Home » வடக்கு, கிழக்கு மக்களை ஒன்று திரட்டுவோம்

வடக்கு, கிழக்கு மக்களை ஒன்று திரட்டுவோம்

கிழக்கில் காணி அபகரிப்பை நிறுத்தாவிடின்

by gayan
November 4, 2023 11:16 am 0 comment

சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அத்துமீறிய காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால், அரசாங்கம் தக்க பதிலை வழங்கும்வரை வடக்கு, கிழக்கில் மக்களை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டத்தை

முன்னெடுக்கவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப் பண்ணையாளர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நேற்று முன்தினம் (02) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரியமாக பரம்பரையாக கால்நடைகளை வளர்த்த காணிகளை வலுக்கட்டாயமாக அபகரிக்க சிங்கள மக்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கு எதிராக 49 நாட்களாக கால்நடைப் பண்ணையாளர்கள் போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தை அபகரித்தலென்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியாகும். அந்த முன்னெடுப்புகளில் ஒன்றே மயிலந்தமடு, மாதவனை பகுதி செயற்பாடு. இது இன்று நேற்று அல்ல.

தற்போது ஜனநாயகம் பேசிக்கொண்டு நிலங்களை அபகரித்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதில் பாரிய முனைப்பை காட்டுவதற்கு எதிராகவே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எமது கடமையாகும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT