Friday, March 29, 2024
Home » காடாக இருந்த ஊரை வளமான நாடாக்கிய பெருமை பெருந்தோட்ட மக்களையே சாரும்

காடாக இருந்த ஊரை வளமான நாடாக்கிய பெருமை பெருந்தோட்ட மக்களையே சாரும்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 1:04 pm 0 comment

காடாக இருந்த ஊரை வளமான நாடாக்கிய பெருமை பெருந்தோட்ட மக்களையே சாரும்காடாக இருந்த ஊரை வளமான நாடாக்கிய பெருமை பெருந்தோட்ட மக்களையே சாரும்

காலனித்துவ ஆட்சியில் எங்களுடைய மக்களின் உழைப்பு சூறையாடப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டன. 1948 இல் குடியுரிமை பறிக்கப்பட்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஒருபகுதியினர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் 70 ஜே.வி.பி கலவரம், 80, 83 இனக்கலவரம், உள்நாட்டு யுத்தம் என பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் பல சவால்களை தாண்டி இன்றைக்கு உயர் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனை அங்கீகரிக்கும் முகமாகவே இவ்வருடம் மலையகம் ‘200 நிகழ்வு’ அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அரசியல், கட்சி, இன, மத,மொழி, பிரதேச பாகுபாடு இன்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற தேசிய நீரோட்டத்தில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்கின்றார் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி.

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி : நாம் 200 என்பது என்ன?

பதில் : நாம் 200 என்பது மலையக மக்களுக்கு மகத்தான ஆண்டாகும். எங்களது மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகின்றன. இந்த நாட்டின் பொருளாதாரத்திலும், அபிவிருத்தியிலும் எங்கள் மக்களின் உழைப்பு இன்றியமையாதது. 1823ஆம் ஆண்டளவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இந்தியாவின் தென்பகுதியிலிருந்து பெருந்தொகையான மக்கள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் நிமித்தம் இங்கு வந்தனர். காடாகவிருந்த ஊரை சிறந்த நாடாக்கிய பெருமை எங்களது சமூகத்தினையே சாரும். இந்த நாட்டில் தற்போது பாவனையிலுள்ள ரயில் பாதையாக இருக்கட்டும். பிரதான பாதையாக இருக்கட்டும், கோப்பி, தேயிலை, இறப்பர், வாசனைத் திரவியமாக இருக்கட்டும். இவை அனைத்தையும் நாங்களே பயிர்செய்து வளமிக்க நாடாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்துள்ளோம்.

எனினும் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கின்ற உரிமைகள் எங்களுக்கு கிடைத்துள்ளதா? எனப் பார்த்தால் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் எங்களது உழைப்புக்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. எங்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்களது மூதாதையர்கள் பல பிரச்சினைகளை சவால்களை எதிர்கொண்டனர். இன்று இவற்றையெல்லாம் தாண்டி இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சமூகங்கள் போன்று சரிநிகராக வாழும் நிலைமைக்கு வந்துள்ளோம். எங்களுடைய மக்களின் உழைப்பும், போராட்டமும், சிந்திய வேர்வையுமே இவற்றுக்கு காரணம். அதுமட்டுமின்றி எங்களை வழிநடாத்திய அரசியல் தலைமைத்துவமும் முதன்மைக் காரணமாகும்.

1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தாலும் எங்களுடைய மக்களின் பிரஜாவுரிமை அக்காலப்பகுதியில் பறிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1948 இல் இருந்து 2002ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நாங்கள் இலங்கையர் என்ற அங்கீகாரத்தை பெற போராடினோம். 1948 இல் எங்களது குடியுரிமை பறிக்கப்பட்டு 1960 களில் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 50 வீதமானவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் 70 ஜே.வி.பி கலவரம், 80, 83 ஆம் ஆண்டுகளில் இனக்கலவரம் என பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 90 களில் உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் பெருந்தோட்ட அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டன. இவ்வாறு பல சவால்களை தாண்டி இன்றைக்கு உயர் நிலைமைக்கு வந்துள்ளோம். அதனை அங்கீகரிக்கும் முகமாகவே இவ்வருடம் ‘மலையகம் 200’ நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ளது. ‘நாம் 200’ என்ற இந்த தேசிய நிகழ்வு நவம்பர் 2 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும் இலங்கை – இந்திய உறவை பலப்படுத்தும் முகமாக இந்தியாவின் நீதியமைச்சர் கௌரவ நிர்மலா சீத்தாராமனும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வு வெறுமனே கலை, கலாசார நிகழ்வு மட்டுமல்லாமல் எங்களுடைய மக்களின் உரிமை, அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5000ற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் அரசியல், கட்சி, இன, மத, மொழி, பிரதேச வேறுபாட்டுக்கு அப்பால் அனைவருமே இலங்கையர்கள் என்ற தேசிய நீரோட்டத்தில் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கேள்வி : இந்நிகழ்ச்சி மூலம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

பதில்: எங்களது நில உரிமை, தனிவீடு, கல்வி, சுகாதாரம், சுயதொழில், பொருளாதாரம், அடிப்படை வசதிகள், பிரதேச அபிவிருத்தி போன்ற பல முக்கிய விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து அங்கீகாரத்தை பெறுதல் மற்றும் எங்களது கலை, கலாசார நிகழ்வுகளும் இந்நிகழ்வில் அரங்கேற்றப்படும்.

கேள்வி : கடந்த காலத்தில் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். இதன் தற்போதைய நிலைமை என்ன?

பதில்: இத்திட்டத்தில் இதுவரை 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான உள்ளக அடிப்படை வசதிகளான பாதைவசதி, மின்சாரம்,

குடிநீர், மலசலகூட வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மிகுதியாகவுள்ள 6 ஆயிரம் வீடுகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் ஒரு வீடு நிர்மாணிப்பதற்கு 28 இலட்சம் ரூபா வரை தேவைப்படுகின்றது. அத்துடன் நீர்விநியோகமும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

கேள்வி : மலையக மக்களுக்கு இதுவரை சொந்தமாக காணி நிலங்கள் வழங்கப்படவில்லையே?

பதில் : மலையகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 பேர்ச் காணி வழங்குவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெருந்தோட்ட அமைச்சுடன் இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளோம். அதேநேரம் இந்திய அரசினால் பல உதவித்திட்டங்களும் கிடைக்கப்பெறவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் எங்களது கட்சி உயர் பீட உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

மலையகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 பேர்ச் காணி வழங்குவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். பெருந்தோட்ட அமைச்சுடன் இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளோம். அதேநேரம் இந்திய அரசினால் பல உதவித்திட்டங்களும் கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT