Thursday, April 25, 2024
Home » தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டே மரணம்; நீதிமன்றம் அறிவிப்பு

தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டே மரணம்; நீதிமன்றம் அறிவிப்பு

- குற்றவாளிகளை கைது செய்து ஆஜர்படுத்த CID இற்கு உத்தரவு

by Rizwan Segu Mohideen
November 1, 2023 5:06 pm 0 comment

– உடலை மீண்டும் அடக்க உரிய வசதிகளை வழங்குமாறும் பணிப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணமானது ஒரு கொலை என, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நிபுணர்களின் ஆய்வு உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய, இங்கு ஒரு குற்றம் இடம்பெற்றுள்ளதாக அறிவித்தார்.

அதற்கமைய, இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் முத்திரையிடப்பட்ட அறிக்கை, நேற்றையதினம் நீதிமன்றத்திற்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில், நீதவான் இன்றையதினம் (01) குறித்த முடிவை அறிவித்தார்.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கைகளுக்கமைய, ஷாப்டரின் மரணம் கழுத்துப் பகுதி மற்றும் முகத்தில் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்தது.

இதேவேளை, தற்போது கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை எதிர்வரும் 04ஆம் திகதி ஜாவத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சடலத்தை உரிய மயானத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்யும் வரை தேவையான வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொரளை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மரணத்திற்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் வைத்தியர் அசேல மெண்டிஸ் உள்ளிட்ட இரு வைத்தியர்களை உடல் அடக்கப்படும் இடத்தில் இருக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை வெளியிடுவதற்கு முன்னர், வாதி தரப்பினருக்கு அவர்கள் சார்பான விடயங்களை முன்வைக்க அவகாசம் வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், நீதவான் அவ்வேண்டுகோளை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி பொரளை கனத்தையில், அவரது காரின் சாரதி இருக்கையுடன் கழுத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT