Home » சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் 600 ஏக்கர் காணி

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் 600 ஏக்கர் காணி

- நிலைபேறான எதிர்காலத்திற்கான பாதையை வகுக்கும் இலங்கையின் பசுமைத் திட்டத்தை வெளியிட்டார் ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
November 3, 2023 1:34 pm 0 comment

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் தான் காலநிலை செழிப்புத் திட்டத்தை முன்வைத்திருந்ததாகவும், இவ்வருடத்துக்கான COP 28 மாநாட்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்து, நாங்கள் உருவாக்க முற்படும் பொருளாதாரம், போட்டித்தன்மை மிக்கதாகவும், டிஜிட்டல் மற்றும் வலுசக்தி, பசுமை துறைகளை மையப்படுத்தியதாகவும் அமைந்திருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து வரவு செலவு திட்டத்தின் பின்னர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி வழிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும், விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல், சுற்றுலா வர்த்தகத்தை விரிவுபடுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் ஊடாக அதனை சாதிக்க முடியும் என்பதோடு, அதற்கான சாத்தியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கை சிறிய நாடு என்பதால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

”இலங்கையில் பெரிய உலர் வலயம் ஒன்று உள்ளது. 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்டுள்ளோம். அதனால் நாம் தன்னிறைவான பசுமை வலுசக்தியை கொண்டுள்ளோம். அதனால் நாம் சூரிய சக்தி தொடர்பில் மாத்திரமின்றி காற்றின் சக்தி மற்றும் ஹைட்ரஜன் சக்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்காக திட்டங்களை வகுப்பதற்கான நிபுணத்துவத் தெரிவு, இலங்கையிடம் தற்போதைக்கு இல்லை. எனவே, அந்த நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு ஒரு புதிய திட்டத்தைத் தயாரிப்பதற்காக, பலதரப்பட்ட அபிவிருத்தி வங்கிகள் மற்றும் எமது இருதரப்பு பங்குதார்கள் பக்கமாக செல்கிறோம்.

நாம் இப்போது பசுமைப் பொருளாதாரத்திற்கு கடந்த வருடத்தில் தான் காலநிலை செழிப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான COP 28 மாநாட்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

2040 ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய உமிழ்வை அடைய முயற்சிக்கிறோம். அது கடினமான இலக்கல்ல. இருப்பினும் அதற்கு ஒரு தொகையை செலவிட வேண்டியிருக்கும். நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் திட்டத்தை மேற்கொள்ள 20 வருடங்களுக்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக தேவைப்படும்.

இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இந்த மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தை (ICCU) நிறுவு எதிர்பார்க்கிறோம். இந்த காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக அல்லாமல் சர்வதேச பங்குதாரர்களின் பல்கலைக்கழகமாகவும் செயற்படும். அதன் நிர்மாணப் பணிகளுக்காக கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்கனவே 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு நிதியளிக்கும் திறனை இலங்கை மேம்படுத்தி வருகிறது. காலநிலை நிதி குறித்த திறன் மற்றும் கலந்துரையாடல்கள் உலகின் சில பெரிய நாடுகளுக்கு மட்டுமே மட்டுப்பட்ட விடயமாக உள்ளது. அனைவருக்கும் அந்த திறன் இல்லை. நாம் பசுமை பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதால். மேற்படி நிதியளிப்புச் செயற்பாடுகளையும் ஊக்குவிக்கிறோம்.

அதற்கான உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான ஆலோசகர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய இக்குழு இலங்கைக்கு உள்ளான மாற்றங்கள் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் உலக அளவில் நடைபெறும் மாநாடுகளிலும் குறித்த குழுவே பங்கேற்கிறது. உலகின் தென் பகுதிகளில் காலநிலை தொடர்பிலான நிபுணத்துவ தெரிவு இல்லாமல் உள்ளது.

இந்த கலந்துரையாடல் COP28 மாநாட்டிற்கு முன்னோடியாக அமையும். COP28 என்பது உலகளாவிய மதிப்பீட்டை மேற்கொள்ளும் முக்கிய அமர்வாகும். இலங்கை நிச்சயமாக அதில் பங்கேற்கும் அதேநேரம் அதன் வெற்றிக்கான முக்கியமான பரிந்துரைகளையும் முன்மொழியும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமா சாகல ரத்நாயக்க,

”இந்த மாநாட்டின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றங்கள் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட ஆதரவிற்கும் நன்றி. இம்முறை நடைபெறவுள்ள COP28 மாநாட்டில் பங்கேற்கவுள்ள இலங்கை தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை வகிப்பார்” என்று தெரிவித்தார்.

உலக வங்கியின் சுற்றாடல் தொடர்பிலான உலகளாவிய பணிப்பாளர் வெலரி ஹிகீ (Valerie Hickey) இந்த மாநாட்டில் உரையாற்றினார்.

அமைச்சர்களான மகிந்த அமரவீர, கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அசூசா குபோடா, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் விவசாயம் தொடர்பிலான ஆசிய வலயத்தின் பிரதானி கலாநிதி பூர்வூ மெஹெதா, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT