மதுசூதனனின் கடிதத்தால் ஆளுங்கட்சிக்குள் நெருக்கடி | தினகரன்

மதுசூதனனின் கடிதத்தால் ஆளுங்கட்சிக்குள் நெருக்கடி

கட்சியில் போதிய மரியாதை இல்லாததால் அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன் எடுத்துள்ள திடீர் முடிவால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சந்தித்த தோல்வி அக்கட்சியில் பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது.

தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் கட்சியின் அவைத்தலைவரான மதுசூதனன். தேர்தல் தோல்விக்குப் பின் அவர் ஊடகங்களிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமிக்கு மதுசூதனன் அனுப்பி வைத்துள்ள கடிதம் கட்சியின் தலைமையை ஆட்டங்காண வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் மதுசூதனன், தன்னுடைய 14 கேள்விகளுக்கு உரிய பதிலைத் தரும்படி கூறியிருக்கிறார். கேள்விக்கு முன்னதாக மிக நீளமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியிருக்கிறார்.

பரபரப்பு கடிதம் குறித்து மதுசூதனனிடம் கேட்கப்பட்டது. கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியதை அவர் மறுக்கவில்லை.

அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியில், "நான் தோற்றதற்கு என்ன காரணம், யார் காரணம், பதில் சொல்லுங்கள் அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா? நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்? அணிகளை இணைய விடாமல், எதிரணிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக இணைப்பைத் தடுத்தவர், இன்றுவரை உங்கள் நம்பிக்கைக்கு உரிய மந்திரிதானே?

தொகுதியில் நான் தோற்க கடமை உணர்வுடன் செயலாற்றியவரும் அந்த மந்திரிதானே? உங்களுக்கு அனைத்தும் தெரியும். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆர்.கே நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றி, அம்மாவின் வெற்றி, புரட்சித்தலைவரின் வெற்றி, இரட்டை இலையின் வெற்றி. நான் தோற்றது இவை அத்தனையும் தோற்றது போல்தானே?

இந்த நிமிடம் வரையில் கழகம், இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும் நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஆர்.கே நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும் 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே. ஒன்பதாயிரத்து 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா? மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி 'வேலையில் சுணக்கம்' காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா?

அம்மா மட்டும் இன்று இருந்திருந்தால் தொகுதியில் வேலை பார்த்த மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைவரின் பதவியும் பறி போய் இருக்குமே. பொதுத்தேர்தல் முடிவையே அம்மா மன்னிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் முடிவை அம்மா அவர்கள் ஏற்பார்களா? நம்முடைய அம்மாவை 'ஃபாலோ' செய்து கருணாநிதிக் கட்சியில் அப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார்களே? தொகுதியின் மொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி உள்ளார்களே. 'அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை' என்று சகோதரர் மைத்ரேயன் பதிவு போட்ட போது அனைவருமே ஒரே குரலில் மறுத்தீர்களே. உண்மையைச் சொல்லுங்கள், நம் மனங்கள் இணைந்துதான் இருக்கிறதா?

இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா? கழக இணை ஒருங்கிணைப்பாளரே ? நம்முடைய இயக்கம் விழுதுகளைத் தாங்கி நிற்கும் பேரியக்கம் என்று என்னைப் போல் பலர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

வேரிலும், விழுதிலும் கந்தகத்தை ஊற்றிவிட்டு 'கழகமரம்' கண்டிப்பாக நிழல் தரும் என்று சொல்வது போல்தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால் 'தன்னிச்சை' யாக நானே கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்..."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மதுசூதனன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடிதத்தின் முடிவில் இருக்கும் 14 கேள்விகள் எந்த ரகத்தில் இருக்கும் என்பதை இந்தக் கடிதம் மூலமாகவே ஊகித்து விடவும் முடிகிறது. மதுசூதனன் ஆதரவாளர்கள் தரப்பில் பேசியபோது, " ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கே இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் சொந்தம் என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. அப்படிப்பார்த்தால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் அண்ணனை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும், அதைச் செய்தாரா...? இனி கட்சியில் எந்த நேரமும் எந்த மாற்றமும் நிகழலாம்.

டி.டி.வி. தினகரன் தரப்பில் அண்ணன் மதுசூதனனை முக்கியமான நபராகக் கருதுகிறார்கள். தினகரனும் அண்ணன் மீது பாசம் கொண்டவர்தான். அம்மா இறந்த போது சசிகலாவைச் சந்தித்துக் கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அண்ணனும் தம்பித்துரையும்தான். நம்ப வைத்து துரோகம் செய்பவர்களை விட விரோதியான டி.டி.வி. தினகரனே தேவலாம் என்று அண்ணன் மதுசூதனன் முடிவெடுத்து விட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அண்ணன் மதுசூதனன் குழந்தை மாதிரி" என்கின்றனர். இந்தக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிரான தி.மு.கவின் குரலுக்கு இணையாக தினகரனின் ஆதரவுக் குரல்கள் கேட்டாலும் வியப்பில்லை. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...