Saturday, April 20, 2024
Home » சவூதி தலைமையில் 11 ஆம் திகதி அரபு லீக் நடத்தும் அவசர மாநாடு

சவூதி தலைமையில் 11 ஆம் திகதி அரபு லீக் நடத்தும் அவசர மாநாடு

by sachintha
November 3, 2023 8:14 am 0 comment

அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32 ஆவது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சிமாநாட்டை நடத்துமாறு பாலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையைப் பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார்.

கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அரபு லீக் உச்சிமாநாடு நடைபெற்றதைத் தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் ஒன்றிணைவது குறிப்பிடத்தக்கது. கெய்ரோவில் நடைபெற்ற இவ்வுச்சி மாநாட்டின் போது இஸ்ரேல்_-ஹமாஸ் மோதல் நிலைவரம் பரபரப்பான விவாதமாக இருந்தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன. ஜேர்மனி மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளுடன் ஐ.நா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெற இருப்பதன் காரணமாக ரியாத் நகரைச் சூழ பாதுகாப்பைப் பலப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மற்றும் காசா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாட மாநில வெளியுறவு அமைச்சர்களும் கூடுவுள்ளனர்.

மேலும், பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மற்றும் அவர்களது பிரச்சனைகளுக்கான தீர்வைக் காணும் வகையிலும் இராஜதந்திர முயற்சிகளை சவூதி மேற்கொண்டுள்ளதாக சவூதி அமைச்சரவை அறிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான தனது உரையாடல் பற்றி பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அமைச்சரவைக்கு விளக்குகையில், இந்த உரையாடலின் போது காஸாவின் நிலமை தொடர்பான சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்திக் கூறியதாகக் குறிப்பிட்டார்.

ஹமாஸுடனான அதன் தற்போதைய போரில், இஸ்ரேல் செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. அகதிகள் முகாமொன்றைத் தாக்கியதில் சுமார் ஐம்பது பொதுமக்கள் பலியாகியுள்ளனர். சவூதி வெளியுறவு அமைச்சு இத்தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன், அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் குறிவைப்பதை சவுதி அரேபியா வன்மையாக கண்டிக்கிறது என்றும் அறிவித்தது. 1,400 இஸ்ரேலியர்களும் 8,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் இதுவரை இப்போரில் பலியாகியுள்ளனர்.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், உடனடி போர்நிறுத்தத்தை கோருவதற்காக திங்கட்கிழமையன்று அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கும் இப்போருக்கான ஒரு முடிவைப் பெறும் முயற்சியாக இம்மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலித் ரிஸ்வான்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT