Tuesday, April 16, 2024
Home » 9 மாகாணங்களின் சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு ரூ. 9 பில்லியன் ஒதுக்கப்படும்

9 மாகாணங்களின் சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு ரூ. 9 பில்லியன் ஒதுக்கப்படும்

- நிரந்தரமற்ற 8,400 உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 8:12 pm 0 comment

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

“GIS”மற்றும் “GPS Mapping” ஆகியவை ஊடாக அனைத்து உள்ளூராட்சி சபை வீதிகளும் பட்டியிலிடப்பட்டு ஒழுங்கமைக்கப்படும்.

வடமேற்கு மாகாணத்தில் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அந்த முறையில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணியை ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், வட மத்திய மற்றும் வட மாகாணங்கள் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி முடித்துள்ளன. 31.12.2023 க்கு முன்னர் அந்த இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய 06 மாகாணங்களுக்கான காலவரையறை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதார துறைக்கு 4,500 மில்லியன் வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் அந்தந்த மாகாணங்களின் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அந்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேலும் 4,500 மில்லியனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம் 06 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8,400 ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அவர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அவர்கள் சுமார் 15 வருடங்களாக சேவையில் இருப்பவர்கள். மாகாண சபைகளில் 10,000 பணியாளர்களின் வெற்றிடங்கள் இருந்தன.

மேலும், ஒன்லைன் முறையில் கொடுப்பனவுகளை செலுத்துதல், அபராதம் செலுத்துதல், இடமாற்றம் செய்தல் தொடர்பாக அடுத்த 02 வாரங்களில் மென்பொருள் தயாரித்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல் கட்டத்தின் கீழ், மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஓன்லைன் முறை மூலம் பணம் செலுத்துவது 30.11.2023 ஆம் திகதிக்குள் தொடங்கப்பட உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT