Friday, March 29, 2024
Home » தொழிற்சங்கங்கள் நியாயமான முறையில் சிந்திப்பது அவசியம்!

தொழிற்சங்கங்கள் நியாயமான முறையில் சிந்திப்பது அவசியம்!

by gayan
November 4, 2023 6:00 am 0 comment

அரசாங்க ஊழியர்களுக்கென்று அடிப்படை உரிமைகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த உரிமைகளுக்காகப் போராடுவது தொழிற்சங்கங்களின் கடமை என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற போது முதலில் இணக்கப் பேச்சுவார்த்தைக்கு முற்படுவது அவசியம். அந்த இணக்கப் பேச்சுவார்த்தை பயனளிக்காது போனாலும், எவ்வாறாயினும் சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலமே நியாயமான தீர்வைக் காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

இதுவே தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். தொழிற்சங்கங்களின் கடமை தங்களது அங்கத்தினர்களான தொழிலாளர்களைப் பாதுகாப்பது மாத்திரமேயென்று நினைத்துவிடக் கூடாது. தொழிலாளர்கள் மீது எத்தனை தூரம் அக்கறை உள்ளதோ, அத்தனை அக்கறையை சாதாரண மக்கள் மீதும் காண்பிப்பது தொழிற்சங்கங்களின் பொறுப்பென்பதை மறந்து விடலாகாது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதையிட்டு தங்களுக்கு அக்கறையில்லையென்றவாறு தொழிற்சங்கங்கள் நடந்து கொள்ளுமானால், அவ்வாறான தொழிற்சங்கங்கள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்டவையல்ல என்பதுதான் அர்த்தம்.

எடுத்த எடுப்பிலேயே பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்வதென்பது இன்றெல்லாம் தொழிற்சங்கங்களின் வழக்கமான சுபாவமாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இவ்வாறுதான் அடிக்கடி நடந்து கொள்கின்றன. எதற்காகப் பணிப்பகிஷ்கரிப்பு செய்கின்றோமென்ற விவஸ்தையே இல்லாதவாறு சில தொழிற்சங்கங்கள் நடந்து கொள்கின்றன.

தொழிற்சங்கங்களின் போக்கு இவ்வாறு தொடர்ந்து செல்லுமானால் அச்சங்கங்கள் மீது எதிர்காலத்தில் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைமை ஏற்படலாமென்பதையும் மறந்து விடலாகாது. தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தருகின்ற மனோநிலையை மக்கள் மாற்றிக் கொள்வதற்கும் இடமேற்படலாம். இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் நிதானபுத்தியுடனும் பக்குவத்துடனும் நடந்து கொள்வதுதான் சிறந்தது.

பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்துக்கு சிரமம் கொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தொழிற்சங்கங்களிடம் உள்ளன. பொதுமக்களுக்கான சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாமென்று அநேகமான தொழிற்சங்கங்கள் நினைக்கின்றன. எனவே தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் எவ்வாறாவது அடிபணியுமென்பது அந்தத் தொழிற்சங்கங்களின் எண்ணமாகும்.

அதேசமயம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் வேறு நிகழ்ச்சித் திட்டங்களின்படி இயங்குகின்றன. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வாறாயினும் வெறுப்பை ஏற்படுத்த வேண்டுமென்பது அவ்வாறான தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகும். பொதுமக்களின் அந்த வெறுப்பானது எதிரணிக்கு ஆதரவைப் பெருக்குமென்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாகும். எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தில் மக்களின் சிரமங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. மக்களை எவ்வாறு வருத்தியாவது தங்களது ஆதரவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எதிரணியினரின் நோக்கமாகும்.

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றிலும் அவ்வப்போது இடம்பெறுகின்ற பணிப்பகிஷ்கரிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிரணிக் கட்சிகளின் செல்வாக்கு உள்ளதென்பதை மறந்து விடலாகாது. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்துக் கூட அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடத்துவதுண்டு. ஏராளமான திணைக்களங்களில் இவ்வாறான பகிஷ்கரிப்புகளை அடிக்கடி நாம் காண்பதுண்டு.

அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவதைப் பார்க்கிலும், அரசாங்கத்தைக் கண்டிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பர். அரசு மீது மக்களுக்கு வெறுப்பேற்றுவதுதான் அவர்களது எண்ணமாக இருக்கும். கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்பது அவர்களது நோக்கமல்ல என்பது புரிந்து விடும்.

தற்போது சம்பள உயர்வுக்கான கோரிக்ைகயை அரசாங்கத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் கையில் எடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோருகின்றன. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இன்றைய காலகட்டத்தில் இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவது நடைமுறைச்சாத்தியமானதா என்பதைப் பற்றியெல்லாம் தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

அரசாங்க ஊழியர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் போதுமென்றவாறே அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன. ஆனாலும் அரசாங்க ஊழியர்களின் கோரிக்ைககளை அரசாங்கம் அலட்சியப்படுத்தவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் புரிந்து கொள்வது அவசியம். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமென்ற தகவலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டெழுந்து வருகின்றது. பொருளாதார நெருக்கடி முழுமையாக சீரடைந்து விடுமென்ற நம்பிக்ைகயும் தோன்றியுள்ளது. இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் பிரச்சினை குறித்து மாத்திரம் அரசு கவனம் செலுத்த முடியாது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதென்பதை மறந்துவிட முடியாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT