெற்றிபெறக் கூடியவர்களாகவும் சாதனை நிகழ்த்தக்கூடியவர்களாகவும் இருப்பர்

08. பாடசாலையின் பௌதீகவளங்களும் வளப் பயன்பாடுகளும் காணப்படுதல்:

பாடசாலைக்குத் தேவையான வளங்கள் பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் ஆகியவற்றினூடாகப் பெற்றுக் கொள்ளப்படும். இது -அரசின் மூலமாகவோ அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாகவோ பெறப்படலாம்.

பாடசாலையின் தரத்திற்கேற்ப வளங்கள் பெறப்படும். விஞ்ஞான கூடம் மணையியல் கூடம், கணனி செயற்பாட்டறை, ஒலி ஒளி அறை, கற்பித்தல் துணைச்சாதனங்கள் போண்ற கட்டடங்களும் காணப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் கிடைத்தல்.

09. மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உயர்ந்த அடைவுகள், திறமைகள் பாராட்டப்படல்:

மாணவர்களின் கல்விசார் வெற்றிகளை இனங்கண்டு ஊக்கப்படுத்தல் அதாவது திறமை காட்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் வைபவங்கள் விழாக்கள் ஆகியவற்றின் மூலம் பாராட்டப்படுவர்.

வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டப்படுவர். அத்துடன் இவர்களுக்கு கற்பித்த, பயிற்சியளித்த, ஆசிரியர்களும் பாராட்டப்படுவர். பாடசாலைக்கு புகழைத் தேடித் தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். பரிசளிப்பு விழாக்கள், ஆண்டு இறுதி விழாக்கள் என்பன இப்பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

10. ஆசிரியர்களின் உடன்பாடான மனப்பாங்குகள்.

ஆசிரியர்கள் தங்கள் தொழில்மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருப்பதுடன் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஊக்குவிப்புடனும் செயற்படுவர்.

11. இடைவிலகல் குறைந்து காணப்படல்:

மாணவர்கள் இடைவிலகும் தன்மை குறைந்திருக்கும். இப்பாடசாலையில் கற்பதற்குச் சேர்ந்த மாணவர்கள் வேறு பாடசாலைக்குச் விலகிச் செல்வதைக் கூட தவிர்த்து இப்பாடசாலையிலேயே கல்வி நடவடிக்கைகள் தொடர்வதைக் காணலாம்.

12. நன்னடத்தையும் நல்லொழுக்கமும்:

பாடசாலையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் பாடசாலையின் அகச்சூழல், வெளிப்புறச்சூழல், சுத்தம் திருப்தியாகவும் காணப்படும். வகுப்பறைகள் நவீனமுறையில் அமைக்கப்பட்டிருப்பதோடு வகுப்பறைச் சூழலும் வெளிச்சூழழும் அழகுபட்டிருத்தல். அத்துடன் மாணவர் உரிய வேளைக்குப் பாடசாலைக்கு வருதல், செல்லல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெறும்.

பாடசாலையை விளைதிறனாக மாற்றிமைப்பதில் அதிபரின் பங்கு மிக அவசியம். அதிபர் சிறந்த ஆளுமை மிக்கவராக இருக்க வேண்டும். அதே போல் விளைதிறன் மிக்க ஆசிரியர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் முன் பாடசாலைக்கு வருவார். எனவே பாடசாலையை விளைதிறன் உடையதாக மாற்றியமைப்பதில் மிக முக்கியமானவர்கள் அதிபரும் ஆசிரியருமாவார்கள்.

இவ்வாறான பாடசாலை அதிபரையும் ஆசிரியரையும் சமூகம் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும். எனவே மேற்கூறிய இயல்புகள் சிறந்த விளைதிறனுள்ள பாடசாலையின் பண்புகளாகும்.

இஸ்மாயில் ஹுஸைன்தீன்
(கல்விமாணி)
(அம்பாறை விசேட நிருபர்)

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...