Saturday, April 20, 2024
Home » இறையச்சத்தின் முக்கியத்துவம்

இறையச்சத்தின் முக்கியத்துவம்

by sachintha
November 3, 2023 6:49 am 0 comment

இறையச்சம் என்பது அல்லாஹ்வின் நினைவு நிறைந்ததும் வேறுபட்ட சிந்தனைகள் தோன்றாததுமான இதயமாகும். இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதா என்று எந்தச் செயலையும் ஆராய்ந்து அங்கீகரிக்கப்படாதவற்றை அடியோடு தவிர்த்து குர்ஆன் கூறும் வரம்பை மீறாது வாழ இறையச்சம் இன்றியமையாததாகும்.

ஒவ்வொரு நபியும் அவரவர் கால மக்களுக்கு இறையச்சத்தை வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு நிலையிலும் இறையச்சத்தோடு செயல்பட வழிகாட்டினார்கள். ஏக இறை கொள்கையை ஏற்காத மக்களிடம் அதனை எடுத்துரைத்து ‘நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்ச மாட்டீர்களா? என்று நூஹ் (அலை) அவர்கள் வினவியதை அல் குர்ஆனின் 26:106 ஆவது வசனம் எடுத்தியம்புகிறது.

தன்னைத் தானே இறைவன் என்று பிரகடனப்படுத்தி பேரழிவுப் பாதையில் ஆட்சி செய்த பிர்அவ்னிடம், சீரழியாமல் சிறப்பாக ஆட்சி புரிய அல்லாஹ் ஒருவனை வணங்கி அவனுக்கு அஞ்சி வாழ மூஸா (அலை) அவர்கள் அறிவுறுத்தியதை 26:16 முதல் 26 வரையான வசனங்கள் நினைவூட்டுகின்றன.

அந்த வகையில் இன்றைய கால கட்டத்திலும் நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய வழியை நடைமுறையில் கடைபிடிப்பது இறையச்சமாகும். இதனை, அல்குர்ஆனின் 24:52 ஆவது வசனம், “அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குத் தகுதியானவர்கள், தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

அல் குர்ஆன் இறைவேதம். இதில் எள்ளளவும் ஐயமில்லை. அச்சம் உடையவர்களுக்கு அல் குர்ஆன் நேரான வழியைக் காட்டுகிறது என்று எடுத்துரைக்கும் 2:1 மற்றும் 2 ஆவது வசனங்களின்படி குர்ஆன் கூறுவதைக் கொள்கையாகக் கொண்டு அதன் கருத்துகளைக் கவனமாக உள்ளத்தில் பதித்து உட்பொருளை உணர்ந்த உணர்ந்தவாறு உறுதியாக கடைபிடிப்பது இறையச்சம் உடையோரின் குணாம்சங்களாகும்.

இறையச்சம் உடையோராக விரும்புவோர் ஹலாலான அதாவது ஆகுமான வழியில் பொருள் ஈட்ட வேண்டும். 5:88 ஆவது வசனம் அல்லாஹ்விற்கு அஞ்சி ஹலாலான உணவு வகைகளை உண்ண வேண்டும். உடுத்தும் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு முதலியவை ஹலாலானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இறையச்சத்தின் மற்றொரு தன்மை நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதாகும். நிதானம், உண்மை, வாக்குறுதியைக் காப்பது, சொன்ன சொல்லை நிறைவேற்றுவது முதலியன நல்ல பழக்கவழக்கங்கள். அன்றாட வாழ்வில் இவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இவை ஆழ்மனத்து இறையச்சத்தின் அடையாளம். பெண்களிடம் கண்ணியமாக நடப்பது இறையச்சத்தின் நிறைவுகளில் நிலையானது. குழந்தைகளைப் பராமரித்து பண்போடு வளர்ப்பது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, அவர்களைக் கண்காணித்து கண்ணியமாய் வளர்ப்பது, அன்பளிப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக வழங்குவது என்பனவும் இறையச்சத்தின் வெளிப்பாடேயாகும்.

அல் குர்ஆனின் 5:8 ஆவது வசனப்படி, நீதி செலுத்துவதும் தூயதன்மை. அல்லாஹ்விற்கு அஞ்சினால் யாருக்கும் அநீதி இழைக்காமல் நீதி வழங்க முடியும். நேர்மை உண்மையின் உயரிய வெளிப்பாடு. இதனால் அனைவரின்அன்பையும் நற்சான்றையும் பெறலாம். நல்ல கௌரவம், கண்ணியம், மதிப்பு, மரியாதையை பெறலாம். பிணைப்பும் இணைப்பும் படர்ந்து விரியும். பிறர் இழைத்த இன்னல்களைப் பெருந்தன்மையோடு மன்னிப்பது இறையச்சம் என்பதை 2: 237 ஆவது வசனம் எடுத்துக்காட்டுகிறது. விட்டுக் கொடுப்பது இறை அச்சத்தோடு நெருக்கமானது. உங்களுக்குள் உதவி செய்து கொள்வதை மறக்கக்கூடாது என்றும் கூறுகிறது.

65: 4 ஆவது வசனம் அல்லாஹ்விற்கு அஞ்சுவோரின் செயல்களை அல்லாஹ் எளிதாக்குகிறான். இக்கட்டிலும் இறைவன் திக்கைக் காட்டுவான். சிக்கலையும் மிக்க எளிதாக்கி விடுவான். வளமான வாழ்விற்குரிய வாழ்வாதாரத்தை வழங்குவான்.

அல்லாஹ்வின் உதவி அருகிலேயே இருக்கிறது. 5:88 ஆவது வசனம், நீங்கள் நம்பும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இவ்வுலகின் எல்லையில்லா தொல்லைகளில் இருந்து விடுபட அல்லாஹ்விற்கு அஞ்சி ஏற்பன ஏற்று விடுப்பன விடுத்து வாழ்வதே சிறந்தது. இது மறுமை வாழ்விற்குத் தயாரிப்பும் ஆகும். இதனை, 2:197 ஆவது வசனம் முன் தயாரிப்பில் முக்கியமானது இறையச்சமே என்றுள்ளது.

அறிவாளிகளே அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்திடுங்கள் என்று நவில்கிறது. இக்கட்டளை ஹஜ் கடமையை குறித்ததாயினும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்க வேண்டிய கட்டளையாகும்.

எந்த நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியமையை திர்மிதீ, அஹமத் ஆகிய கிரந்தங்களில் காணலாம். என் உள்ளத்தில் இறை அச்சத்தை நிலைநிறுத்து என்று நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

அல்லாஹ்விடம் நேரான வழியையும் மாறாத அச்சத்தையும் நபி (ஸல்) அவர்கள் வேண்டியதைத் எடுத்துக்காட்டுகிறது.

இறையச்சத்துடன் இறைமறை கட்டளைகளைக் கடைபிடித்து நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியதை நடைமுறைப்படுத்தி தீயினும் கொடிய தீமையை விட்டு விலகி நாளும் நல்லன செய்து வல்ல அல்லாஹ்வின் அருளால் இம்மையிலும் மறுமையிலும் வளமான வாழ்வு பெற்றிடுவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT