Wednesday, April 24, 2024
Home » காசாவில் இஸ்ரேல் தரைப்படையுடன் பலஸ்தீன போராளிகள் உக்கிர மோதல்

காசாவில் இஸ்ரேல் தரைப்படையுடன் பலஸ்தீன போராளிகள் உக்கிர மோதல்

-வான் தாக்குதல்களில் உயிரிழப்பு 9,000ஐ தாண்டியது

by sachintha
November 3, 2023 10:20 am 0 comment

எகிப்தின் ரபா எல்லை வழியாக இரண்டாவது நாளாக நேற்றும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேறியதோடு காசா மீது குறிப்பாக வடக்கு காசாவை இலக்கு வைத்து வான், பீரங்கி மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தது.

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையிலான தரைவழி மோதல்களும் அங்கு நீடிப்பதோடு கடந்த 48 மணி நேரத்தில் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று பெயித் ஹனூன், பெயித் லஹியா, ஜபலியா மற்றும் அல் கரம் பகுதிகளில் சரமாரி தாக்கதல்களை நடத்தியுள்ளது. காசாவின் தென் பகுதி மீதும் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல்களில் காசாவில் 256 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. 1,150 சிறுவர்கள் உட்பட 2,600 பேர் காணாமல்போயிருப்பதாக அல் ஷிபா மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 9,061 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,760 சிறுவர்கள் மற்றும் 2,326 பெண்கள் அடங்குகின்றனர்.

20,000க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் காசா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த பயங்கரத் தாக்குதல்களில் குறைந்தது 195 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அரசு தெரிவத்துள்ளது. இந்தத் தாக்குதலில் மொத்தம் 1000 பேர் வரை கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணாமல்போயிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அந்த அகதி முகாமில் உள்ள பல கட்டடங்கள் அழிக்கப்பட்டபோது அங்கு பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் மற்றும் பல போராளிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேலின் முறையற்ற தாக்குதல்கள் போர்க் குற்றமாக இருக்கக் கூடும் என்று தீவிரமாக அக்கறைகொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் இருக்கும் துருக்கி–பலஸ்தீன நட்புறவு மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் வீசிய பீரங்கி குண்டுகள் விழுந்தன. எனினும் கடுமையான வான் தாக்குதல்கள் காரணமாக இந்த மருத்துவனையின் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையே காசாவில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக உள்ளது. எனினும் அங்கு எரிபொருள் முழுமையாக தீர்ந்துள்ளது.

மறுபுறம் காசாவில் ஷட்டி அகதி முகாமில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணிகளுக்கான நிறுவனத்தின் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பாடசாலையில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்த பாடசாலைக்கு அருகில் முன்னதாக நடத்திய வான் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் இருக்கும் இந்தோனேசிய மருத்துமனையின் மின் பிறப்பாக்கி எரிபொருள் இல்லாததால் நேற்று செயலிழந்துள்ளது. மருத்துமனை தற்போது சிறிய மாற்று மின் பிறப்பாக்கியால் இயங்கி வருவதாகவும் பெரும்பாலான அறைகளின் விளக்குகள் அணைந்து, ஒட்சிசன் ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டு பிரேத அறையின் குளிரூட்டிகளும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசாவில் இருந்து நேற்று மேலும் 596 வெளிநாட்டவர்கள் மற்றும் இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் ரபா எல்லைக்கடவை வழியாக வெளியேறியுள்ளனர். இவர்களில் 17 இலங்கையர்களும் அடங்குகின்றனர். மேலும் காயமடைந்த பலஸ்தீனர்கள் பலரும் அங்கிருந்து வெளியேற நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காசா எல்லையை கடப்பதற்காக காத்திருக்கும் அமெரிக்கக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் மருத்துவரான பாத்தி அபூ அல் ஹசன், நீர், உணவு அல்லது தங்குமிடங்கள் இன்றி காசாவின் நிலைமை குறித்து விபரித்திருந்தார்.

“நாம் இறந்தவர்கள் முன்பே கண்களை திறக்கிறோம் இறந்தவர்கள் முன்பே கண்களை மூடுகிறோம்” என்றார்.

இஸ்ரேலிய துருப்புகளுக்கு கடும் சவால்

இதேவேளை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் துருப்புகள் நேற்று காசா நகரை நோக்கி முன்னேறியது. எனினும் தொடர்ந்து ஹமாஸ் போராளிகளுடன் உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி மறைந்திருந்து தாக்குவது மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்துவது என்று பலஸ்தீன போராளிகள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போர் வடக்கு காசாவில்் பிரதான சனநெரிசல் மிக்க பகுதியை நெருங்கியுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது.

“நாம் காசா நகர வாயிலில் இருக்கிறோம்” என்று இஸ்ரேலிய இராணுவ கொமாண்டர் பிரகேடியர் ஜெனரல் இடட்சிக் கொஹன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் சுரங்கப் பாதைகளில் இருந்து வந்து இஸ்ரேலிய டாங்கிகளை தாக்கிவிட்டு மறைந்து செல்கின்றனர் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்புகள் வெளியிட்ட வீடியோக்களில் இராணுவத்தை விட கெரில்லா பாணியிலான போர் நடவடிக்கை சக்தி மிக்கது என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

“அவர்கள் காசா மீது குண்டு வீசுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. வீடுகள் அதிர்வது ஒருபோதும் நிற்கவில்லை” என்று அங்கு இருக்கும் ஒருவர் குறிப்பிட்டார். “எனினும் இஸ்ரேல் படையினர் நகருக்கு வெளியில் இருப்பதை நாம் கண்டோம். அதாவது எதிர்ப்பு அவர்கள் எதிர்பார்ப்பதை விடவும் கடினமாக இருக்கிறது என்பதை இதன்மூலம் பரிந்துகொள்ள முடிகிறது” என்று பெயரை வெளியிட விரும்பாத அந்த காசா வாசி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இஸ்ரேலியத் துருப்புகள் நகர் புற போர் ஒன்றில் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அவர்கள் காசா முழுவதும் படைகளை அனுப்புவதற்கு பதில் முழு படைகளையும் வடக்கில் குவித்து முழு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதாபிமான போர் நிறுத்தம்

இதேவேளை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும்போது கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறினார்.

“ஒரு தற்காலிக சண்டை நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். சண்டையை நிறுத்துவது என்றால், பணயக் கைதிகளை காப்பாற்ற நேரம் கொடுங்கள் என்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மனிதாபிமான உதவி, ஹமாஸ் பிடியில் உள்ள 240 பணயக் கைதிகளையே ஜோ பைடன் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் “இப்போது போர் நிறுத்தம்” என்று பாடிய பெண்ணை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்னர் பேசிய பைடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு தற்போதைய நிலைமை “நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது” என்று கூறினார்.

“நான் இரு தனி நாடுகள் தீர்வை ஆதரித்தேன்் ஆரம்பத்தில் இருந்தே அதுதான் என் நிலைப்பாடு” என்று பைடன் மேலும் கூறினார். “உண்மை என்னவென்றால், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு வெளிப்படையான பயங்கரவாத அமைப்பு” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றபோதும் காசாவில் தொடரும் உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதனையொட்டி உலகெங்கும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சம் அதிகரித்திருக்கும் சூழலில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. அங்கு நேற்றும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் போர் வெடித்த 27 நாட்களில் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 14 வயது சிறுவன் மற்றும் 19 வயது ஆடவர் ஒருவரே நேற்று கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தவிர இந்த வார ஆரம்பத்தில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 14 வயது சிறுவன் ஒருவனும் நேற்று உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி மேற்குக் கரையில் மாதாந்தம் கொல்லப்படும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் வரையிலான உயிரிழப்புகளுடன் இந்த ஆண்டில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீனர் எண்ணிக்கை 343 ஆக உயர்ந்துள்ளது.

லெபனான் எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனானின் உள்ளூர் மாநகர சபை தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் நேற்றுக் காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி ஹமாஸ் அமைப்புக்கு தமது ஆதரவை வெளியிட்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதலை நடத்தியதை அடுத்து ஆரம்பமான இந்த மோதலில் இதுவரை லெபனான் தரப்பில் ஏழு பொதுமக்கள் மற்றும் குறைந்து 58 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் சிரியாவில் ஈரான் ஆதரவுப் போராளிகளுடனும் இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டு வருவதோடு யெமனில் ஈரான் அதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது ஆளில்லா வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT