Thursday, March 28, 2024
Home » நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியால் தீர்வு காண முடியும்

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியால் தீர்வு காண முடியும்

அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

by gayan
November 4, 2023 6:00 am 0 comment

நாடு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வு காண முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறும் போது, மக்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வரும் ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சம் அடையுமெனவும் தெரிவித்தார்.

யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் ப.செபராஜாசிங்கத்தின் நினைவுதினம்

மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றிய போது,

“எமது தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோல்வி கண்டதாலேயே, அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் ஆட்சியில் இருந்தவர்களால் எமது கைகளில் ஓர் ஆயுதப் போராட்டம் வலிந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆயுதப் போராட்டமும் ஒரு கட்டத்துக்கு பின்னர் திசை திரும்பி பலவீனப்பட்டு போய்விட்டது. இவ்வாறு பலவீனப்பட்டு போய்க்கொண்டிருந்த போதே, 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தமென்ற ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. அதை நாம் பின்பற்றி இருப்போமாக இருந்தால், இன்று நாம் பல மடங்கு முன்னேற்றமானதொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போமென எண்ணுகின்றேன். ஆனால், அது வீணடிக்கப்பட்டு விட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் மற்றும் யுத்தத்துக்காக வெளிநாடுகளில் பெற்ற கடன்களும், அதை விட, நாட்டின் ஏனைய தேவைகளுக்காக பெறப்பட்ட கடன்களும் சரியானதொரு பொறிமுறையை நோக்கிக் கையாளப்படாது போய்விட்டது. இதனால், நாட்டை முன் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டது.

இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இந்த நாட்டை பொறுப்பெடுத்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை சரியான பாதையில் கொண்டுசென்று நிலைமைகளை சீர்செய்து வருகின்றார். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது. அந்த வகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதி வெற்றி பெறுவாராக இருந்தால், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு இன்னும் பல மடங்கு முன்னோக்கிச் செல்லுமென்பது எனது நம்பிக்கையாகும். பொதுவாக, நான் எனது அனுபவங்களை எனது நம்பிக்கையையே எப்பொழுதும் வெளிப்படுத்தி வருகின்றேன். எனது வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஏறக்குறைய 15 வருட ஆயுதப் போராட்ட வரலாறும் 30 வருடத்துக்கு மேலான பாராளுமன்ற ஜனநாயக அரசியல் வரலாறும் அதனூடான அனுபவங்களும் எனக்கு இருக்கின்றது. இதேவேளை, அடுத்த அரசாங்கங்கள் வந்தாலும், என்னுடைய நிலைமை இவ்வாறானதா?

அத்துடன், எனது அணுகுமுறையானது வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து, வெறும் வாக்குகளை அபகரிப்பதற்கான அரசியல் இல்லை.

நான் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டுடைனையே நல்லிணக்கத்தை வளர்த்து வருகின்றேன். அதில் வெற்றி காண முடியுமென்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT